‘ஞாயிறு’ நக்கீரன்-கலைஞரும் எம்ஜிஆரும் இணைந்து மேற்கொண்ட கலைப் பயணத்தின் கடைசி அத்தியாயம் ரிக் ஷாக்காரன் என்னும் திரைப்படம். அதில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலான ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என்று தொடங்கும் பாடலில் ‘நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?; அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று ஒரு வரி இருக்கும்.
கவிஞர் வாலியின் பேனா வடித்த அந்த வரிகள் சரிதான் போலும்!
சட்டத்திற்கு எப்போதுமே நிமிர்ந்து நிற்கத் தெரியாது; சாட்சிகளுக்கும் அதிகாரம் மிக்கவர்களுக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பதுதான் சட்டத்தின் நிரந்தர அட்டவணை என்பதை யெல்லாம் காலம் அவ்வப்பொழுது நிரூபித்து வருகிறது. இதற்கு கட்டியம் கூறும் வகையில், மலேசிய தேசிய அரசியல் மட்டத்தில் பிரதிபலிக்கும் ஒரு சம்பவம் தற்பொழுது நிகழ்ந்துள்ளது.
நிதி அமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மாநில முதல்வராக இருந்தபோது, ஓர் இரட்டை மாடி வீட்டையும் ஒரு நிலத்தையும் சந்தை விலையைவிட குறைந்த மதிப்பிற்கு வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
தேசிய முன்னணி ஆட்சியின்போது தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் லிம் குவான் எங்குடன் பாங் கி கூன் என்ற வர்த்தகப் பெண் பிரமுகரும் சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு கட்டத்தில் இந்த வழக்கின் பிடி கடுமையாக இறுகியதால், லிம் பினாங்கு முதல் முதல்வர் பதவியைத் துறக்கவும் தயாராக இருந்தார். அத்துடன், ஜசெக பினாங்கு மாநிலத் தலைவர் சௌ கோன் இயூ-வை பினாங்கு மாநில முதல்வராக அப்போதே செயல்படுவதற்கு ஆயத்தப்படுத்தியும் வைத்திருந்தார்.
இருந்தபோதும், அடுத்தடுத்த கட்டங்களில் இந்த வழக்கு சற்று தொய்வு நிலையை அடைந்தது. ஒருவேளை, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு லிம்மிற்கு அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப்பட்டால், பினாங்கு மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் சீன வாக்குகளை இழக்க நேரிடும் என்று அஞ்சியதாலோ என்னவோ தேசிய முன்னணி தலைமை, எதற்கும் பதினான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின் இந்த வழக்கைக் கவனிக்கலாம் என்று சற்று ஆறப்போட்டதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் இருந்துதான், தற்பொழுது லிம் குவானும் பாங் கி கூனும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் செப்டம்பர் 3-ஆம் நாள் முதல் இரு வித கருத்துகள் அரசியல் மட்டத்திலும் தகவல் சாதனங்களிலும் பிரதிபலிக்கின்றன.
லிம் விடுவிக்கப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள விமர்சனத்தை அடியோடு மறுக்கும் விதமாக அரச துணை வழக்கறிஞர் முகமட் ஹனாஃபியா சக்காரியா கருத்து தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை கைவிடுவதாக எடுக்கப்பட்ட முடிவு, அரசியல் நோக்கம் கொண்டதல்ல; சட்டத்துறை தலைவர் டோமி தோமஸும் இதில் சம்பந்தப்படவில்லை. மாறாக, வழக்கில் உள்ள அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து சட்டத்துறை சார்பில் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு இது என்று அவர் முட்டுக் கொடுத்துள்ளார்.
அவரைப்போலவே, வழக்கு தொடரப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை இடையில் கைவிடுவது என்பது அரச வழக்குரைஞரைப் பொறுத்தது என்றும் மேலும், ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன், வழக்கு விசாரணையின்போது எந்தக் கட்டத்திலும் சம்பந்தப்பட்ட வழக்கை மேலும் தொடராமல் நிறுத்தும் முழு உரிமை அரசத் தரப்பு வழக்கறிஞருக்கு இருக்கிறது; குற்றவியல் நடைமுறைச் சட்டம் 254-ஆவது பிரிவு அரசாங்க வழக்கறிஞருக்கு இந்த உரிமையை தெளிவாக அளிக்கிறது என்றும் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஜார்ஜ் வர்க்கீசும் இதன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சார்பில் அவர்களுடைய வழக்குரைஞர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் அல்லது சாட்டப்பட்டுள்ள குற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்றும் வர்கீஸ் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.
மொத்தத்தில், ஒரு அரசாங்கத் தரப்பு ஒருவருக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்யலாம்; மறு அரசாங்கத தரப்பு அதே வழக்கை மிட்டுக் கொள்ளலாம். சட்டம் என்னவோ ஒன்றுதான். இதற்குப் பெயர்தான் சட்டம் நாணலைப் போல வளையக் கூடியது என்று வாலி சொன்னதோ?
இதைப் போலத்தான், ஜூலை 12-இல் அன்வார் சிறைவாசம் முடிந்து விடுதலைப் பெறுவார் என்று மே-9 பொதுத் தேர்தலுக்கு முன் தகவல் வெளியான போதும் அதை வரவேற்க மக்கள் நீதிக் கட்சியினர் ஆயத்தமான போதும் குறுக்கிட்ட அப்போதைய உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான ஜாகிட் அமிடி, ஜூன் 12-இல் அன்வார் விடுதலை ஆவார் என்பது உறுதி அல்ல; அது தள்ளியும் போகலாம் என்றார்.
ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்.. .. புதிய அரசு அமைந்த பின், புதிய உள்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டதும் மே 16-ஆம் நாளே அன்வார் விடுதலை ஆனார்.
சிறைச் சட்டமும் சிறைச்சாலையும் ஒன்றுதான்; ஆனால், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களைப் பொறுத்தும் அரசாங்கத் தலைமையைப் பொறுத்தும் எல்லா விதிமுறையும் வளைந்து கொடுக்கும் என்பது அன்வார் விடுதலையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் எல்லா சட்ட திட்டங்களும் ஆளாளுக்கு ஏற்ப வளைந்து நெளிந்துதான் கிடக்கும்போல தெரிகிறது.