‘ஞாயிறு’ நக்கீரன், நாடு விடுதலை அடைந்தது முதல் நாட்டின் அதிகாரக் கட்டிலில் அயராமலும் சலிக்காமலும் அமர்ந்திருக்கும் தேசிய முன்னணிக்கு பதவி மோகம் தீர்ந்தபாடில்லை. இது, இந்த அரசியல் முன்னணியைச் சேர்ந்த ‘பெரியண்ணன்’ அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் மேடையேறும் போதெல்லாம் பளிச்சென வெளிப்படுகிறது.
இந்த அரசியல் கூட்டணியின் ‘பெரிய தம்பி’, ‘சின்னத் தம்பி’, ‘குட்டித் தம்பி’ நிலையில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் பெரியண்ணன் பாணியில் செயல்படத் தயங்குவதில்லை. இவர்கள் எல்லோரும் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில், ‘எதைச் சாட்ட்பிட்டால் பித்தம் தெளியும்’ என்ற மனப்பான்மையில் தூங்காத இரவுகளுடன் பரிதவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை, அக்டோபர் திங்கள் 27-ஆம் நாள் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிரதமர் நஜிப் அறிவித்தார். இந்த அறிக்கை, அடுத்த ஆண்டுக்கான அறிக்கை என்பதைவிட அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான அறிக்கை என்ற வகையில்தான் நஜிப் இதை வெளியிட்டுள்ளார்.
உலகில் எந்த நாடாக இருந்தாலும், அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு தத்தம் நாட்டில் உள்ள கல்விச்சாலைகளை நன்முறையில் பராமரிப்பதும் புதிய கல்விச்சாலைகளை உருவாக்குவதும்தான் முதல்பணி. ஆனால், நம் தேசிய முன்னணி அரசுக்கோ ஆண்டுக்கு ஆண்டு, மேடைக்கு மேடை பள்ளிக்கூட மேம்பாட்டிற்காக இத்தனை மில்லியன் நிதியை செலவழித்துள்ளோம்; பள்ளிகளின் உருமாற்றாத்திற்காக அத்தனை மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளோம் என்று காலமெல்லாம் பறைசாற்றுவது வாடிக்கையாகிவிட்டது.
அதுவும் இந்திய சமுதாய மேடை என்றால், தேசிய முன்னணியினர் ஆலயங்களுக்கு இத்தனை மில்லியன் வெள்ளியை மானியமாக அளித்துள்ளது என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் உள்ள கணக்கை எல்லாம் சேர்த்து அறிவிப்பார்கள். சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு மனம் என்ற ஒன்றிருந்து அதில் கூச்சம் ஏற்படுமா என்பதெல்லாம் புரியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், நாட்டில் ஒட்டு மொத்தமாக அதாவது தேசியப்பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஈராயிரம் பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன வென்றும் அவற்றின் சீரமைப்பிற்காக கோடிக்கணக்கான வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக பிரதமர் இந்த நிதிநிலை அறிக்கைவழி அறிவித்துள்ளார்.
நாட்டை தொடர்ந்து ஆண்டுவரும் தேசிய முன்னணி கூட்டரசு, சம்பந்தப்பட்ட 2000 பள்ளிகளை பாழடையும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை தன்னையும் அறியாமல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கல்வி முறை முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய முன்னணிக்கு அக்கறை இல்லை; பிஎம்ஆர் தேர்வை பிடி3 என்று பெயர் மாற்றி அமைப்பது, கணித-அறிவியல் பாடங்களை தேசிய மொழியில் பயிற்றுவிப்பதா அல்லது ஆங்கிலத்திலா என்று காலங்கடத்துவது என்பதில்தான் தேசிய முன்னணி அரசு காலம் கடத்துகிறதேத் தவிர, மாறி வரும் சமுக-உலகச் சூழலுக்கு ஏற்ப கல்விக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை எல்லாம் இல்லை.
மருத்துவ செலவைப் போல கல்விச் செலவும் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது. நாட்டில் உள்ள அத்தனை மாணவர்களும் ‘டியூஷன் வகுப்பு’ என்னும் மிகைநேர வகுப்பிற்குச் சென்றால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மிகைநேர வகுப்பு, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கானது என்ற நிலைமாறி, அத்தனை மாணவர்களுக்கும் இந்த வகுப்பு அவசியம் என்ற நிலை நிலவுகிறது. அப்படியானால், பள்ளிக் கூடங்கள் எதற்கு? ஆசிரியர்கள்தான் எதற்காக??
இத்தகைய வகுப்பை நாடாத சிறந்த மாணவர்கள் இருக்கின்றனர்தான்; ஆனால், இப்படி கருவிலேயே திருவாய்க்கப்பெற்ற மாணவர்கள் நாட்டில் எங்கோ இங்கொருவர் அங்கொருவர் என்ற நிலையில்தான் காணப்படுகின்றனர். ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோர்கள் அத்யாவசிய பண்டங்களின் விலை ஏற்றத்தினால், குடும்ப பராமரிப்பிற்கே அல்லல் படும் நிலையில், இந்த ‘பாழாய்ப் போன’ டியூஷன் வகுப்புகளுக்கும் பணம் கட்டி அழ வேண்டி உள்ளது.
இல்லாவிட்டால், நம் பிள்ளைகள் பின் தங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கடன் பட்டாவாது பட்டினி கிடந்தாவது நலிந்த குடும்பங்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். இதைப் பற்றி, தேசிய முன்னணி அரசின் கல்வி அமைச்சு என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?
தேசிய முன்னணியைப் பொறுத்தவரை, அதற்கு காலமெல்லாம் அடுத்தத் தேர்தலைப் பற்றியும் தன்னுடைய அதிகார இருப்பைப் பற்றியும்தான் கவலை; இதில் வேடிக்கை என்னவென்றால், சுதந்திர நாட்டை அறுபது ஆண்டுகளாக வழிநடத்தி முடித்தபின், இப்பொழுதுதான் அரசின் உயர்க்கல்வி நிலையங்களிலும் அரச வேலைவாய்ப்பிலும் 7 விழுக்காடு அளிக்கப்படும் என்று போகிற போக்கில் தெரிவித்திருப்பது.
உள்ளபடியே தேசிய முன்னணிக்கு இந்திய சமுதாயத்தின்பால் அக்கறை இருந்தால் செய்துவிட்டு சொல்ல வேண்டும்.
இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், இந்த 60 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு காலத்திற்கும் மேலாக தேசிய முன்னணியை வழிநடத்திய மகாதீரும் இந்திய சமுதாயத்திற்கு தலைமை ஏற்றிருந்த சாமிவேலுவும் இன்னமும் மனங்கூசாமல் இந்திய சமுதாய நலன் நாடுபவர்களைப் போல இன்று காட்டிக் கொள்வதுதான்.