‘ஞாயிறு’ நக்கீரன் – சொல்லி அடித்த வெற்றிக் ‘கோலை’ப் போல நம்பிக்கைக் கூட்டணி 14-ஆவது பொதுத் தேர்தலில் முன்கூட்டியே சொன்னபடி வெற்றி பெற்றது ஒருபுறமிருக்க, 61 ஆண்டுகளாக தொடர் ஆட்சி நடத்திய தேசிய முன்னணியின் வரலாற்றுப் பெருமைக்கும் முடிவு கட்டியது.
தேர்தலுக்கு அடுத்த நாள் புதிய ஆட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட துன் டாக்டர் மகாதீர், அன்று முதலே அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பொருள்-சேவை வரி(ஜிஎஸ்டி)யை நீக்குவது, நிர்வாக சீரமைப்பு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது, வெளிப்படையான நிருவாகம் நடைபெறும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அதன்படி ‘1எம்டிபி’ நிதி முறைகேட்டை மறு ஆய்வு செய்வதன் தொடர்பில் மேநாள் பிரதமர் நஜிப்பும் அருள் கந்தாவும் நாட்டை விட்டு வெளியேர தடைவிதிக்கப்பட்டனர்.
நாட்டில் முதல் முறையாக ஒரு பெண் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்கள் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை எண்ணிக்கை 25 என்ற அளவில் நிலையில் வரையறுக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர், கட்டம் கட்டமாக இந்தப் பணி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியக் கூட்டரசுக்கு ஆலோசனை வழங்க ஐவர் கொண்ட ஆலோசனை மன்றத்தை பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே அமைத்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையம், ஊழல் தடுப்பு ஆணையம், சங்கப் பதிவகம் போன்ற அமைப்புகளின பக்க சார்பான போக்கிற்கு முடிவு காணும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதைப்போல அரச தலைமை வழக்கறிஞர், ஃப்ல்டா அமைப்பின் தலைவர் போன்றோர் ஒதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் வாராந்திர விலை நிர்ணயிப்பு முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மலேசிய அரசியலில் மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அன்வாரின் விடுதலையும் நடைபெற்றுள்ளது. நம்பிக்கைக் கூட்டணி அரசப் பொறுப்பேற்ற 6-ஆவது நாளிலேயே இது நடைபெற்றுள்ளது.
100 நாளில் ஜிஎஸ்டி நீக்கப்படும் என்று தெரிவித்திருந்த நம்பிக்கைக் கூட்டணி, பதவியேற்ற ஏழாவது நாளிலேயே அது குறித்து தீர்க்கமான முடிவெடுத்துள்ளது. பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்த அந்த வரியை நீக்கியுள்ள இந்த அரசு, ஜூன் மாதம் முதல் நாள் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் அடையாள ஆவண சிக்கலுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தனிப்பட்ட முறையில் அறிவித்திருந்த பிரதமர் 8-ஆம் நாளில் அத்தகைய அமைப்பை அறிவித்து, அதற்கு அவரே தலைமை ஏற்றுள்ளார். அத்துடன், கல்வித் துறைக்கும் அவரே தலைமையேற்றுள்ள தகவலையும் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் 9-ஆம் நாள் அதிரடி என்னவென்று பொறுத்துப் பார்ப்போம்.