நிதி அமைச்சுக்கு குறி வைத்த பிகேஆர் சமாளித்த மகாதீர்

‘ஞாயிறு’ நக்கீரன்-14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பிகேஆர்(மக்கள் நீதிக் கட்சி) அறிவித்த தேர்தல் அறிக்கையில், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமர் பொறுப்பு ஏற்பவர் அமைச்சரவையில் எந்த அமைச்சுக்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். குறிப்பாக, நிதி அமைச்சகத்தைப் பற்றி பிரதமர் கனவிலும் கருதக் கூடாதென்ற கொள்கையை வகுத்திருந்தது.

இது ஒரு முற்போக்கான சிந்தனையின் வெளிப்பாடாகும். நாட்டு நலனிலும் மக்களின் மேம்பாட்டிலும் பிகேஆர் கொண்டிருந்த அக்கறையை, இது  வெளிப்படையான இது சுட்டிக் காட்டியது.

இத்தகைய சூழலில், தேர்தலுக்கு மறுநாள் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் துன் மகாதீர், அடுத்த நாளே மே 11-ஆம் நாள் நம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த நான்கு கட்சிகளின் சார்பில் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை அறிவித்தார். அப்போது, ஜசெக-வின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கு நிதித் துறையை ஒதுக்கினார்.

இதை அறிந்த சீன சமூகமும் அரசியல் வட்டமும் இன்பத்தின் எல்லைக்கேச் சென்றது. 1974-ஆம் ஆண்டிற்குப் பின் நிதித் துறைக்கு சீனர் பொறுப்பேற்பது இதுதான் முதன்முறை.

முன்னர் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர், தன்னுடைய அரசியல் பயணத்தில் முழு முதல் எதிரியாகக் கருதியது ஜசெக-வைத்தான். அதன் அந்நாளையத் தலைவர்களான பி.பட்டு, லிம் கிட் சியாங், கர்ப்பால சிங் ஆகியோரை அடியறுப்பதில் மிகவும் முனைப்பாக செயல்பட்டார்.

இப்போது மலேசிய அரசியல் அடியோடு மாறிவிட்ட நிலையில், அதே மகாதீர் அதே ஜசெக-விற்கு நாட்டின் மிக முக்கியமானதும் அடியாதாரம் மிக்கதுமான நிதி அமைச்சை ஒதுக்கியதைக் கண்டு நாடே வியந்தது. 42 ஆண்டுகளுக்குப் பின் நிதி அமைச்சகம் ஒதுக்கப்பட்டதால் சீன சமூகமும் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தது.

நம்பிக்கைக் கூட்டணியில் 42 இடங்களைக் கைப்பற்றிய ஜசெக, இந்தக் கூட்டணிக்கு முதுகெலும்பைப் போலத் திகழ்கிறது. தவிர, எந்த சீன சமுதாயம் ஒரு காலத்தில் மகாதீரை அடியோடு புறக்கணித்து வெறுத்ததோ, அதே சீன மக்கள் தற்பொழுது மகாதீரை ஒட்டு மொத்தமாக ஆதரிக்கின்றனர்; தோளில் தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்.

அதனால்தான் மகாதீர், சீன சமுதாயத்திற்கு நன்றி தெரிவிக்கவும் ஜசெக-வை பாராட்டவும்தான் நிதி அமைச்சகத்தை லிம்-மிற்கு அளித்து அழகு பார்த்தார். ஆனால், இது அடுத்த நாளே.., அல்ல.. அல்ல.. அன்றைய தினமே நம்பிக்கைக் கூட்டணியில் வேறு விதமாக பிரதிபலித்தது.

நம்பிக்கைக் கூட்டணியில் மகுடம் போல திகழும் பிகேஆர் கட்சி, நிதி அமைச்சகத்தின்மீது மாறாத கண் வைத்திருந்ததையும் அதை ஜசெக-விற்கு ஒதுக்கியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் அரசல் புரசலாக இல்லாமல் வெளிப்படையாகவே வெளிப்படுத்தியது.

அரசியலிலும் சொந்த வாழ்விலும் நன்கு கனிந்து  ஒட்டு மாங்கனியைப் போல மணம் பரப்பும் மகாதீர், பிகேஆரின் எண்ணத்தை மறுதலிக்காமல், ஏற்றுக் கொண்டார். அதன் பிரதிபலிப்புதான், அடுத்த ஒரு வாரத்தில் பத்து அமைச்சர்களைக் கொண்டு விரிவாக்கப்பட்ட மலேசிய அமைச்சரவையில் பொருளாதார மேம்பாட்டுத் துறை என்று ஒரு புதிய துறையை உருவாக்கி, அதையும் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் என்று தெரிந்தும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு அத்துறையை ஒதுக்கி பிகேஆரின் உச்சியைக் குளிர வைத்துள்ளார்.

அதைப்போல அமைச்சரவையில் இன்னொரு மெல்லிய சருக்கலையும் சந்தித்தார் மகாதீர். கல்வி அமைச்சகத்தைப் பொருத்த மட்டில், அதற்கு பொறுப்பு ஏற்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தங்களின் முத்திரையைப் பதிக்கத்தான் விரும்பினரே அன்றி, ஒட்டுமொத்த மலேசிய கூட்டு சமுதாய மாணவர்களைப் பற்றியோ அல்லது ஒருங்கிணைந்த கல்வி மேம்பாடு என்பதைப் பற்றியோ பொருட்படுத்தியதில்லை.

குறிப்பாக, இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கல்வி அமைச்சராக இருந்தபொழுது அவர் பங்கிற்கு சில மாற்றங்களைச் செய்தார். அதில், கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும் முறையை மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பரவலாக வரவேற்பு இருந்தாலும், மகாதீர் தனிப்பட்ட முறையில் இதை ஏற்கவில்லை. இதை, தனக்கு ஏற்படுத்தப்பட்ட சிறுமை என்பதாகவே அவர் கருதினார். காரணம், இந்த நூற்றாண்டும் புத்தாயிரத்தாமாண்டும் ஒருங்கே தொடங்கிய காலக் கட்டத்தில் அவர்தான் கணித, அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் கற்கும் முறையை நடைமுறைப்படுத்தினார்.

அவருக்குப் பின் அந்த அமைச்சுக்குப் பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட்டும் பெரிய அளவில் மாற்றம் எதையும் செய்யாவிட்டாலும், மகாதீரைக் கடுமையாக சாடுவதில் பெரும் முனைப்பு காட்டினார். கெடா மாநில அரசியலில், ஒரு கட்டதில் மகாதீரால் ஒதுக்கப்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு அண்மையில் அவர் அப்படி செயல் பட்டதை விவரம் அறிந்தவர்கள் உணர்ந்து கொண்டனர்.

இவற்றையெல்லாம் மனதின் ஓர் ஓரத்தில் பதிந்து வைத்துக்கொண்டிருந்த மகாதீர், கல்வித் துறையில் பேரளவில் சீர்திருத்தம் செய்ய விரும்பித்தான், அந்த அமைச்சகத்தை ஏற்றுக் கொள்ள விருப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த மாத்திரத்தில், ஒரு குழுவினர், குறிப்பாக இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு பிரிவினர் கணித, அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என்று ஓங்கி முழங்கினர்.

இவர்கள் எல்லாம் கேட்டுக் கொள்ளாவிட்டாலும் மகாதீரின் மனதிலும் அந்த எண்ணம் இருந்திருக்கக்கூடும். ஆனாலும், எது எவ்வாறாக இருந்தாலும் மகாதீர், கடைசியில் அந்த அமைச்சிற்கு பொறுப்பு வகிக்க முடியாமல் போனது.

மக்கள் நீதிக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையின்படி, பிரதமராக இருப்பவர் எந்த அமைச்சுக்கும் பொறுப்பு வகிக்கக்கூடாது என்னும் கொள்கை முடிவிற்கு மாறாக மகாதீர் செயல்பட முனைந்துள்ளார் என்று பிகேஆர் பகாங் மாநில இளைஞர் அணி சார்பில் இடித்துரைக்கப்பட்டது.

இதை மனமுவந்து ஏற்றுக் கொண்ட மகாதீர், இப்போது தான் சார்ந்துள்ள பெர்சத்துக் கட்சியின் மஸ்லி மாலிக்கிடம் கல்வி அமைச்சை ஒப்படைத்திருக்கிறார். அவர் மூலம் தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றிக் கொள்வது மகாதீரின் மறைமுகத் திட்டமாக(Hidden Agenda) இருக்கக்குடும்.

இருந்தபோதும், மஸ்லி மாலிக் மீது தேசிய அளவில் ஒருங்கிணைந்த நல்லபிமானம் எழவில்லை. அவர்மிது மாறுபட்ட கருத்துகள் முன்வைத்த நிலையில், அவர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். பொருத்திருந்து பார்ப்போம்!