தேசிய முன்னணி கரைகிறது!

ஞாயிறு’ நக்கீரன் – தேசிய முன்னணி, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேக வேகமாக கரைந்து வருகிறது. துருவப் பிரதேசங்களில் ஆண்டுக்கு 200 டன் என்ற அளவில் பனி மலைகள் எப்படி கரைகின்றதோ அதைப்போல தேசிய முன்னணியின் இன்றைய நிலைமை இருக்கிறது.  ஓசோ மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால்  அண்டார்ட்டிக்காவில் பனி மண்டலம் உருகுவதைப் போல மே 9 பொதுத் தேர்தல் சரிவைத் தொடர்ந்து தேசிய முன்னணியும்  கரைந்து வருகிறது. குறிப்பாக அதன் பெருந்தூண் அம்னோதான் மிகவும் நலிந்து வருகிறது.

பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்தும் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறியதுடன் அன்றி சுடச்சுட நம்பிக்கைக் கூட்டணி ஆதரவு தெரிவித்திருப்பதுடன் பெர்சத்து கட்சியில் இணையப் போவதாகவும் தெரிவித்திருப்பது தேசிய அளவில் பிரதிபலிக்கும் அண்மைய அரசியல் நிகழ்வாகும்.

நூர் அஸ்மி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணமாகும். இவரைத் தேர்தெடுத்தவர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவான வாக்காளர்கள்; நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிய நிலையிலும் பாகான் செராய் மக்கள் இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தன்னை ஆதரித்த அந்தத் தொகுதி மக்களையும் அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் உள்ளிட்ட தேசிய முன்னணி கட்சிகளையும் இவர் ஒருசேர உதாசீனம் செய்திருப்பது மிகவும் தவறானது. சந்தர்ப்ப சுழலுக்கு ஏற்ப, அதுவும் அம்னோவின் தேசிய பேராளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் இப்படி நிலை மாறி சொந்தக் கட்சிக்கு இரண்டகம் புரிந்துள்ள நூர் அஸ்மி பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

நூர் அஸ்மி, கொஞ்ச காலம் தேசிய முன்னணியில்(அம்னோவில்) நீடித்திருக்கலாம்; அல்லது பாகான் செராயில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன்வழி தன் நிலையை பொது மக்களுக்குத் தெரிவித்துவிட்டு அதன்பின் இத்தகைய முடிவை அறிவித்திருக்கலாம்; குறைந்த பட்சம் ஒரு செய்தியாளர்க் கூட்டத்தையாவது நடத்தி அதில் வட்டார தேசிய முன்னணி தலைவர்களையும் கலந்து கொள்ள செய்து தன் நிலையையும் முடிவையும் அதன்வழி அறிவித்திருக்கலாம். எல்லாவற்றையும் விடுத்து இப்படி, அற்ற குளத்து அருநீர்ப் பறவையைப் போல நூர் அஸ்மி செயல்பட்டுள்ளது அம்னோ-விற்கு பச்சை துரோகமாகும்.

அதுவும், கெராக்கான் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு செய்த அடுத்த நாளில் நூர் அஸ்மி இப்படிச் செய்துள்ளார்.

மே-9 பொதுத் தேர்தலுக்கு முன்புவரை 13 கட்சிகள் இணைந்திருந்த தேசிய முன்னணியில் இருந்து பொதுத் தேர்தல் தோவிக்குப் பின் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான மண்டலக் கட்சிகள் விலகிவிட்ட நிலையில் அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் என்னும் நான்கு கட்சிகள் மட்டும் தொடர்ந்த நிலையில்தான் கெராக்கான் இப்படி ஓர் அதிரடி முடிவை எடுத்து தேசிய முன்னணியில் தற்பொழுது மேலும் ஒரு சரிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையை, தேசிய முன்னணி தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அம்னோவின் தேர்தல் வீழ்ச்சிக்குப் பின் மசீச-தான் அவ்வப்பொழுது சலசலப்பு ஏற்படுத்தி வந்தது. அப்பொழுதெல்லாம் அம்னோ சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெருக்கடியான நேரத்தில் ஆறுதலுடன் செயல்படுவதற்குப் பதிலாக இரண்டகம் புரிவதைப் போல செய்லபடும் மசீச-வின் போக்கு அரசியல் கூட்டாளி என்பதற்கான இலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றெல்லாம் அம்னோ சார்பின் கருத்துரைக்கப்பட்டது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் மஇகா-வும் கெராக்கானும் அமைதி காத்து வந்த நிலையில், அம்னோ தன் சொந்தக் கட்சித் தேர்தலில் கவனம் செலுத்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் காதும் காதும் வைத்த மாதிரி கெராக்கான் அம்முன்னணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.

அம்னோ-விற்கு எதிரான கருத்தை மசீச முன்வைத்த பொழுது அதற்கு எதிராக படபடவென வெடித்த அம்னோ, கெராக்கான் விலகலைக் கண்டு சற்று அதிர்ந்துதான் காணப்படுகிறது.

14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் கெராக்கான் முதல் செயற்குழுக் கூட்டத்தில்  தேசிய முன்னணியில் இருந்து கெராக்கான் விலக வேண்டும் என்று ஒரு சிலர்தான் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஜூன் 23-ஆம் நாள் கட்சியின் தேசிய தலைமையகத்தில் கூட்டப்பட்ட அடுத்த மத்திய செயலவைக் கூட்டதில் பெரும்பாலான உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் தேசிய முன்னணியில் இருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால்தான், கெராக்கான் இத்தகைய முடிவை ஒரு மனதாக எடுக்க நேர்ந்தது என்று கெராக்கான் தேசிய உதவித் தலைவர் டோமினிக் லாவ் அறிவித்துள்ளார்.

உண்மையில் இத்தகைய கொள்கை முடிவை தேசியத் தலைவர் வெளியிடுவதுதான் முறைமை. ஆனால், அவ்வாறு நடந்து கொள்ளாத கெராக்கான் ஒரு தேசியக் கட்சி என்பதற்கான பாங்கைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த 12-ஆவது பொதுத் தேர்தலில் இருந்து அடிமேல் அடிவாங்கி வரும் கெராக்கான், இந்தத் தேர்தலிலும் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. தேசிய முன்னணியில் நீடித்தால் இனி, எதிர்காலமும் கட்சிக்கு இலாபமும் இல்லை என்றெண்ணி கெராக்கான் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

இத்தனைக் காலமும் தேசி முன்னணியில் ஓர் அங்கமாக இருந்துவிட்டு, தற்பொழுது நெருக்கடி ஏற்பட்டவுடன் அந்த முன்னணிக்கு தோள் கொடுக்காமல் இப்படி காலை வாரிவிடுவதற்கான காரணம் அம்னோவின் இனவாத அரசியல் இனியும் பலிக்காது என்ற எண்ணமாக இருக்கலாம்.

இது அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் கெராக்கான் பக்குவப்பட்டு வருவதை குறிக்கிறது எனலாம்.

அதைப்போல மசீச-வும் செய்வதறியும் வகை ஏதும் புரியாமல் ஒட்ட வைத்த புடலங்காய் நுனியைப் போல தேசிய முன்னணியில் ஒட்டிக் கொண்டுள்ளது.  மஇகா-வில் இருந்தும் வட்டாரத் தலைவர்கள் அணி அணியாக விலகி வருகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால், துங்கு ரசாலியின் எண்ணத்தைப் போல அம்னோ ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டிய நிலை உறுதிப்பட்டு வருகிறது!.