இந்திய சமுதாயத்தில் நலிந்த நிலையில் இருக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் பிள்ளை(மாணவர்)களையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் இருந்து மானியங்களைப் பெற்று மஞ்சள் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரசு சாரா அமைப்புகளைப் பற்றி புதிய அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, துன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங் உள்ளிட்டோர் இனிமேல் இந்திய சமுதாயத் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(என்.ஜி.ஓ.) எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நிதி உதவி செய்தால் அல்லது மானியம் அளித்தால் அதைப்பற்றி முன்கூட்டியே இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படியாகத் தெரிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அப்பாவி மக்களில் ஒரு சிலரை மேடை ஏற்றி அவர்களிடம் அரிசிப் பொட்டலம், சார்டின் டின்களைக் கொடுத்து அவற்றை கையில் ஏந்தி நிற்கும் அவர்களுடன் சேர்ந்து படம் பிடித்து, அதை தமிழ் நாளேடுகளில் வெளியிடுவதுடன் அரசாங்கத்திடம் மானியக் கணக்கு காண்பிக்கவும் இப்படிப்பட்ட படங்களை பெரும்பாலான என்.ஜி.ஓ.’க்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இப்படித்தான் இரண்டொரு மாணவர்களுக்கு புத்தகப் பை, ஒருவருக்கு மிதி வண்டி, இன்னொரு மாணவருக்கு மடிக் கணினி கொடுப்பதை படம் பிடித்து இலட்சக் கணக்கான மானியங்களுக்கு கணக்கு காட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எந்த உதவியாக இருந்தாலும் அரசு நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டும். அவ்வாறின்றி, இப்பட்டிப்பட்ட சுயநல இயக்கங்களுக்குக் கொடுப்பதால் அந்தந்த இயக்கங்களின் நிருவாகத் தரப்பினர் வசதியாக வாழத்தான் வழிவகை ஏற்படுகிறது.
அதேசமயம், உண்மையான ஈடுபாட்டுடன் மக்களின் சமூக-கல்வி மேம்பாட்டிற்காக பாடாற்றும் இயக்கத்தினரும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், இப்படிப்பட்ட இயக்கங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தற்பொழுது, நம்பிக்கைக் கூட்டணி அரசு 21-ஆம் நாள் பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னமே சில அமைப்புகள், இந்திய சமுதாயத்திற்கு மூன்று அல்லது நான்கு முழு அமைச்சர்கள் வேண்டும் என்று கேட்பதுடன் தங்களின் இருப்பையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது இவர்களின் நோக்கம், நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டிக் கொள்ளத்தான். எனவே, முந்தைய அரசாங்கத்தைப் போல வகை தொகையின்றி மானியம் வழங்கி சமூக இடைத்தரகர்களை உருவாக்கும் போக்கை இந்த அரசு அடியோடு கைவிட வேண்டும்.
மக்களுக்காக அரசு வழங்கும் அணுகூலம் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு நேரடியாக சேரும்படி அமைச்சர் பெருமக்கள், குறிப்பாக பிரதமர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சமூக நலம் நாடுவோர் எதிர்பார்க்கின்றனர்.