‘SEDIC’ பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் -தேனீ

இங்கே ‘SEDIC’ இலாக்காவின் வழி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கும் மானியத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டதால் அதைப்பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும்.

‘செடிக்’ ஆரம்ப காலத்தில் ஏதோ இந்தியர்கள் பிழைக்கப் பல் வகையில் அரசாங்க மானியத்திற்கு மனு செய்தவர்களுக்குப் பங்கிட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது என்ற அளவில் நடந்தது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் சார இந்திய அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு பலரும் மனு போட்டனர். தேவையில்லாத, அடிமட்டத்தில் இந்தியர்களுக்குப் பணி செய்யாத பலரும் மானியம் பெற்றனர்.

இதில் ம.இ.க. தலைவர்கள் சார்ந்துள்ள அரசாங்கம் சார அமைப்புகள் சிலவற்றிற்கு கேள்வி கேட்காமல் அத்தலைவர்கள் கேட்ட தொகை ஒதுக்கிக் கொடுக்கப் பட்டது.

இதில் ‘சக்தி பக்தியும், ‘நாம்’ இயக்கமும் அடங்கும். இது ‘செடிக்’ தலைவர்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது.

இந்த ஆண்டு பல அரசாங்கம் சாரா இயக்கங்கள் மனு செய்து இருந்தாலும் அவ்வியக்கங்கள் ஆற்றவிருக்கும்
இந்தியர் மேம்பாட்டுச் செயல்கள் எங்ஙனம் இந்தியர்களுக்குப் பயன் அளிக்கும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டி ஒரு நேர்முக தேர்வு நடத்தப் பட்டது.

அதில் திருமதி செல்வமலர் செல்வராஜு, திரு. மனோ வீரபத்ரன், டத்தோ எ.டி. குமாரராஜா அவர்கள் தலைமையேற்று ஒரு சில குறிப்பிட்ட செயல் முறையில் மனுதாரர்களைப் பிரித்துப் பத்து முதல் பதினைந்து இயக்கங்களின் பிரதிநிகளை ஒன்றாகக் கூட்டி அவர்தம் இயக்கத்தின் திட்டம் மற்றும் செயல்முறை எப்படி இந்தியர்களுக்குப் பயனளிக்கும் என்று விளக்கிக் கூற கேட்டுக் கொண்டனர்.

இதில் சில இயக்க பிரதிநிதிகள் தொழில்முறை நிபுனத்துவம் பெற்றவராக இருந்து (Professional Event Organizer) சில நூறாயிரங்களை மானியமாக கேட்டிருந்தனர். இன்னும் சிலரோ அவர்கள் கூறும் திட்டங்களைக் கூட தெளிவுர விளக்கிச் சொல்ல இயலாத நிலையில் இருந்தனர். வேறு சிலரோ ஒரே மாநிலத்தில் மிக அருகாமையுள்ள மாவட்டங்களில் இருந்து கொண்டு ஒரே மாதிரியான செயல் திட்டங்களை மேற்கொள்வதற்கு மனு செய்திருந்தனர்.

அவர்களின் திட்டங்களை ஆராய்ந்து இத்தகு திட்டங்கள் நடத்தி அடிமட்ட இந்தியர்களுக்குப் பயன்படும் மற்றைவை ஒரே மாநிலத்தில் நெருங்கிய மாவட்டங்களில் இருக்கும் இயக்கங்கள் ஒன்றினைந்து செயலாற்ற இந்தியர்களில் பெரும்பாலோர் பயனடைய முடியும் என்று அறிவுரை கூறி அவர்களை ஒருங்கிணைந்து செயலாற்ற கேட்டுக் கொண்டனர். அதே வேளையில் செலவுகளை மிச்சப் படுத்தி அரசாங்க மானியத்தை மற்ற இயக்கங்களின் திட்டங்களுக்குப் பகிர்ந்து கொடுத்து இந்தியர்களுக்கு உதவலாம் என்று அறிவுரை கூறினார் ‘செடிக்’ தலைவர்கள்.

இதில் திரு. மனோ மற்றும் டத்தோ எ.டி. குமாரராஜா அவர்கள் அவ் இயக்கங்களின் பிரதிநிதியாளரிடம் ‘point blank question’ கேட்டு திக்குமுக்காட வைத்தனர். அவ்வாறு திக்கு முக்காடியவர் பட்டியலில் தொழில்முறை நிபுனத்துவம் (Professional Event Organizer) பெற்றவரும் அடங்குவர்.

‘செடிக்’ இவ்வாறு நல்ல முறையில் வழி நடத்தப்பட்டால் இந்தியர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறலாம்.

மகாதீர் தானைத் தலைவர் காலத்தில் அனைத்தும் ம.இ.க. மானியம் என்று சொல்லி அதன் மேல்மட்டம் முதல் கீழ்மட்டத் தலைவர்கள் உண்டு கழித்தது போக மீத எலும்பு துண்டுகளே அடிமட்ட இந்தியர்களுக்குச் சென்று சேர்ந்தது.

இன்று அரசாங்க மானியங்கள் இந்தியர்களுக்குச் சென்று சேர முறையான ஒரு ‘delivery system’ ‘செடிக்’ வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்நாட்டு இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையில் ‘செடிக்’ தலைவர்களுக்கும் இதனை செயல்படுத்த உதவிய பிரதமருக்கும் நன்றி கூற இந்நாட்டு இந்தியர்கள் கடமைப் பட்டுள்ளனர்.

இதனைக் கட்டுரையாளரும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேனீ