2017 அக்டோபர் 27-ஆம் நாளில் பிரதமர் தாக்கல் செய்ய விருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நிச்சயம் மக்களை வெகுவாகக் கவரும்படி கவர்ச்சியாக இருக்கும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் பிரதமர் நஜிப் ஏராளமான சலுகைகளை வழங்கி பொதுமக்களை குறிப்பாக வாக்காளர்களை கவர முயற்சி செய்வார். இந்த வேளையில் இந்திய சமுதாயத்தினர் இன்னமும் பரிசுக் கூடைகளை எதிர்பார்க்கும் மனநிலையில் நீடிக்காமல், மக்களுக்கு உதவுவதைப்போல ஒரு கையை நீட்டும் அதேவேளை மறுகையால் அதே மக்களிடம் இருந்து சுரண்டும் நஜிப்பை அடையாளம் காண வேண்டும் என்று மலேசிய இந்திய வாக்காளர்களை ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய சமுதாயத்திற்காக ஆண்டுதோறும் 250 மில்லியன் வெள்ளியை ஒதுக்குவதாக நஜிப் அறிவிப்பதும் உடனே மஇகா-வும் அதன் வால்பிடிகளும் கைதட்டி ஆரவாரம் செய்வதும்தான் தொடர்கிறதேத் தவிர, இதனால் மலேசிய இந்திய சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் குறிப்பாக ‘பி-40’ என்னும் நிலையில் இருப்பவர்கள், தம் வாழ்க்கையில் கரைசேருவதற்கான வழி இதுவரை தென்படவில்லை. கடந்த ஆண்டுகூட, குறைந்த வருமானம் ஈட்டும் மக்களின் மேம்பாட்டிற்காக 50 மில்லியன் வெள்ளி நிதியும் ‘தெக்குன்’ மற்றும் ‘அமானா இக்தியார் மலேசியா’ மூலம் இந்தியர்களின் வர்த்தக வளர்ச்சிக்காக 150 மில்லியன் வெள்ளியும் ஒதுக்குவதாக நஜிப் அறிவித்தார். அந்த அறிவிப்புதான் பெரிதாகப் பேசப்பட்டதேத் தவிர அதனால் விளைந்த நன்மை குறித்து எதுவம் இல்லை இதுவரை;
1965 முதல் 2015-ஆம் ஆண்டுவரை பத்து மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்ட மலேசிய அரசு, அவற்றின் மூலம் 1.555 டிரில்லியன் வெள்ளியை செலவிட்டுள்ளது. இதில் 10 விழுக்காட்டு நிதியான 115 பில்லியன் வெள்ளியை இந்திய சமுதாயத்திற்காகப் பயன்படுத்தி இருந்தால், இடம் பெயர்ந்த தோட்டப் பாட்டாளிகள் எட்டு இலட்சம் பேருக்கு தீர்வு கிட்டியிருக்கும். 2000-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்த எட்டு இலட்சம் பேரும் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டதுதான் இன்றைய நிலை.
முக்கியமான காலக்கட்டத்தில் நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட இந்த தோட்டப் பாட்டாளிகள், தாங்கள் பாடுபட்ட அதேத் தோட்டங்களை விட்டு இடம்பெயர்ந்தபோது அவர்களுக்கு மாற்று வசிப்பிடமோ, மாற்று வேலைக்கான பயிற்சியோ அல்து பொருளாதார உதவித் திட்டமோ என எதுவும் வழங்கப்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் நகர்ப்புற ஏழைகளாகி ஒருபக்கத்தில் நிற்க, மறுபக்கத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தவறான பாதியில் நிற்க, இப்பொழுது இந்திய சமுதாயத்தை ஆழமாகப் பாதித்துள்ள இந்தச் சிக்கலைப் பற்றி மஇகா-வும் இதுவரை குரல் எழுப்பவில்லை.
அதைப்போல கடந்த 2013 ஏப்ரல் மாதத்தில் ஹிண்ட்ராஃப் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, பிரதமர் நஜிப் 4.5 பில்லியன் நிதியை இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அடுத்த மாதத்தில் பொதுத் தேர்தல் முடிந்த பின், தன்னுடைய வாக்குறுதியில் இருந்து பின்வாங்கிவிட்டார். இதைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக எழவும் உடனே ‘செடிக்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கண் துடைப்பு காட்சிகள் அரங்கேறும்படி நஜிப் செய்துவிட்டார். உண்மையில், இந்த செடிக் அமைப்பு, மஇகா மற்றும் அதன் சார்பான அரசுசாரா அமைப்புகளுக்கு மானியங்களைப் பிரித்துக் கொடுக்கும் முனையமாக செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
போதாக்குறைக்கு, இந்திய சமுதாயத்தை, குறிப்பாக வாக்காளர்களைக் கவர்வதற்காக ‘நம்பிக்கை’, ‘நன்றி’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தும் நஜிப், இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை என்றும் தன்னைத்தானே பறைசாற்றிக் கொள்கிறார்.
எனவே, மலேசிய இந்தியர்கள் இதற்கெல்லாம் மயங்கிவிடாமல் விழிப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அடுத்து அமையவிருக்கும் மாற்று அரசாங்கத்தின் மூலம், மாற்று நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என்று ஹிண்ட்ராஃப் கட்சி முழுமையாக நம்புகிறது. அதன்மூலம் இனம்-மொழி கடந்து அனைத்து சமுதாயத்திலும் உள்ள நலிந்த மக்கள் முன்னேறுவதற்கான தீர்வு காணப்படும். சிவப்பு நாடா நடைமுறை யெல்லாம் நீக்கப்பட்டு, தொழில்-வர்த்தக மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்பதை இந்திய வாக்காளர்களின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஹிண்ட்ராஃப் கட்சியின் தலைவரும் வழக்கறிஞரும் முன்னாள துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இக்கண்
பொன்.வேதமூர்த்தி
தலைவர் – ஹிண்ட்ராஃப்
25-10-2017