‘ஞாயிறு’ நக்கீரன்,அடுத்த வாரம் இதே வெள்ளிக்கிழமை நாட்டின் புதிய நிர்வாக நகரான புத்ராஜெயாவையும் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரையும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பதற்கு அடையாளம் இப்பொழுதே தென்படுகின்றன. காரணம், அன்றுதான் அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிரதமர் தாக்கல் செய்யவிருக்கிறார்.
தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கடைசி ஆயுதமாகவும் துருப்புச் சீட்டாகவும் பிரதமர் நஜிப் மிகவும் நம்பிக்கை வைத்து ஒரு சிற்பி தட்டித்தட்டி சிலையை செதுக்குவதைப் போல பார்த்துப்பார்த்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்துள்ளார்.
தேசிய முன்னணியும் அதன் தலைமையும் என்னதான் குட்டிக் கரணம் அடித்தாலும் புத்ராஜெயாவை தன் அதிகார கைகளுக்குள் தொடர்ந்து வைத்திருப்பதற்கான வாய்ப்பு வரும் பொதுத் தேர்தலில் மிகவும் மங்கி இருப்பதாகத்தான் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசியல் நோக்கர்களும் இதைத்தான் வழிமொழிந்து வருகின்றனர்.
எது எவ்வாறாயினும் என்ன விலை கொடுத்தாகினும் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நஜிப் உறுதியிலும் உறுதியாக இருக்கிறார். தேசிய முன்னணி மீதும் அதன் தலைமைமீதும் நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக மலாய் வாக்காளர்கள் இந்த முறை கடும் மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கான முதற்காரணம் வாழ்க்கைச் செலவு சுமையாகி விட்டதுதான்.
‘பிரிம்’ உதவித் தொகை வழங்குவது எப்பொழுது ஆரம்பமானதோ அப்பொழுது முதலே உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் அவ்வப்பொழுது உயர்ந்து வருகின்றன. இதைப்பற்றி கருத்து தெரிவிக்கும்பொழுதெல்லாம் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடும் அனைவரும் பொருள் விலையேற்றத்துக்கும் மத்தியக் கூட்டரசுக்கும் தொடர்பில்லை; வணிகர்கள்தான் விருப்பம்போல விலையை ஏற்றி விடுகின்றனர் என்று குறிப்பிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர்.
அப்படியானால் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் நலத்துறை அமைச்சு என்று ஓர் அமைச்சகம் ஏன் இருக்க வேண்டும் என்பது சமுதாயத்திற்கும் புரியவில்லை; தேசிய முன்னணி அரசுக்கும் தெரியவில்லை.
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்பொழுது தீபகற்ப மலேசியாவில் அறுபதுக்கும் குறைவான இடங்களே அடுத்தப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு கிடைக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், சபா-சரவாக்கில் தொடர்ந்து கொத்தாக வெற்றிக் கனிகளைப் பறித்த தேசிய முன்னணிக்கு தற்பொழுது அங்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த இரு பெருமாநிலங்களிலுமுள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 40 இடங்கள்தான் இந்த முறை தேசிய முன்னணிக்கு வசப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் தேசிய முன்னணி தரப்பு நிலை குலைந்துள்ளது.
ஆனாலும் சளைக்காத தேசிய முன்னணி, தற்பொழுது இம்மாதம் 27-ஆம் நாள் வெளியிடப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் மீண்டும் மாற்றங்களை செய்து வருகிறது. அதன்வழி ஏராளமான சலுகைகளை வாரி இறைத்து பொதுமக்களையும் அரசு ஊழியர்களையும் மொத்தமாக வளைக்க எண்ணம் கொண்டுள்ளது.
அதனால், பிரதமர் நஜிப்புக்கு மிகவும் நெருக்கமான புலனாய்வு வட்டாரம், 2018 நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சருமான நஜிப் நாடாளுமன்றத்தில் வெளியிட்டபின் சூட்டோடு சூடாக 14-ஆவது பொதுத் தேர்தலை நடத்தினால் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கதறக்கதற தெரிவிக்கும் ஆலோசனையை நஜிப்பும் பதறப்பதற ஆலோசித்து வருகிறாராம்.
ஆக, இந்த ஆண்டுக்குள் நாடு 14-ஆவது பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; மொத்தத்தில் கடந்த 13-ஆவது தேர்தல் சமயத்தில் நஜிப் எப்படி மதில் மேல் பூனையாக ‘இப்படியா அல்லது அப்படியா’ என்று தவித்தாரோ அதேப்போலத்தான் இந்த முறையும் உள்ளம் தகித்துக் கொண்டிருக்கிறாராம்.
எது எவ்வாறாயினும் எப்படியும் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நிலை நிலவுவதால்தான், நம்பிக்கைக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, ஹரப்பான் என்னும் பெயருக்கு அங்கீகாரம் கொடுத்த மத்திய அரசு, ஹரப்பான் சின்னத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்காமல் ‘இது சொட்டை; அதில் ஓட்டை’ என்ற பாணியில் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டு நம்பிக்கைக் கூட்டணியின் பொதுச் சின்னமான ஹரப்பான் சின்னம் குறித்து மௌனம் காத்து வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ அன்வாரின் சிறைவாசத்திற்கு முற்றுப்புள்ளி வரும் என்றும் அதன்படி அவர் வெளியே வந்தால் அரசியல் களமே மாறிவிடும் என்று தேசிய முன்னணி தரப்பு பரபரப்பு கொள்வதால், எப்பாடுபட்டாவது இந்த ஆண்டுக்குள் தேர்தலை எதிர்கொள்வது என்னும் முடிவில் தேசிய முன்னணி முனைப்பு காட்டுவது நன்றாகத் தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படும் சலுகைகளைப் பெற வேண்டுமென்றால் தேசிய முன்னணி அரசுக்கு அரசப் பணியாளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மறைமுக அழுத்தம் கொடுப்பதற்கும் டிசம்பருக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று தேசிய முன்னணி தலைமைக்கு ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் பொதுமக்களைவிட அரசாங்கப் பணியாளர்களின் ஆதரவை மிகவும் வேண்டி விரும்பி நிற்கும் தேசிய முன்னணி அரசு தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது என்பது வெள்ளிடை மலை!.