திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன்? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ்மொழியில் ஓதி வழிபாடு செய்வதால் யாருக்கு என்ன சிக்கல் வரப்போகிறது? எதற்காக இதனை ஒரு பெரிய சிக்கலாக மக்களிடம் கொண்டு சேர்க்க மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் இவ்வளவு சிரமப்படுகிறார், என்று தமிழர் தேசிய இயக்கங்களான தமிழர் களம் மலேசியா பேரியக்கம், மலேசிய சைவ நற்பணி கழகம், மலேசிய சைவ சமயப் பேரவை, தமிழர் வளர்ச்சி மன்றம், அறிவுசார் இளந்தமிழர் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பாளர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இந்து சங்கத் தலைவர், ஏற்கனவே தமிழர்கள் தங்களின் புத்தாண்டு எது என்று முடிவு செய்தபோதும், இப்படித்தான் அதிமேதாவித்தனமாக அந்தச் சிக்கலில் மூக்கை நுழைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இந்தியர் என்ற வட்டத்திற்குள் வாழும் பிற இனத்தவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏன் மோகன் ஷான் எதிர்ப்புகள் தெரிவிப்பதில்லை என்று தெரியவில்லை. மற்றவர்கள் அவரவர் புத்தாண்டுகளை இனம் சார்ந்து கொண்டாடும் போது வாய்மூடி நிற்கும் மோகன் ஷான், ஏன் தமிழர்கள் தங்களுக்கான புத்தாண்டு எது என்று வரையறை செய்யும் போது அதில் தலையை நுழைத்து கலகம் செய்கிறார்? மலேசியாவில் வாழும் ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இவர்தான் தலைவரா? உலகின் மூத்த இனமாகக் கருதப்படும் தமிழர்களுக்கான வழிபாட்டு முறைகளைத் தமிழர்கள் தானே முடிவு செய்யவேண்டும் என்றும் அவர்கள் வினவினர்.
தமிழிலே வழிபாடு செய்தால் மட்டும் தமிழர்களுக்கு விளங்கிவிடுமா? என்று இந்து சங்கத் தலைவர் கேள்விக் கேட்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர்களின் தாய் மொழியான தமிழையும் கேலி செய்து கேவலப்படுத்துவதாகும்.
தமிழர்கள் நாங்கள் தானே இந்துக்கள் இல்லை என்று சொல்கிறோம். இதில் ஒற்றுமைக்கு எங்கிருந்து குந்தகம் வந்துவிட்டது. நீங்கள் இந்து என்றால் இந்துவாகவே இருந்துவிட்டுப் போங்கள். உங்களை யார் இந்து இல்லை என்று சொன்னது. என்று மேற்கண்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள் மோஹன் சானுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இங்கு தமிழர் சமயம் இந்து சமயம் என்று பேதம் கிடையாது என்று மோஹன் சான் கூறியிருப்பது அவரின் சமய அறிவின் ஆளுமையை கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது என்ற அவர்கள், மோஹன் சான் தமிழர் சமயம் என்றால் என்ன இந்து மதம் என்றால் என்ன என்ற சிக்கல் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு வருவதை வரவேற்கிறோம் என்று கூறினர்.
இந்த அழைப்பிற்கு வரவியலாது என்றால், இனியும் நாங்கள் முன்னெடுக்கும் தமிழர் சமயம் என்ற கொள்கையில், மலேசிய இந்து சங்கமும் அதன் தலைவர் மோஹன் சானும் குறுக்கிடாமல் அவர்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கட்டும் என்று மேற்கண்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள் தங்களின் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.