ஹிண்ட்ராஃப் பதிவு: சங்கப்பதிவகம் பின்வாங்குகிறது, தேசிய முன்னணி அஞ்சுகிறது.

கோலாலம்பூர், நவம்பர் 27: நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழக்கவும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை இழக்கவும் காரணமான ஹிண்ட்ராஃப் கட்சியைக் கண்டு ‘சூடு கண்ட பூனை’யைப் போல தேசிய முன்னணி அஞ்சுகிறது. அதனால்தான், ஹிண்ட்ராஃப் இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சிக்கு சங்கப் பதிவகத்தின் மூலம் மறைமுகமாக தடை ஏற்படுத்துகிறது என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய வாக்காளர்களில் ஏறக்குறைய 65 விழுக்காட்டினர், குறிப்பாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் ஒருமித்த ஆதரவு ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு உள்ளதென்பது தேசிய முன்னணி தலைமைக்கு நன்கு தெரியும். இதனால்தான், நம்பிக்கைக் கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக இணைந்து வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் களம் காண விரும்பும் ஹிண்ட்ராஃப் முயற்சிக்கு அது முட்டுக்கட்டை போடுகிறது.

ஒருவேளை தேர்தலுக்குள் சங்கப்பதிவகம் அங்கீகாரம் அளிக்காவிட்டால், நம்பிக்கைக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தில் ஹிண்ட்ராஃப் போட்டியிடும்; அதேவேளை, நம்பிக்கைக் கூட்டணி சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள பொதுச் சின்னம் கிடைத்துவிட்டால், அந்தச் சின்னத்தில் ஹிண்ட்ராஃப் போட்டியிடும் என்று வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் ஹிண்ட்ராஃப் உடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின் இந்திய சமுதாயத்திடம் பொது மன்னிப்பு கேட்ட பிரதமர் நஜிப். தேர்தலுக்குப் பின் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மத்தியில் நஜிப் அறிமுகப்படுத்திய இந்தியர் மேம்பாட்டு பெருந்திட்டம், செடிக் அமைப்பின் மூலம் அம்னோவின் துதிபாடியான மஇகா-விற்கும் அதன் பினாமிகளுக்கும் நிதியைப் பகிர்ந்து அளிக்கத்தான் பயன்படுகிறதே தவிர, அறிவித்தபடி இந்திய சமுதாயத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வழிவகை ஏதுமில்லை. மொத்தத்தில், இது தேர்தல் கால நாடகம் என்பதை நடுநிலை வாக்காளர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

அதைப்போல, தேசிய முன்னணி அரசின் ஊழல் நடவடிக்கையால், மலேசிய மக்கள், இனம், மொழி, சமய எல்லைகளுக்கு அப்பால் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தேசிய முன்னணிக்கு ஆதரவான மலாய் வாக்கு வங்கியும் பெருமளவு சரிந்துவிட்டது. இதை சரிக்கட்ட சர்ச்சைக்குரிய சமயவாதிகளை ஊக்குவித்து அதன்மூலம் மலாய் வாக்காளர்களைக் கவரும் புதிய முயற்சியில் தேசிய முன்னணி தலைமை ஈடுபட்டுள்ளது.

எனவே, அடுத்தப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஒரு வாக்குகூட இல்லை என்னும் கருப்பொருளுடன் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரையை ஹிண்ட்ராஃப் தொடர்ந்து மேற்கொள்ளும். அத்துடன் கடந்த 25-ஆம் நாளில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சியின் பத்தாம் ஆண்டுக் கூட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்கள் என்பதை, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களான பேராசிரியர் பி.இராமசாமி, அந்தோணி லோக், ஸைட் இபுராகிம், மக்கள் நீதிக் கட்சி உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா, அமானாக் கட்சித் தலைவர் துவான் முகமட் சாபு ஆகியோர் நேரில் கண்டனர்.

மொத்தத்தில், வரும் பொதுத் தேர்தலின்வழி ஆட்சி மாற்றத்தையும் அதன்வழி தேசிய அளவில் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முனைப்பு காட்டும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஹிண்ட்ராஃப் தோளோடு தோள் நின்று தோட்டப்புற, பட்டணப்புற இந்திய வாக்காளர்களின் ஆதரவை பேரளவில் திரட்டும் என்று முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இக்கண்

பொன்.வேதமூர்த்தி

தலைவர் – ஹிண்ட்ராஃப்

கோலாலம்பூர்

27-11-2017