‘ஞாயிறு’ நக்கீரன், 21 – ஆம் நூற்றாண்டில் மலேசியவாழ் இந்திய சமுதாயம் அரசியல்-சமூக மறுமலர்ச்சியை ஓரளவிற்காவது எட்டியுள்ளது என்றால் அதற்கு, பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பர் திங்கள் 25-ஆம் நாளில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் எழுச்சி ஒருமுகப்பட்டு தலைநகரில் வெளிப்பட்டதுதான். அதேவேளை, இந்திய சமுதாயம் பொருளாதார – கல்வி மறுமலர்ச்சியை எட்ட இன்னும் பல காலம் அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதுவொரு புறமிருக்க, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் மதமாற்ற சிக்கலுக்காக குரல் கொடுக்கும் எண்ணத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட (இந்து சமய) அமைப்புகள் இந்து உரிமை நடவடிக்கை குழு(ஹிண்ட்ராஃப்) என்ற பெயரில் இணைந்து மத மாற்றப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இந்து சமயத்தில் பிறந்து இந்துவாகவே வளர்ந்து, இந்து முறைப்படி மணம் முடித்து, இந்துக் குடும்பமாக பரிணமித்து கடைசியில் ஏதோவொரு காரணத்திற்காக இஸ்லாத்திற்கு மாறிய ஒரு சில ஆடவர்கள், அதை கடைசிவரை கமுக்கமாகவே வைத்திருந்தனர்.
உற்ற துணைக்கோ தன்னைப் பெற்ற அன்னை – தந்தைக்கோ தான் பெற்ற பிள்ளைகளுக்கோகூட தெரிவிக்காமல் கடைசிவரை மூடி மறைத்த சம்பந்தப்பட்ட ஆண்கள் இறந்த பின் பெரும் அக்கப்போர் நிகழ்ந்தது. மறைந்தவரின் குடும்பத்தார் இந்து முறைப்படி இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்ய முடியாதவாறு முஸ்லிம் சமய வாரியத்தினர் உடலைக் கொண்டு சென்று இஸ்லாமிய முறைப்படி மையத்துக் கொள்ளையில் அடக்கம் செய்ய முற்பட்ட சம்பவம் அடிக்கடி நிகழ்ந்ததால், இப்படி குடும்பத்தாருக்குக்கூட தெரிவிக்காமல் இரகசியமாக மதம் மாறும் அல்லது மாற்றப்படும் சிக்கலுக்கு தீர்வு காணவும் சமய உரிமைக்காக கூக்குரல் எழுப்பவும் உருவான ஹிண்ட்ராஃப் அமைப்பு, இந்த அளவிற்கு வலுப் பெறவும் எழுச்சி பெறவும் பெரும் பங்காற்றியவர்கள் துன் சாமிவேலுவும் துன் மகாதீரும்தான்.
இளைஞர்களிடையே வேலையில்லாப் பிரச்சினை, குடியிருப்புப் பிரச்சினை, மாணவர்களுக்கு உரிய கல்வி உரிமைச் சிக்கல், நலிந்த நிலையில் உள்ள மக்கள் சமூக நல உதவி பெறுவதில் தடைக்கல், போலிஸ் தடுப்புக் காவலில் இந்திய இளைஞர்கள் தொடர்ந்து மரணம் போன்ற பிரச்சினைகளைப் பற்றி யெல்லாம் குரல் எழுப்பினால் மறுப்பு அறிக்கையாலும் காவல் துறையின் துணையாலும் தற்காத்து வந்தது அன்றைய தேசிய முன்னணி அரசு; சாமிவேலுவும் அதற்கேற்ப மேளம் தட்டினார்.
அதனால், சமய-சமுதாய உரிமைக்காக தொடங்கப்பட்ட ஹிண்ட்ராஃப் தொடங்கப்பட்ட இரண்டொரு ஆண்டுகளிலேயே தேசிய அளவில் எழுச்சி பெற்றது. மலேசிய சமுதாயத்தினர் ஒவ்வொருவரும் தங்களின் குரலாக இந்த இயக்கத்தை அப்போது நோக்கினர். அதனால், பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பர் மாதத்தில் 25-ஆம் நாள் இந்த இயக்கம் ஏற்பாடு செய்த பேரணியில் இலட்சக் கணக்கில் மக்கள் அணிதிரண்டு தலைநகரில் அரசியல் அதிரடியைப் படைத்தனர்.
2008 பொதுத் தேர்தல் சமயத்தில் மலாய், சீன அரசியல் தலைவர்களையே ‘மக்கள் சக்தி’, ‘மக்கள் சக்தி’ என்று தேர்தல் பொதுக் கூட்டங்களில் முழங்க வைத்தது இந்த இயக்கம். பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் அந்த ஆட்சியில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் துணை முதல்வராக பொறுப்பேற்கவும் காரணமாக அமைந்தது ஹிண்ட்ராஃப்.
அதைப்போல பேராக் மாநில சட்டமன்றத்தில் ஒரு தமிழர் சட்டமன்றத் தலைவரான புதுமையையும் நிகழ்த்திக் காட்டியது இதே இயக்கம். இதன் நீட்சியாகத்தான், இன்று மஇகா-வும் சபாநாயகர் பொறுப்பு வகிக்கிறது. இந்த வகையில் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு மஇகா நன்றிக்கடன்பட்டுள்ளது.
இப்படி யெல்லாம் அரசியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஹிண்ட்ராஃப், ஒற்றுமையைக் கட்டிக்காக்காமல், அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய்களைப் போல சிதறி, இந்திய சமுதாயத்தின் குறிப்பாக தமிழர்களின் இலட்சணமும் கூட்டுணர்வும் ஒற்றுமையைப் பேணும் விதமும் இப்படித்தான் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
இதிலிருந்து பிரிந்த தனேந்திரன், தேசிய முன்னணிக்கு குறிப்பாக நஜிப்பிற்கு காவடி தூக்குபவராக மாறிவிட்டார். மிச்சம் மீதி இருப்பவர்கள் இன்றளவில் வேதமூர்த்தி தலைமையில் இயங்குகின்றனர். இவர்களின் அரசியல் பயணத்தை அநேகமாக அடுத்தப் பொதுத் தேர்தல் உறுதிப்படுத்தும்.
எது எவ்வாறாயினும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசிய இந்தியர்களின் அரசியலையும் தாண்டி ஒட்டுமொத்த மலேசிய அரசியலைப் புரட்டிப் போட்ட வரலாற்றுக்கு சொந்தமானவர்கள்அந்நாளைய ஹிண்ட்ராஃப் இயக்கத்தினர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!.