பல முறை பலராலும் பலவிடங்களிலும் பல சூழலிலும் சொல்லப்பட்டக் கருத்துதுதான்; ஆனாலும் வாஜ்பாய்க்கு இதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ‘தவறான இடத்தில் சேர்ந்து விட்ட நல்ல மனிதர்’ என்பதுதான் மிக உன்னதத் தலைவராகத் திகழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பொருத்தமான சுருக்கமான விமரிசனம்.
பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்குப் பின், நிலையில்லாத ஆட்சிகள் அடுத்தடுத்து புது டில்லியை சூழ்ந்து கொண்ட நெருக்கடியான தருணம் அது; இந்தர் குமார் குஜ்ராலும்(ஐ.கே. குஜ்ரால்) அப்படித்தான் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் சொற்ப காலத்திற்கு பிரதமராக இருந்தார்.
அந்த சமயத்தில் ஆஃப்கானிய தீவிரவாதிகளால் இந்தியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. அப்போது, வெளியுறவு அமைச்சராக இருந்த வாஜ்பாய் மீது, இந்த விமான கடத்தல் தொடர்பில் எதிரணி சார்பில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவரான குலாம் நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், வாஜ்பாய் மீது நேரடியாகவே குற்றம் சுமத்தினார். வார்த்தைப் போர் முற்றி, முறுகலான சூழல் நாடாளுமன்றத்தை சூழ்ந்திருந்தபோது, நிதானமாக எழுந்த வாஜ்பாய், குலாம் நபி ஆசாத்தைப் பார்த்து அமைதியாக பேச முயன்றார்.. ..
அவரைப் பேச விடாமல் தடுத்த குலாம் நபி, “நான் இன்னும் பேசி முடிக்கவில்லை” என்றார் ஆவேசமாக;. ஆனாலும், பேசுவதற்காக எழுந்துவிட்ட வாய்பாய் உட்காராமல், குலாம் நபியை நோக்கி தன் வலக் கையை நீட்டி, கெஞ்சுவதைப் போல இப்படி கேட்டார்;
“குலாம்ஜி, என் முகத்தைப் பாருங்கள்; இந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணைக் கூட கடத்த முடியவில்லை. என்னைப் போய் விமானக் கடத்தலுடன் தொடர்பு படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?” என்று கெஞ்சலாகக் கேட்டார்.
அவ்வளவுதான், அடுத்த நொடியே நாடாளுமன்றத்தில் இரு தரப்புகளையும் சார்ந்த உறுப்பினர்கள் அத்தனை பேரும், அவைத் தலைவரும் சேர்ந்து வெடிச் சிரிப்பு சிரித்தனர். காவலர்களும் மற்ற ஊழியர்களும்கூட சேர்ந்து தங்களை அடக்க முடியாமல் மரபையும் மீறி கொல்’லென சிரித்தனர். இதில், வேடிக்கை என்ன வென்றால், அதிக நேரம் சிரித்தவர் குலாம் நபி ஆசாத்-தான். அந்த விவாதமே அத்துடன் முடிந்துபோனது இன்னும் குறிப்பிடத்தக்கது;. வாஜ்பாய் குலாமிடம் கேட்ட கேள்வியில் பொதிந்துள்ள பொருள் அத்தனை ஆழமானது. வாஜ்பாய், சொந்த வாழ்க்கையில் மணம் முடிக்காதவர்.
மிகச் சிறந்த பேச்சாளர்; ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலமைப் பெற்ற இலக்கியவாதி; சமஸ்கிருதமும் படித்த பண்பட்ட எழுத்தாளர்; அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்; உள்ளத்தே உதிக்கும் உணர்வுகளை வெள்ளைத் தாளில் பதிப்பதில் சளைக்காத கவிஞர் என்ற பெருமைக்கெல்லாம் உரியவரான வாஜ்பாய் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்தார். அறிஞர் அண்ணாவின் பேச்சையும் கருத்தையும் மிகவும் மதித்த வாஜ்பாய், சமையல் கலையில் கை தேர்ந்தவர் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கென்று தனித்தனி கொள்கை-கோட்பாட்டைக் கோண்ட பல்வேறு கட்சிகளை இணைத்துக் கொண்டு, சாமர்த்தியமாக ஆட்சி செய்த வாஜ்பாயைப் பார்த்து அமெரிக்காவின் மேநாள் அதிபர் பில் கிளிண்டன் ஒரு முறை வியந்து போனார். ஜார்ஜ் புஷ் கூட ஒரு முறை, “ஒரேக் கட்சியைக் கொண்டு ஆட்சியை வழிநடத்துவதில் நாங்கள் எத்தனையோ இடரையும் துயரையும் எதிர்நோக்க வேண்டி இருக்கிறது; ஆனால், வாஜ்பாய் எப்படி 24 கட்சிகளை இணைத்துக் கொண்டு இப்படி அழகாக ஆட்சிக் கப்பலைச் செலுத்துகிறார்” என்று பளிச்செனக் கேட்டாராம்.
ஆர்.எஸ்.எஸ். என்னும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் அமைப்பு, தீவிர போக்கு கொண்ட ஒரு வலுவான இந்து அரசியல் கட்டமைப்பு ஆகும். காந்திக்கு எதிராக துப்பாக்கியை ஏந்திய நாது ராம் கோட்சே கூட இந்த அமைப்பில் பட்டை தீட்டப்பட்டவர்தான். ஏறக்குறைய இந்த அமைப்பிற்கு இணையாகவும் அதற்கு தோள் கொடுக்கவும் என இந்தியாவின் வட பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட கிளை அமைப்புதான் ‘சங் பரிவார்’.
சங் பரிவாரில் இணைந்த ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான வாஜ்பாய், அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டவர். இந்த சங் பரிவார், இந்திரா காந்தி அவசர கால சட்டத்தைக் கொண்டு வந்தபோது ஜன சங்கம் என்று உருமாறி, பின்னர்தான் பாரதிய ஜனதாக் கட்சியாக மாற்றம் பெற்றது.
இப்படி காலமெல்லாம் தீவிர வலச்சாரி போக்கு கொண்ட அரசியல் இயக்கத்தில் வளர்ந்து-இணைந்து வந்தாலும், வாஜ்பாய் தன்னை ஒருபோதும் சமய எல்லையில் நிறுத்திக் கொண்டதில்லை. சமதரும சிந்தனையும் பரந்த அரசியல் எண்ணமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற வாஜ்பாய், பொதுவுடைமைக் கொள்கையுடைய கம்யூனிஸ்ட் தலைவர்களான இந்திர ஜித், கரத் போன்ற தலைவர்கள், சோசலிசக் கொள்கையை உயிர்ப் பிடிப்பாகக் கொண்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்றோர், அண்ணா, கலைஞர், முரசொலி மாறன், வைகோ போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து அரசியல் நடத்த தயங்காதவர்.
மதிப்பிற்குரிய அரசியல் தலைவராக விளங்கினாலும் பெண்மையை எந்நாளும் போற்றியவர் வாஜ்பாய். மதுரை சேவகி சின்னப் பெண், கொல்கத்தாவில் மம்தா பாணர்ஜியின் தாயார் ஆகியோரின் பாதங்களைத் தொட்டு வணங்கிய கோமகனான வாஜ்பாயின் புகழ் இப்புவியில் எந்நாளும் நிலைத்திருக்கும்.