மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்

‘ஞாயிறு’ நக்கீரன்- சுகாதாரத் துறை முன்னார் அமைச்சரும் மஇகா-வின் இந்நாள் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், அமைச்சர் பொறுப்பை மே 9-ஆம் நாள் இழந்துவிட்ட நிலையில் தற்பொழுது கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அறுபது ஆண்டு கால ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்த நிலையில் மஇகா முதல் முறையாக அதன் தலைமைச் செயலகத்தில் மே 16 புதங்கிழமை மாலையில் நடத்திய மத்திய செயலவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம், தலைவர் பொறுப்பில் இருந்து தாம் விலக இருப்பதாக அறிவித்தார்.

புதிதாக வகுக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டத்தின்படி, கட்சியில் அனைத்துப் பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்த மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிளை – தொகுதித் தலைவர்கள், தேசியத் தலைவர், இளைஞர் அணி மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள், தேசிய துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளுக்கும் கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூலை 29-ஆம் நாள் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் சுப்பிரமணியம் விளக்கம் அளித்தார்.

அதேவேளை, தேசியத் தலைவர் பொறுப்பை தாம் தற்காக்கப் போவதில்லை என்றும் விருப்பம் உள்ள எவரும் கட்சித் தலைமையை ஏற்க முன்வரலாம் என்றும் அப்படி போட்டி இருந்தால் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும் அவர் தெளிவு படுத்தினார்.

மக்களுக்காக பாடுபட்ட நாங்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும்படி-யாகவும் வெளியில் இருந்து வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகாரத்தில் அமரும்படியாகவும் நாட்டின் 14-ஆவது தேர்தல் முடிவு அமைந்துவிட்டதாக சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் வருத்தத்துடன் சொன்னார்.

மே 17, 18(வியாழன், வெள்ளி) ஆகிய இருநாட்களுக்கு கட்சியின் ஆலோசனை – கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கட்சியின் எதிர்காலம், கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தெல்லாம் ஆராயப்படும். இதன் முடிவு குறித்து வரும் மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியை இனி வழிநடத்துவதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. இதுவரை, தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பிலும் பிரதமர் சார்பிலும் நிதி அளிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, அந்த நிலை இல்லாத நிலையில் இதை மிக முக்கியமான பிரச்சினையாக கட்சி கருதுகிறது. தேசிய அளவில் மட்டுமல்ல; மாநிலக் கிளைகள், தொகுதி, கிளை அளவிலும் கட்சியை வழிநடத்த நிதி இன்றியமையாதது என்று செய்தியாளர்க் கூட்டத்தில் விவரித்த சுப்பிரமணியம், கட்சிக்கு புதிய இளைஞர்களை வரவேற்பதாகவும் கூறினார்.

குறிப்பாக, மலேசிய தேசிய அரசியலில் புதிதாக மலர்ந்துள்ள சிந்தனை அடிப்படையில் கட்சியை பல இனக் கட்சியாக மாற்றுவது குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறோம் என்றும் அண்மைய பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.