படாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்

மலேசியாவின் ஆறாவது பிரதமரும் மாநில(பகாங் &பேராக்)-தேசிய அரசியலில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றவரும் அதைப்போல மலேசிய நாடாளு-மன்றத்தில் நீண்ட கால உறுப்பினராகத் தொடர்பவருமான டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிராக நகர்த்த வேண்டிய காய்களை ஒரு வழியாக நகர்த்தி முடித்தபின், தற்பொழுது துன் படாவியின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார் பிரதமர் துன் மகாதிர்.

பெட்ரோனாஸ் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும்படி படாவி, அரசல்-புரசலாக அன்றி, நேரடியாகவே நம்பிக்கைக் கூட்டணி அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்; அதுவும், பிரதமரின் சீனப் பயணம் நிறைவுறும் தருவாயில்..;

அன்வாருக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்ட அப்துல்லா படாவியால் மகாதீரின் எண்ணத்தை முழுமையாக பிரதிபலிக்க முடியவில்லை. அதற்கு ஏற்ப, 2004 பொதுத் தேர்தலில், படாவி தலைமையில் தேசிய முன்னணி அபார வெற்றியைப் பெற்றதால், படாவி மேலும் ஊக்கம் அடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் செயலாளர் பென் ஹோக் மர்ம மரணம், இந்துவாக வாழ்ந்த சிலர் இயற்கை எய்தியபின் உடலை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கெனவே மதம் மாறியவர்கள் என்பதால் அவர்களை மையத்துக் கொல்லையில்தான் அடக்கம் செய்ய வேண்டும் சமய அதிகாரிகள் குறுக்கே வந்து நின்ற பல சம்பவங்கள், போலீஸ் காவலில் இருந்த விசாரணைக் கைதிகள்(இந்திய இளைஞர்கள்) மரணமடைந்த சம்பவங்கள், ஷா ஆலம் கம்போங் கருப்பையா என்ற இடத்தில் உடைக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாட்டிடம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மக்களிடையே பொதுவாக ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தின.

பதினொன்றாவது நாடாளுமன்ற தவணை முடிவதற்கு சில மாதங்களுக்கு முன் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணியின் தாக்கம் என எல்லாமும் சேர்ந்து அடுத்தப் பொதுத் தேர்தலில் படாவி தலைமையிலான தேசிய முன்னணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை நாடாளு-மன்றத்தில் இழக்க நேர்ந்தது. அத்துடன், ஐந்து மாநிலங்களில் ஆட்சியையும் பறிகொடுத்தது.

இதனால், படாவியின் பக்கம் சரிவு கண்டது. இதை சாக்காக வைத்து இன்றைய பிரிபூமி கட்சியின் தலைவரும் அப்போதைய பன்னாட்டு வர்த்தக-தொழில் துறை அமைச்சருமான டான்ஸ்ரீ முகைதின் யாசின் படாவி பதவி விலக வேண்டும் என்று கடுமையாக குரல் கொடுத்தார்.

2008 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ அதிகமாக பாதிக்கப்பட்டதால் எழுந்த ஆவேசமா, அல்லது படாவி பதவி விலகினால் நஜிப்தான் பிரதமராக பொறுப்பேற்பார்; எனவே, கட்சியில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தாம் துணைப் பிரதமராக ஆகலாம் என்ற எண்ணப்படி செயல்பட்டாரா ஒருவேளை  அப்போதே மகாதீரின் ஆலோசனையின்படி களத்தில் குதித்தாரா என்பதும் ஒன்றும்  புரியவில்லை. ஆனால், படாவிக்கு எதிராக நஜிப்பைவிட அதிகமாக எதிர்க்குரல் எழுப்பி முழங்கியவர் யாசின்தான்.

படாவியை விரும்பாத மகாதீரின் விரும்பியபடி நஜிப்பும் பிரதமர் ஆகிவிட்டார். ஆனால், அவராலும் மகாதீர் எண்ணப்படி நடந்து கொள்ள முடியவில்லை அல்லது விரும்பவில்லை; ஓர் எல்லைவரை பொறுமை காத்த மகாதீர், வளர்த்த கிடா மார்பில் பாய்வதா என்று நஜிப்பிற்கு எதிராக கருத்து சொல்ல முனைய, அது கடைசியில் அம்னோவிற்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தியது மகாதீரை;.

இதனால், ஆவேசம் கொண்ட நஜிப், பெட்ரோனாஸ் ஆலோசகர்  பொறுப்பில் இருந்து மகாதீரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் படாவியை அமர்த்தினார். அந்தப் பழைய கணக்கைதான் இப்போது தன்னுடைய கோணத்தில் இருந்து நேர்படுகித்துகிறார் மகாதீர்.

பெட்ரோனாஸ் அமைப்பிற்கு(பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட்) நானாவது ஆலோசனை சொன்னேன்; இப்போது எந்த ஆலோசனையும் சொல்லாதவருக்கு எதற்கு ஆலோசகர் பொறுப்பும் அதற்காக அதிகமான ஊதியமும்; எல்லாவற்றையும் விட பெட்ரோனாஸ் இப்போது பன்னாட்டு சந்தையில் நன்கு அறியப்பட்ட நிறுவனம் என்றும் மகாதீர் சார்பில் இதன் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.