உலகின் மூத்த இனமான தமிழர்கள் பின்பற்றி வந்தது தமிழர் சமயமா..! அல்லது இடையில் திணிக்கப்பட்ட இந்து (மதம்) சமயமா..! என மலேசிய நாம் தமிழர் இயக்கத்துடன் பொது மேடையில் விவாதிக்க இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் தயாரா..? என்று அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி கேள்வி எழுப்பினார்.
அண்மையில் “தமிழர் சமயம் என்று கூறி கொண்டு இந்து மதத்திற்குள் பிரிவினையை உண்டாக்காதீர்கள்” என பத்திரிகை செய்தி வெளியீட்ட திரு மோகன் சான் அவர்களுக்கு அறிவுட்டும் வகையில் யார் தமிழர்..? எது யாருடையது..? எவை திணிக்கப்பட்டது..? என்று தக்க தரவுகளுடன் விவாதிக்க எங்கள் குழு விரும்புகிறது என்றார்.
தமிழர்களின் அடிப்படை வரலாறு கூட தெரியாத இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் “தமிழர் சமயம் என பேசுபவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறுவதற்கு, அவருக்கோ அவரின் இந்து சங்கத்திற்கோ எந்த அருகதையும் கிடையாது எனவும் அடுத்த முறை பத்திரிகை செய்தி வெளியீடும் போது ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் துணை கொண்டு தெளிவு பெற்று பின்னர் அறிக்கை விடுமாறு அறிவுரை வழங்கினார்.
50,000 ஆண்டுகள் மூத்த வரலாற்று பெறுமை கொண்ட தமிழர் தேசிய இனத்திற்கு 5,000 ஆண்டுகள் கூட ஆகாத இடையில் வந்த இந்து மதம்/சமயம் எப்படி தலைமையேற்க முடியும்..? இந்தியர்கள் என்ற பெயரே இந்தியா எனும் நாடு பிறப்புக்கு பின்புதான் வந்தது. அதுவும் வெள்ளையர் அந்நாட்டு பல இன மக்களை மொத்தமாக அழைத்து. இந்தியா என்ற பெயர் பிறப்புக்கு முன்பே “பைந்தமிழ் நாடு” என்று பெயர் கொண்டு ஆண்டு வாழ்ந்த நாங்கள் யார்..? நாங்கள் பின்பற்றிய சமயம் என்ன..? வெள்ளையர் அழைத்த பெயர் எப்படி எங்கள் இனமாகும்..? என கேள்வி கணைகளை அடுக்கினார் திரு. வீ. பாலமுருகன்.
தமிழர் சமயத்தில் அடங்கிய சைவம், வைணவம், சன்மார்க்கம், இயற்கை வழிபாடு, குலதெய்வம் வழிபாடு போன்ற மீட்சிக்கு தமிழர்கள் நாங்கள் பணிசெய்வது ஏன் உங்களுக்கு உறுத்துகிறது..? எற்கனவே முந்தைய அரசுக்கு வழங்கிய பொது விடுமுறை பாரத்தில் மலேசிய தமிழர்களுக்கு நீங்கள்தான் தலைவர் என்று கையப்பம் இட்டு திறந்த வீட்டுக்குள் ஏதோ நுழையவது போல் நுழைந்து தமிழர்களின் கோபத்திற்கு ஆளானது மறந்திருக்க மாட்டீர் என்றார்.
தமிழருடைய வரலாறு அறியாத, தமிழருடைய வாழ்வியலை தெரியாத, தமிழருடைய மரபுகளை விளங்காத திரு. மோகன் சான் எப்படி தமிழர் சமயத்தை நிர்ணயிக்க முடியும்..?
தமிழர்கள் தங்களது வாழ்வியலை உணர்ந்து மீட்டெழுந்தால் அவர்கள் பிரிவினைவாதிகளா..? தமிழர்களே அறியாமையிலே வைத்து ஆளலாம் என்ற சூச்சம பருப்பு இனி வேகாது..! தமிழர்கள் தன் சொந்த இன வரலாற்றை உணர்ந்து விட்டார்கள். தான் வந்த வாழ்வியல் வழிகளை தெளிந்து விட்டார்கள். “இந்து, இந்தியர்கள்” எனும் நயவஞ்சக சூழ்ச்சிகள் ஒருபோதும் இனி பழிக்காது..!
அவரவர் அவர்தம் இனத்திற்கும், மொழிக்கும், சமய பண்பாடு மீட்சிக்கு பங்காற்றி கொள்ளுங்கள் வாழ்த்துகிறோம். அதைவிடுத்து தமிழர்கள் இனத்திலோ, மொழியிலோ, சமயத்திலோ மற்றும் ஏனைய விடையத்திலோ மாற்றான்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாங்கள் யாருடைய இன விடயத்திலும் தலையிடுவதில்லை. அப்படி மீறி மூக்கை நுழைந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டிய கடமை தமிழர்கள் எங்களுக்கு ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம் என்றார்.
இந்நாட்டில் இருக்கும் தமிழ்ப் பள்ளியும் தமிழ்த் திருகோவில்களும் தமிழர் இனத்தின் கண்கள். எப்படி தமிழ்ப் பள்ளியில் தமிழ்க் கல்வி அடிப்படை உரிமையோ அதே போல் தமிழ்த் திருக்கோயில்களில் தமிழர் சமயம் வழி தமிழில் வழிபாடும் எங்களின் அடிப்படை தார்மீக உரிமையாகும்.
எனவே இந்து சங்க தலைவர் மோகன் சான் எங்கள் சவாலை ஏற்று களத்திற்கு வரவேண்டும். எங்களோடு வாதிட்டு வென்று காட்ட வேண்டும் என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
இந்து சங்கத் தலைவரின் கருத்துக்கு விளக்கமும் மறுப்பும் மலேசிய சைவ சமயப் பேரவை கடந்த 14-7-2018-ல் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை கீழ்காணுமாறு
பத்திரிக்கை அறிக்கை
மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘தமிழர் சமயம் என்று கூறிக் கொண்டு இந்து மதத்திற்குள் பிரிவினையை உண்டாக்காதீர்’ என்றொரு பத்திரிக்கை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் மலேசிய சைவ சமயப் பேரவை ’இந்துக்களை இழிவுபடுத்தியும் குருமார்களையும் அர்ச்சகர்களையும் குறைகூறிக் கொண்டும் தமிழை முன்னிறுத்திப் பேச சமஸ்கிருத மந்திரங்களை பின்தள்ளி குறைகூறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதை மறுத்து மலேசிய சைவ சமயப் பேரவையின் பேச்சாளரும் முன்னாள் துணைத் தலைவருமான திரு. மு. கமலநாதன் தமது அறிக்கையில் கீழ்காணுமாறு கூறியுள்ளார்.
‘இந்துமதம்’ என்பது ஒரு மதமன்று மாறாக இந்தியாவில் தோன்றிய பல மதங்களைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல் என்பதை மலேசியத் தமிழர் அறிய வேண்டும். இதற்குச் சட்டப்பூர்வ சான்றாக விளங்குவது இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவாகும். அப்பிரிவில் ‘இந்து’ என்பதற்கான விளக்கம் கீழ்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
“..the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be constructed accordingly”
ஆகையால் ‘இந்து’ என்னும் சொல்லால் இறை கோட்பாடுடைய சைவ மற்றும் வைணவ சமயங்களுடன் இறை மறுப்புடைய இதர மதங்களும் சேர்த்தே குறிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தமிழர் தம்மை ‘இந்து’ என்று கூறிக் கொண்டால் அவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்பது புரியாது. தமிழர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்றும் புரியாது. இத்தகைய விளங்கா விளக்கமாயிருக்கும் இந்து என்னும் சொல்லில் தமிழரை அடைத்து வைத்துவந்ததால்தான் திராவிடக் கருத்தியல் கொண்டோர் வழி தமிழரிடையே நாத்திகம் பரவுவதற்கு வழி ஏற்பட்டது., இந்து மதத்தில் நாத்திகம் ஏற்கப்படுகின்றது என்னும் விளக்கம் சமீபத்தில் தமிழகத்தில் நடைப்பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் சங்க கூட்டத்தில் வெளிப்படையாவே பேசப்பட்டு தமிழ்நாட்டு பத்திரிக்கை அறிக்கைகளின் வாயிலாக அறியப்பட்டது. இவ்வாறு தமிழர் அவர்தம் சமயம் எதுவென்று அறியாமல் அச்சமயம் கூறும் வாழ்க்கை நெறி, வழிபாட்டு நெறி எதுவென்றும் தெரியாமல் வாழ்வதானது தமிழர்களுக்கு ஒர் இழுக்காகி வருகின்றது.
இந்தியாவின் தென்னகத்தில் தோன்றிய சமயங்களில் சைவமும் வைணவமும் தொன்றுதொட்டு தமிழரின் சமயங்களாக இருந்து வருகின்றன. அவற்றிற்குத் தனித்தனி சமய கோட்பாடுகளும் வழிபாடு நெறிகளும் அடங்கிய நூல்கள் தமிழில் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. சிவனைப் பரம்பொருளாக ஏற்று வாழும் சைவர்களுக்குச் சிவாகமங்கள் முதல் நூலாகவும், அவற்றின் கருத்தை விளக்கும் தோத்திரங்களாக தமிழில் திருமுறைகளும், கோட்பாடுகளையும் நெறிகளைகளையும் விளக்க மெய்கண்ட சாத்திர நூல்கள் பதினான்கும் உள்ளன. மலேசியாவில் தமிழர் வழிபடும் பெரும்பாலான தெய்வ ஆலயங்கள் சைவத்திற்கு உட்பட்டு சிவாகம நெறிகளின் அடிப்படையில் நிறுவப்பட்டு தினசரி, சிறப்பு, வருடாந்திர திருவிழாக்கள் என பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆகையால் மலேசிய வாழ் தமிழரில் பெரும்பான்மையோர் சைவ சமய நெறிகளைப் பின்பற்றி வாழ்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை. இவ்வுண்மைகளை மலேசிய வாழ் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு முறையாக சைவ சமயக் கல்வியைப் போதித்து நல்வழி காட்டுவதை மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் சைவ நற்பணி மன்றம் போன்ற இன்னும் பல சைவ சமய மன்றங்களும் இயக்கங்களும் சேர்ந்து செயலாற்றி வருகின்றன. அதன் அடிப்படையில் மலேசிய வாழ் தமிழரில் பெரும்பாலோர் பின்பற்றும் சமயம் சைவ சமயமென்று அறிந்து அதன் வழி இச்சைவ இயக்கங்களால் வழி நடத்தப்பட்டு வருகின்றனர் என்பது வரவேற்கப்பட வேண்டிய நல்லதொரு சமய வளர்ச்சியாகும்.
இதற்கு முட்டுக்கட்டையாக மலேசிய இந்து சங்கம் அறிக்கைகளை வெளியிட்டு வரும் செயல் வருந்தத்தக்கதாகும். சைவ சமயத்திற்குரிய சித்தாந்த சமயக் கல்வியை மலேசிய வாழ் தமிழர்களுக்குத் தெளிவாகப் போதித்து வரும் இவ்வேளையில், இந்து மதத்திற்குள் பிரிவினையை உண்டாக்குகின்றோமென்று அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை மலேசிய இந்து சங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமாய் மலேசிய சைவ சமயப் பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய செயலானது சைவத்திற்கு எதிரான குற்றச்சாட்டாகவே தமிழ்ச் சைவர் கருதுகிறோம்.
மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சனாதன தர்மம்’ என்று அவர்தம் அறிக்கையில் கூறியுள்ளார். அதன் பொருளாவது, வைதிக நெறி கூறும் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணத்தார்களாகப் பிரித்து அவரவருக்கு வகுத்துக் கூறிய செயலில் நிலையாக நின்று வாழ வேண்டுவதே சனாதன தர்மமாகும். இவ்வகை பிரிவினைவாத கோட்பாடுகள் அடங்கிய நெறிகளை பல நூற்றாண்டுகளாக தமிழர் மீது ஏத்தி தமிழர் பல்வேறு குலங்களாகப் பிரிந்து வாழ வழியேற்படுத்தியதே அந்த சனாதன தர்மம்தான் என்று அறியாமல் அச்சங்கத் தலைவர் அறிக்கை விடுவதானது அவர்தம் சமயத் தெளிவைக் காட்டவில்லை என்பது வெள்ளிடைமலை.
ஆகையால் தமிழர் அவர்தம் சமயம் யாதென அறிந்து அதன் நெறி காட்டும் வழிகளில் நின்று வாழ்வதே இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தமிழர் சமய வளர்ச்சிக்கு நல்வழிகோலுமென்பதை அறிந்து செயல்பட்டால் தமிழர் அவர்தம் சமயத்தால் குல வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடலாம். தமிழர் அவர்தம் சமயக் கோட்பாடுகளை அறிந்து அதன் மேன்மையையும் மான்பையும் உணர்ந்து வாழ்வோமானால் தமிழரைப் பிற மதத்தவர் மதம் மாற்றும் செயல்களிலிருந்தும் காப்பாற்றலாம். இதை மலேசிய இந்து சங்கம் புரிந்து கொண்டு இந்நாட்டு இந்தியர்களில் பெரும்பான்மையோராக வாழும் தமிழரின் சமய வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்க வேண்டாமென்று மலேசிய சைவ சமயப் பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு தமிழரின் சமயம் வளர்ச்சியடையும் பொழுதுகூட நாம் மற்ற இந்திய மதங்களைச் சார்ந்தோரோடு மனித நேயத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதில் தமிழருக்குத் தடைக்கல் ஏதுமில்லை. ஆகையால் மலேசிய இந்தியர்களிடையே தமிழ்ச் சைவர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றோமென்னும் குற்றச்சாட்டும் அடிப்படையற்றதாகும்.
இறை வழிபாடு என்பதானது பக்தர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காகச் செய்யப்படும் கிரியையாகும். அதனால் அவரவருக்குப் புரிந்த தாய்மொழியில் வழிபடுதே சிறப்பான வழிபாடாக அமையும். அதன் அடிப்படையிலேயே தமிழர் அவர்தம் இல்ல கிரியைகளையும் கோயிற் வழிபாடுகளையும் தமிழில் செய்திட வேண்டுமென்று மலேசிய சைவ சமய இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதில் மலேசிய இந்து சங்கம் குறை காண்பதேன் என்று தமிழ்ச் சைவருக்குப் புரியாத புதிராக உள்ளது..
சிவ ஆகமமே தமிழில் வழிபாடு செய்ய இடம் கொடுக்கும் பொழுது அதற்குத் தடை போட மலேசிய இந்து சங்கத்தின் உரிமை யாது என்பதை அச்சங்கத்தின் தலைவர்தான் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டு கோயில்களில் சமசுகிரத மொழியில் மட்டுமே வழிபாடுகள் செய்யப்பட வேண்டும் மாறாக தமிழில் வழிபாடு செய்ய தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவிடக்கூடாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் திரு. வி.எஸ் சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து 2008ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டுக் கோயில்களில் தற்போது நடந்து வரும் வழிபாட்டு முறைகளோடு தமிழிலும் வழிபாடு மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதை மலேசிய இந்து சங்கத் தலைவர் அறிய வேண்டும். அந்நீதிமன்ற தீர்ப்பின் இறுதியில் கூறப்பட்டத் தீர்ப்பை தமிழர் அனைவரும் படித்துணர இவ்விடம் மறுபதிப்புச் செய்கிறோம்.
“50. In the light of the above and in the light of the earlier decisions, there is nothing either in the Agamas or in any other religious script to prohibit the chanting of Tamil manthras in the temples run under the administration of the HR&CE Department. In fact, the present attempt by the respondent State is not to replace either the existing practice with a new practice nor there is any encroachment into the time tested practice of the rituals and customary and practices in the temples in Tamil Nadu.
51. On the contrary, the choice is vested with the devotees to seek for their archanas to be performed at their wishes by chanting the manthras either in Tamil or in Sanksrit. This is not a method of replacing the traditional poojas offered 6 times or 4 times, as the case may be, but only in addition to the regular poojas performed in the temple. Ultimately, it is the devotees or bhakthas who wish that their prayers or wishes to be answered by the God and the petitioners cannot interdict their personal ego in the matter of a facility being provided to the devotees in the State. Their attempt to portray as if the God can understand only Devanagari language and Tamil cannot stand on par with that language is only stated to be rejected and it does not have any foundation based upon any scripture or religious texts.”
தமிழ் மொழி எம்மொழிக்கும் தாழ்ந்த மொழி இல்லை. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவும் வழிபடவும் ஆகமத்திலோ அல்லது வேற்றொரு சமய நூலிலோ ஆதாரமில்லை என்று சொல்லி விட்டப் பிறகுமா மலேசிய இந்து சங்கத்திற்கு தமிழின் மான்பும் மேன்மையும் புரியவில்லை.
ஆகையால் தமிழில் வழிபாடு செய்ய வேண்டுமென்னும் கோரிக்கையை மலேசிய தமிழ்ச் சைவர் முன் வைப்பதானது மலேசிய அரசியல் சாசனப்படி அவர்தம் உரிமையாகின்றது. இதனை முன்னிட்டு மலேசிய இந்து சங்கம் எவ்வித சட்ட நடவடிக்கையை மேற்கொண்டாலும் அதனை எதிர்கொள்ள மலேசிய தமிழ்ச் சைவருக்கு தடையேதுமில்லை என்பதை இவ்வறிக்கையின் வழி மலேசிய சைவ சமயப் பேரவையின் பேச்சாளர் திரு. மு. கமலநாதன் தெரிவித்தார்.
தேதி: 14-7-2018
பேச்சாளர், மலேசிய சைவ சமயப் பேரவை &
பேரவையின் முன்னாள் துணைத் தலைவர்
மேலே பதிவிடப்பட்ட பத்திரிக்கை அறிக்கையில் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தியில் ” ..சமய நூலிலோ ஆதாரமில்லை..” என்பதைத் திருத்தி ‘..சமய நூலிலோ தடையில்லை..’ என்று வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன். சிவசிவ
அன்புமிகு எனதருமை பிரியமுள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்..தமிழர் சமயமே சிறந்தது தமிழர்களுக்கு…
நன்றி…
Dr.வர்மா..