மக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக் குரல்

‘ஞாயிறு’ நக்கீரன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கண் அசைவிற்கு ஏற்ப இயங்கும் மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்.)யில் தற்பொழுது கலகக் குரல் மெல்ல கேட்கிறது.

நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து செம்மையாக செயல்பட தொடங்கிவிட்டாலும், பிகேஆர் கட்சியினரைப் பொறுத்தவரை பிரதமர் நாற்காலியில் அன்வார் அமரும் நாள்தான் அவர்களுக்கு திருநாள்.

அதற்கு ஏற்ப, இன்னும் ஈரொரு மாதங்களில் பிகேஆரில் நடைபெற விருக்கும் உட்கட்சித் தேர்தலின் மூலம் அன்வாரை தேசியத் தலைவராக ஆக்குவதில் அக்கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து முனைப்பு காட்டி வரும் வேளையில் அன்வாருக்கு எதிராக எதிர்ப்புக் குரல் சன்னமாக ஒலிக்கிறது.

ஆனாலும், வலுவான இடங்களில் இருந்து இந்த குரல் ஒலிப்பதுதான் விந்தையாக இருக்கிறது. கட்சியின் மகளிர் பிரிவின் தேசியத் தலைவி பொறுப்பில் இருந்து விலக இருக்கும் டத்தோ ஸுரைடா கமாருடின், கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விருக்கும் அன்வாரை எதிர்த்து யாரும் களம் கண்டால், அது ஜனநாயக முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இத்துனைக்கும், கட்சியின் தற்போதைய தேசியத் தலைமையும் அன்வாரின் துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா பரிந்துரையின்படி ஸுரைடா வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக புதிய அரசாங்கத்தில் பொறுப்பு ஏற்றுள்ளார். இதில், அன்வாரின் ஒப்புதல்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் ஸுரைடா வழியில் கருத்து தெரிவித்துள்ளார். ஆயினும் அவர் அளவுக்கு இல்லாமல், சற்று  குயுக்தியாக பேசியுள்ளார். அடுத்தத் தலைவராக அன்வார் தேர்ந்தெடுக்கப்படுவதை தாம் ஆதரித்தாலும், ஒருவேளை அப்பதவிக்கு போட்டி இருந்தால், கட்சியின் விதிப்படி அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நழுவுகிற மீனைப் போல தன் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வான் அசிசா துணைப் பிரதமராக பொறுப்பு வகிக்க இன்று தேசிய அரண்மனை பச்சைக் கொடி காட்டிவிட்ட நிலையில், சிலாங்கூர் மந்திரி பெசாராக வான் அசிசா முயன்றபோது, மாநில அரண்மனையில் முட்டுக்கட்டை எழுந்தது. அதன் விளைவாகத்தான் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராக நேர்ந்தது.

அப்படிப்பட்ட அஸ்மின், இரண்டாம் தவணையாக அப்பொறுப்பில் தொடர்ந்தபொழுது, மகாதீர்தான் அவரை அதிரடியாக மத்தியக் கூட்டரசில் இணைத்துக் கொண்டார். இது, பிகேஆர் கட்சியில் ரசிக்கப்பட வில்லை என்றாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

கடந்த ஜூன் திங்களில் நோன்புத் திருநாளுக்குப் பின் புதிய மந்திரி பெசாராக அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டபோதுகூட, அதன் தொடர்பில் அக்கட்சியில் சலசலப்பு எழுந்தது. அப்போது, அஸ்மினின் நெருங்கிய ஆதரவாளர் ஷாரி என்று தெரிந்தும் அதற்கு வான் அசிசாவும் அன்வாரும் ஒப்புதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸுரைடாவும் ஷாரியும் இப்படி கருத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இது குறித்து அஸ்மின் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், தான் எந்தப் பதவிக்குப் போட்டியிடப் போகிறேன் எனபதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை; அமைச்சகப் பணியில் மூழ்கியுள்ளதால், இது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்று பூடகமாக அவர் செய்தியாளர்களிடம் பேசி இருப்பதும் ஐயத்திற்கு இடமாகி உள்ளது.

பிகேஆர் தேசியத் துணைத் தலைவராக இருக்கும் அவர், நிச்சயமாக அதற்கும் கீழான பதவிக்கு களம் காண மாட்டார். இருக்கிற பதவியைத்தான் அவர் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுவும், அன்வாருக்கு அடுத்த இடம் என்றிருக்கும் நிலையில், அது குறித்து இன்னமும் முடிவெடுக்க வில்லை என்றால், எங்கோ இடிக்கிறது.

இதன் தொடர்பில் பிகேஆர் கட்சியில் பிரதமர் துன் மகாதீர் மீது ஐயப் பார்வை விழுந்துள்ளதாகவும் தெரிகிறது. அவர்தான், அஸ்மின் அலியை கொம்பு சீவி விடுகிறாரோ என்ற தோற்றமும் கட்சியில் பிரதிபலிப்பதாக ஏற்கெனவே ஊடகத் தகவல் உலா வரும் நிலையில், தற்பொழுது இப்படி யெல்லாம் நடைபெறுகின்றன.

இதற்கு முன்னும் அன்வாருக்கு எதிராக கருத்து பதிவு செய்யப்பட்டது. ஈஜோக் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் அக்கட்சியில் இருந்து விலகிய டத்தோ நல்லா, அன்வாருக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவரை வளைத்துக் கொண்டார்.

அதற்குப் பின், சிலாங்கூர் மந்திரி பெசார் பொறுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக விலக நேரிட்ட டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிமும் அன்வாரை கடுமையாக சாடினார். தற்பொழுது, அவரைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை.

அதற்குப் பின், நாட்டில்  அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில், அதுவும் அன்வார் சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு சுதந்திரமாக செயல்பட முனைந்துள்ள தற்போதைய சுழலில்தான், அவருக்கு எதிராக மெல்லிய குரல்கள் பதிவு செய்யப்படுகின்றன; ஆனால், வலுவான இடத்தில் இருந்து..!