இந்திய சமுதாயத்தை உருமாற்ற விருப்பம் – ஜாஹிட் கடைந்தெடுத்த கேலிக்கூத்து – பொன். வேதமூர்த்தி

இந்திய சமுதாயம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை அரசு உன்னிப்பாகக் கவனித்து வரும் அதேவேளை அவற்றுக்குகு தீர்வு காணவும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அமைக்கவும் புத்ராஜெயா ஆர்வம் கொண்டுள்ள-தாக டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்திருப்பது கடைந்தெடுத்த கேலிக்கூத்து என்று ஹிண்ட்ராஃப் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

நான்கு, ஐந்து தலைமுறைகளை எட்டியுள்ள இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்காக மத்தியக் கூட்டரசு சிறப்பு சலுகை அளிக்கும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று இதே ஜாஹிட் கொக்கரித்து நீண்ட காலமாகவில்லை. பிரதமர் துறை துணை அமைச்சராக இருந்தபோது, இதேச் சிக்கலைக் களைய தான் முன்வைத்த பொருத்தமான, சாத்தியமான தீர்வுகளை இவர் வசதியாக மறந்து விட்டார். சுமார் மூன்று இலட்ச இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வுகாண வழியிருந்தும் என் ஆசோசனையை ஜாஹிட் புறந்தள்ளிவிட்டார். பின்னர், தேவையின்றி வங்காள தேசத்தினரையும் இந்தோனேசியர்களையும் சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானதுடன் மேலும் இந்திய உடலுழைப்புத் தொழிலாளார்களை ஈடுகட்ட வங்க தேசத்தில் இருந்து பத்து இலட்ச தொழிலாளர்களைத் தருவிக்க அமைச்சரவையின் ஒப்புதலை நாடினார் என்று வழக்கறிஞருமான பொன். வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

அடையாள ஆவணம் இல்லாத மலேசிய இந்தியர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்த பெரும் அல்லல்படும் அதேவேளை, தங்களின் திருமணத்தைக் கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியாத கையறு நிலையில் உள்ளனர். இத்தகைய இன்னலுக்கு ஆளானவர்கள் பாரம்பரிய முறையில் செய்து கொள்ளும் திருமணத்திற்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதனால், இப்படிப்பட்டவர்-களின் பிள்ளைகளும் அடையாள ஆவணம் இல்லாத அடுத்தத் தலைமுறையினராக உருவாகின்றனர். அதனால்தான், இப்படிப்பட்ட நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்தியர்கள் வேலைத் தேடுவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் அதேவேளை, அரசு அளிக்கும் மருத்துவ வசதியைக் கூட பெற முடியாமல் மேலும் மேலும் ஏழ்மைக் கூண்டில் சிக்குகின்றனர்.

முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் இல்லாத நிலையில் தவறான பாதையில் செல்லும் இந்திய இளஞர்களை ஒழித்துக் கட்டும்படி தேசிய போலீஸ் படை முன்னாள் தலைவர் காலிட்டிற்கு இதே ஜாஹிட் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் பிறப்பித்த உத்தரவை இந்திய சமுதாயம் மறக்கவில்லை.

நாடு விடுதலைப் பெற்ற நேரத்தில் தோட்டத் துண்டாடல் பிரச்சினையால் இடம்பெயர்ந்த சுமார் 8 இலட்ச தோட்டப் பாட்டாளிகளை இதேத் தேசிய முன்னணி அரசு கைகழுவி விட்டதன் விளைவுதான் இன்று நகர்ப்புறங்களில் இந்திய இளைஞர்கள் திக்கற்ற நிலையில் தவறான வழியில் செல்கின்றனர் என்பதை யெல்லாம் அமைச்சர் என்ற முறையில் சிந்தித்துப் பார்க்க ஜாஹிட் தவறிவிட்டார்.

மக்கள் தொகையில் வெறும் 7 விழுக்காட்டினராக இருக்கும் இந்திய சமுதாயத்தில் தோன்றும் இளைஞர்கள் நாட்டில் இடம்பெறும் மறைமுக நடவடிக்கையிலும் தீய வழியைத் தேர்ந்தெடுப்பதிலும் 80 விழுக்காட்டினராக இருக்கின்றனர் என்றால் இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன என்பதைப் பற்றியும் அதற்கு சாத்தியமான தீர்வு குறித்தும் இவர் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. இவருக்குத் தெரிந்ததெல்லாம் தவறான இளைஞர்களை விலங்குகளைப் போல சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிப்பதுதான்.

கடந்த 2013 அம்னோ உதவித் தேர்தலில் களம் கண்ட இதே ஜாஹிட், மலாய் இனவாதத்தைத் தூண்ட வில்லையா? ஜாஹிட்டின் பொறுப்பற்ற நடவடிக்கை-யையும் இனவாதப் போக்கையும் நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை. தற்பொழுது, மாறியுள்ள அரசியல் களத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதால், இந்தியர்களின் பிரச்சினைகளைக் களைய தீவிர எண்ணம் கொண்டிருப்பதாக ஜாஹிட் சொல்வதெல்லாம் ‘தேர்தல் கால பசப்பு மொழி’ ஆகும்.

கவலை வேண்டாம்; ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலான ஹிண்ட்ராஃப் கட்சி மேற்கொண்டுவரும் ‘தேசிய முன்னணிக்கு ஒரு வாக்குகூட இல்லை’ என்னும் பரப்புரை உச்சத்தை எட்டி வருகிறது. அதனால், பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் பத்தாயிர இந்திய வாக்குகளை இழக்க இப்பொழுதேத் தயாராகும்படி முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தான் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கண்

பொன்.வேதமூர்த்தி

தலைவர் – ஹிண்ட்ராஃப் கட்சி

26-10-2017