‘ஞாயிறு’ நக்கீரன்
இன்றைய நாட்களில் பொது நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, திருமண விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வதென்றால் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சியை வழி நடத்துகிறவர்களும் ஒலி வாங்கிக்கு முன் நின்று முழங்குபவர்களும் வித்தைக் காட்டும் கழைகூத்தாடி தன்வசப்பட்ட குரங்கை இப்படியும் அப்படியும் தாவச் சொல்வதைப் போல, நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களை நிம்மதியாக விடாமல் ‘கைத்தட்டுங்கள்’, ‘கைத்தட்டுங்கள்’ என்று மூச்சுக்கு மூச்சு கேட்டுக் கேட்டு கைத்தட்டலைப் பெறும் தொல்லை தாங்க முடியவில்லை.
பொதுவாக தமிழர்கள், பெருமைக்கும் மரியாதைக்கும் அலைமோதுபவர்கள். அண்மைக் காலமாக, சமுதாயத்தில் ஏராளமான தலைமைத்துவ பயிற்சியை நடத்தி விட்டதாலோ என்னவோ, மலேசிய இந்திய சமுதாயத்தில் அனைவரும் தலைவராகத்தான் இருக்க விரும்புகின்றனர். அதனால்தான் வகைதொகை யின்றி அமைப்புகள் உருவாகி, ஏராளமான தலைவர்கள் நம்மிடையே உலா வருகின்றனர். இதனால், ‘அனைத்துலக தமிழ் நிகழ்ச்சி அறிவிப்பாளர் சங்கம்’, ‘அனைத்துலக இறை வணக்கம் பாடுவோர் அமைப்பு’, ‘அனைத்துலக தமிழ் நிகழ்ச்சிக்கு வருவோர் இயக்கம்’ என்றெல்லாம் புதுபுது அமைப்புகள் தோன்றி இன்னும் ஏராளமான தலைவர்கள் நம்மிடையேத் தோன்றக்கூடும். இப்பொழுதெல்லாம் வட்டார, உள்நாட்டு அமைப்பெல்லாம் உருவாவதில்லை; எல்லாமே பன்னாட்டு அமைப்புகள்தான். இதற்கெல்லாம் ஒரே வழி, இனி வரும் நாட்களில் தலைமைத்துவ பயிற்சிக்குப் பதிலாக ‘தொண்டத்துவப் பயிற்சி’ நடத்த வேண்டும் போலும்!
இப்படிப்பட்ட சமுதாயத்தில், மேடை காணும் அத்தனை பேரும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘நிகழ்ச்சிக்கு வந்து வசமாக சிக்கிக் கொண்டீர்களா’ என்று எண்ணிக் கொள்வர் போலும்; தட்டுங்கள் கையை என்று கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்த வண்ணமாக இருக்கின்றனர்.
இப்படித்தான் கடந்த புதன் கிழமை(செப்டம்பர் 27) அ. கந்தன் என்பாரின் நூல் வெளியீட்டு விழாவை நேதாஜி மண்டபத்தில் வழிநடத்திய விஜயராணி, ‘போதும்’ என்ற அளவிற்கு கைத்தட்டலை கேட்டுக் கேட்டு நிறைய வாங்கிவிட்டார். சிறப்புரை ஆற்றிய பெ.இராஜேந்திரன், “ஒரு கருத்தைச் சொல்ல வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. நூலாசிரியரைப் பற்றி பெருமையாக சொன்னால் கைத்தட்டி பாராட்டாமல் உட்கார்ந்திருக்கலாமா” என்றவாறு பேசினார்.
ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் சென்று, அங்கு பேசப்படும் கருத்துகளைக் கேட்டு இன்புற்று வரலாமே என்று திறந்த மனதோடும் தீட்டிய செவியோடும் காத்திருந்தால், பேசுகிறவர்கள் பேசிவிட்டு அந்த மட்டில் செல்வதை விட்டுவிட்டு, கைத்தட்டுங்கள் கைத்தட்டுங்கள் என்று கூப்பாடு போடுவதேன்?
எதற்காக கைத் தட்ட வேண்டும்? ஏன் கை தட்ட வேண்டும்?
மேடையில் ஆற்றப்படும் உரை இனிமையாக இருந்தாலோ, பொருள் பொதிந்ததாக இருந்தாலோ அல்லது புதுமையாக இருந்தாலோ நிச்சமாக அரங்கத்தில் குழுமியுள்ளோர் கையொலி எழுப்புவர்; அதைப்போல, ஒரு நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இடம்பெற்றால், அதற்கும் கரவொலி எழுப்ப பார்வையாளர்கள் தவறுவதில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக இப்படி கைத்தட்டலுக்கு கெஞ்ச வேண்டும்?
இப்படித்தான் திருமண விருந்து நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது; திருமணத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்கள் விருந்திற்கு வந்து, சற்று நேரம் அமர்ந்து, பின் உணவுண்டு தொடர்ந்து அன்பளிப்பு செய்து விட்டு செல்லலாம் என்றால், சம்பந்தப்பட்ட அரங்கின் மேடையில் புது மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க, அங்கு கலை நிகழ்ச்சி படைப்பவர் தன்னுடைய வேலையை செவ்வனே செய்யாமல் பெண்ணும் மாப்பிளையும் மெச்சுவதற்காக ‘கைத்தட்டுகங்கள்’, ‘கைத்தட்டுகங்கள்’ என்று அலறிக் கொண்டிருப்பார்; நிம்மதியாக சாப்பிட விடவே மாட்டார்.
இதுவெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்!
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நினைவில் வாழும் ஆச்சி மனோரமாவை அழைத்து வந்து கலைஞர் கரு.கார்த்திக் ஒரு நிகழ்ச்சி படைத்தார். அந்த நிகழ்ச்சியை கண்ணியமான கலைஞரும் தங்கக் குரலோனுமாகிய தங்கமணி தான் வழிநடத்தினார். ஆனால், அவர் ஒரு முறைகூட நிகழ்ச்சிக்கு வந்த கலை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பார்த்து கைத்தட்டுங்கள் என்று கேட்க வில்லை. அப்படி இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், நிகழ்ச்சி தொடங்கியது முதல் நிறைவு வரை 55 முறை கைத்தட்டினர். ‘முணுக்’கென்றால் போதும்; உடனே கைத்தட்டுவதில் கைதேர்ந்தவர்கள் தமிழர்கள். உண்மை நிலை இவ்வாறிருக்க, கைத்தட்டலுக்காக ஏன் இப்படி கையேந்த வேண்டும்?
தானாக கைத்தட்டுவதுதான் கண்ணியம்!! கேட்டு வாங்கும் கைத்தட்டு கண்ணியக் குறைவானது!!
கை தட்டுவது ! காலில் விழுவது ! விசில் அடிப்பது ! கூத்தடிப்பது ! கும்மாளம் அடிப்பது ! இதெல்லாம் எங்கள் தமிழனின் ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று ! இப்போதெல்லாம் கல்யாணங்களுக்கு போகவே பயமாக இருக்கிறது ! பொண்ணும் மாப்பிள்ளையும் கூத்தடிப்பதை பார்க்கவே அறு வெறுப்பாக இருக்கிறது ! பல திருமணங்களில் சாப்பிடாமல் மொய் மட்டும் கொடுத்து விட்டு தப்பி வந்துவிடுகிறோம் !! இனி வரும் காலங்களில் திருமணத்தில் பெரியவர்கள் இருக்க மாட்டார்கள் ! பொண்ணு மாப்பிள்ளையின் நண்பர்கள் கும்மாளம் அடிக்கும் விழாவாகவும் ! பாதி முதலிரவு நடத்தும் இடமாகவும் திருமணங்கள் மாரி விடும் சாத்தியம் உண்டு ! ஒரு ரகசியம் கேள்வி பட்டேன் ! தலைவர்களும் தங்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது வெறும் கையாய் வராதே மாலையோடு வா ! என்று தொண்டர்களுக்கு உத்தரவு இடுவதாக கேள்வி ! காதில் விழுந்தால் சொல்லுங்கள் ! தலைவர்களின் கண்டிப்புக்கு ஆளாகாமல் இருக்கலாம் இல்லையா !!
(கை தட்டுவது ! காலில் விழுவது ! விசில் அடிப்பது ! கூத்தடிப்பது ! கும்மாளம் அடிப்பது ! இதெல்லாம் எங்கள் தமிழனின் ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று) ஏன் உங்கள் தெலுங்கன் யாரும் காலி விழுவது விசில் அடிப்பது ! கூத்தடிப்பது ! கும்மாளம் அடிப்பது இல்லையா? அவ்வளவு யோக்யர்களா உங்கள் தெலுங்கன்கள்?
S.Maniam அவர்களே நீங்கள் சொல்வதை முற்றிலும் நான் ஆமோதிக்கிறேன் …..
1. இப்போதெல்லாம் இது போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வது பெரும்பாலும் குறந்து விட்டது. அவனவனுக்கும் ஆயிரெத்தெட்டு வேலைகள். எனவே, கெஞ்சிக் கூத்தாடி ஆட்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அப்படி கொண்டுவருபவர்களும் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களா என்றால் அது தான் இல்லை.வருவோரில் 70% க்கு மேற்பட்டோரின் கண்கள் அவர்களின் கைப்பேசியைத்தான் மேய்ந்து கொண்டிருக்கும். 2. அரசியல் கூட்டங்களிலும் சரி, கூத்தாடிக் கூட்டங்களிலும் சரி, இது போன்ற ;இலக்கிய’ கூட்டங்களிலும் சரி – நிகழ்ச்சியை ‘வலி’நடத்தும் அறிவிப்பாளர்களும் ‘மேடை’ப் பேச்சாளர்களும் தங்களின் பேச்சுக்களுக்கு இடையே அவ்வப்போது இடைவெளிவிட்டு விட்டு கூட்டத்தினரை இந்தக் கோணத்திலிருந்தும் அந்தக் கோணத்திலிருந்தும் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கும் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும் பார்வையை ஓடவிடுவார். இது எதற்காக தெரியுமா? ;நான்’ நல்ல கருத்தைச் சொல்லிவிட்டேன். கை தட்டுங்கள் என்ற சைகை தான் இது. இப்படி அவர் விடும் ஒவ்வொரு இடைவெளியிலும் கைதட்ட வேண்டிதான் அந்த கூட்டம் வந்திருக்கிறது. 3. அண்மையில் ஒரு திருமண இரவு விருந்துக்கு சென்றிருந்தேன். விருந்து இரவு 7.30-க்கு ஆரம்பித்திருக்க வேண்டும். (சரி சரி…நாம் தான் ‘குறிப்பிட்ட’ நேரத்தில் எதையும் செய்வதில்லையே…) அந்த திருமண விருந்து வரவேற்பை நடத்திக்கொண்டிருந்தவர் தன்னை வி.ஜே என்றோ டிஜே என்றோ அறிமுகப்படுத்திக் கொண்டார். (அது எந்த வெங்காயமோ அல்லது பெருங்காயமோ…இருந்து விட்டுப் போகட்டும். அந்த வெங்காயம் போட்டான் பாருங்க ரம்பம்…சரியான மொக்கை.) பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தார்கள் 9.15-க்கு. வேளா வேளைக்கு சாப்பிட வேண்டிய இளம் சிறியவர்களும் மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய முதியவர்களும் கூட வந்திருந்தார்கள் விருந்துக்கு (ஆனால் இப்படி உணவு பரிமாறும் நேரம் தள்ளி போவது சரியா? ) பொண்ணும் மாப்பிள்ளையும் வந்ததும் அர்களிடம் பத்து நிமிடம் ரம்பம் போட்டான் அந்த வெங்காய ஜே…அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லையே பாவி…பொண்ணு வீட்டுப் பக்கம் வந்தரகள் கயைத்தூக்கூங்க..இப்போ மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் வந்தவங்க கையத் தூக்குங்க…(பிறகு) பொண்ணு வீட்டுப்பக்கம் வந்தவங்க கை தட்டுங்க…மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் வந்தவங்க கை தட்டுங்க..மொய் கொடுக்க வந்தவங்க கையத் தூக்குங்க…இப்போ பரிசுப்பொருள் கொடுக்க வந்தவங்க கையத் தூக்குங்க. இப்படியே பண்ணிக் கொண்டிருந்தான் அந்த பன்னி..இந்த லட்சணத்தில் தன்னைப் பற்றி அவ்வப்பொது துதிப் பாடிக்கொண்டிருந்தான் அந்த ஜே…இது அவனுக்கு 305-வது திருமண விருந்தாம்….எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. டேய் லூசு அறுத்தது போதும் சாப்பிட விடுங்கடா என்று கத்தினேன். ஒருவழியாக 9.45-க்கு சாப்பிட விட்டான். சாப்பிட இடத்திலும் அவ்வளவு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசை. சாப்பிட்டு விட்டு மொய் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகமாக நடத்தினால்…நடந்துகொண்டால் என்ன…பிச்சை எடுப்போர் கூட இப்படி நீண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் கால்கடுக்க நிற்கமாட்டார்கள்…இப்படி நீண்ண்ண்ண்ட வரிசையில் நின்று சாப்பாடு எடுக்கும் போது கூட நமக்கு நாகரிகம் இல்லை. (தாறுமாறாக அள்ளிப் போட்டு சாப்பிட்டு முடிக்கமுடியாமல் குப்பையில் போடுவது வேறு.விஷயம்). ஆனால் சாப்பாடு எடுப்போரைப் பார்க்கும் போது நமக்கு பொத்துக்கொண்டு வரும் பாருங்க கோபம். முதலில் கொஞ்சம் சோறு போடுவார்கள். திரும்ப கொஞ்சம் சோறு. தீடீரென மனசு மாறி போட்ட சோற்றில் கொஞ்சம் திரும்ப பானையிலேயே போடுவார்கள். ஆனால் மறுபடியும் கொஞ்சம் சோறு போடுவார்கள். திரும்பவும் கொஞ்சாம் போடுவார்கள்.ஒருமுறை எனக்கு முன் நின்றிருந்த பெண்மணி ஒருவர் முதலில் சோறு போடுவதும் பிறகு குறைப்பதும் பிறகு திரும்ப போடுவதுமாக மொத்தம் ஆறு முறை செய்தார். பிறகுதான் குழம்பு…காய்கறி…கோழி பெரிய துண்டு சின்ன துண்டு எல்லாம்…. இப்படியெல்லாம் கல்யாணம் என்கிற பெயரில் நம்மை தொந்தரவு செய்ய சொல்லிக் கொடுத்தது யார்? வீட்டில் கல்யாணம் பண்ணுவதுதான் முறை. சைவ உணவு பரிமாறுவது தான் வழக்கம். ஆனால் வீட்டிம் வசதி போதாது என்று கோயிலில் கல்யாணம் வைத்தோம். பிறகு அசைவம் கேட்போரை திருப்திப் படுத்த கோயிலை விட்டு மண்டபத்தில் கல்யாணம் வைத்தோம். இந்நிலை மேலும் மாறி சொகுசு மண்டபம் தேடி போனோம். இன்று பலர் தன்களின் (பலர் கடன் வாங்கிய) பண பலத்தைக் காட்ட ஓட்டலில் திருமணம்…விருந்து என்று முன்னேறிவிட்டோம்…கேவலமான இந்த முன்னேற்றம் தேவையா? நமது பாரம்பரியம் பண்பாடு வீட்டில் அல்லது கோயிலில் திருமணம் நடத்த வேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் இதை விட்டுவிட்டு ஓட்டலில் திருமணம் நடத்தும் அளவுக்கு முன்னேறிவிட்ட பிறகு கல்யானம் எனும் சடங்கை மட்டும் ஏன் சம்பிரதாயத்துக்காகக் கட்டி அழ வேண்டும்?