‘ஞாயிறு’ நக்கீரன்.
நாடு விடுதலை அடைந்து மணிவிழாவைக் கடந்த பின்னும் நாட்டு மக்களை தொட்டதெற்கெல்லாம் கையேந்த வைப்பதில் நாட்டுத் தலைவர்கள் மனம் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. உலக வரலாற்றில் ஒரேக் கூட்டணி தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டை அரசாட்சி புரிகிறதென்றால், கீழ்திசை நாடுகளைப் பொறுத்தமட்டில் அது மலேசியாவாகத்தான் இருக்கும்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய மலேசியாவை ஆளும் அரசியல் அணி, தேசிய முன்னணியாகும். ஆனால், இந்த தேசிய முன்னணியின் தலைவர்களும் இவர்களிடம் மானியம் பெற்றுக் கொண்டு இவர்களுக்காக ‘பல்லக்கு தூக்கும்’ அரசு சாரா அமைப்பினரும் ஒன்று சேர்ந்து கொஞ்சம்கூட சளைக்காமல் பொதுமக்களை காலமெல்லாம் கையேந்த வைக்கின்றனர்.
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் பண்டிகையும் சேர்ந்து கொண்டதால், பொது மக்களை ஒன்று திரட்டி அவர்களை வரிசைப் படுத்தி உணவுக்கும் பண்டகப் பொருட்களுக்கும் கையேந்த வைக்கின்றனர். மனதை நெருடச் செய்யும் இந்தக் காட்சிகளை நாடு முழுவதும் காணமுடிகிறது.
ஈதலும் இரத்தலும் அன்று தொட்டு இன்றுவரை உலகெங்கும் உள்ளதுதான். இதில் புதுமையும் இல்லை; சிறுமையும் இல்லை என்பதும் உண்மைதான். அதனால்தான், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே இயற்றப்பெற்ற திருக்குறளில்கூட ஈதலைப் பற்றி செம்மாந்த நிலையில் சொல்லியுள்ளார் நம் அறிவாசான் திருவள்ளுவனார்.
அறத்துப்பாலில் இல்லறவியலில் இடம்பெற்றுள்ள 23-ஆவது அதிகாரத்தில் உள்ள பத்து பாக்களும் ஈதலைப் பற்றிதான் இயம்புகின்றன. சமூகத்தில் நலிந்த மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். வாழ்க்கைப் பயணத்தில் நலிந்தோரும் எளியோரும் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்க நேரிடுவதால், அவர்களை அரவணைப்பதும் ஆதரிப்பதும் வலியோருக்கும் பொருள் படைத்தோருக்கும் இலக்கணம் என்பது வள்ளுவர் வாக்கு.
பொதுவாக, ‘ஈதலும் இசைபட வாழ்தலும்’ என்பதன் அடிப்படைக்கூறே ஈகைப் பண்பில்தான் அடங்கியுள்ளது. மொத்தத்தில் சமூக நல்லிணக்கத்திற்கும் சகோதர மனப்பாங்கிற்கும் அடித்தளமே கைம்மாறு கருதாமல் கொடையளிக்கும் ஈகைப் பண்புதான். ஈகைக் குணத்தை தனி மனிதர் அனைவரும் கைக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டையும் மக்களையும் ஆளும் தலைவர்களுக்கோ இத்தகைய ஈகைக் குணம் இன்னும் பல மடங்காக இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் மட்டும் சொல்லவில்லை;
சங்க இலக்கியம் கண்ட ஆன்றோர், சான்றோர் அத்தனைப் பேருமே அப்படித்தான் சொல்லியுள்ளனர்.
அதற்காக, விடுதலை அடைந்தது முதலே இந்த மண்ணையும் மண்வாழ் மக்களையும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் தேசிய முன்னணி அரசின் தலைவர்கள் நலிந்த மக்களை காலமெல்லாம் நலிந்த நிலையிலேயே வைத்திருக்கவும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதைப் போல நீட்டிவிட்டு, தங்களின் அரசியல் லாபத்திற்காக கைப்பாவையாக காலமெல்லாம் பயன்படுத்த முனைவதும் அத்தனை அழகல்ல;
அடிப்படை ஊதியம் உயர்வு; ஆண்டு வருமானம் அதிகரிப்பு; பொருளாதார வளர்ச்சி; பொருளாதார ஏற்றத் தாழ்வை சமன்படுத்த தொடர் நடவடிக்கை; இலக்கவியல் பொருளாதாரம்; ஒருங்கிணைந்த வர்த்தகம், தொழில்முனைவோர் சிறுகடன் வசதி என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் அரசு மேற்கொண்டாலும், சில வேளைகளில் நடவடிக்கையைவிட வெற்று அறிவிப்புதான் ஆரவாரமாக இருக்கிறது.
நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மேடைதோறும் முழங்குவது உண்மையானால், எதற்காக உணவுப் பொட்டலத்திற்கும் அரிசி உள்ளிட்ட பண்டக பொருளுக்கும் மக்கள் ஆங்காங்கே கையேந்த வேண்டும். மக்கள் அனைவருக்கும் போதுமான வருமானம் கிடைத்து, கட்டுபடி விலையில் பண்டக பொருள் அனைத்தும் கிடைத்தால் மக்களுக்கு இந்த அவல நிலை தோன்றுமா?
இதைவிட, மக்களை இப்படி அற்பப் பொருட்களுக்காக கையேந்த வைப்பது தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? தேர்தல் கால வாக்கு வேட்டைக்காகவும் மற்ற அணுகூலத்திற்காகவும் தலைவர்கள் இப்படி மளிகைப் பொருளையும் சுவை நீருடன் சோற்றையும் சேர்த்து அளிக்கும்போது வறிய நிலையில் உள்ள நலிந்த மக்கள் இப்படிப்பட்டப் பொருள்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்வதில் சஞ்சலப்படுவதில்லை.
இவற்றைவிட கொடுமை, தனிப்பட்ட முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கர நாற்காலி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கும் அரசு சாரா அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தனக்கு வேண்டிய ஒரு சிலரையும் பக்கத்தில் நிற்க வைத்து பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து படம் பிடித்து தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டு நலிந்த மக்களின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் தங்களின் ஈகைச் செயலுக்காக தங்களுக்குத் தாங்களே மேளமும் தட்டிக் கொள்கின்றனர்.
எல்லாவற்றையும்விட, தாங்கள் பெற்ற மானியத்திற்கு கணக்கு காட்டுவதற்காக இந்தப் படங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைவிட வேதனையானது, ஏழை மக்களுக்கு அரிசிப் பொட்டலத்தையும் பால் மாவுப் பொட்டலத்தையும் கொடுத்து அதை அவர்கள் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் கோலத்துடன் அவர்களின் அருகில் நின்றுகொண்டு படம் பிடித்து தமிழ்ப் பத்திரிகையில் வெளியிடுவதுதான். சம்பந்தப்பட்ட ஏழை மக்களை செய்தித் தாளில் பார்க்கும் அக்கம்பக்கத்தார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பினர் எண்ணிப் பார்ப்பதில்லை.
வளர்ச்சி அடைந்த நாடு என்னும் நிலையை இன்னும் மூன்று ஆண்டுகளில் மலேசியா எட்டி விடுமாம். இதற்காக கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வகுக்கப்பட்டதுதான் ‘2020 தூரநோக்கு இலட்சியம்’ என்பது.
இதை முன்னாள் பிரதமர் முன்மொழிந்தபோது, இந்நாள் பிரதமர் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்தனர். ஆனால், மக்களை இன்னமும் மேடையேற்றி கையேந்த வைப்பதில் அனைத்துத் தலைவர்களும் போட்டி போட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தால், அது வளர்ச்சி அடைந்த நாடு மலேசியா என்பதற்கான அடையாளம் ஆகுமா?
இதைப்பற்றி ஆள்வோரும் ஆளப்படுவோரும் நன்கு சிந்திக்க வேண்டும்.