தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி!

‘ஞாயிறு’ நக்கீரன் – தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் விழி பிதுங்கிய நிலையில் தலைநகரில் உலா வருகின்றனர். முன்பெல்லாம் மாதக் கடைசியில் ஏதோ ஊதியம் கிடைத்துவிடும். குறைவான சம்பளமாக இருந்தாலும் உரிய காலத்தில் கிடைத்து வந்ததால், அதைக் கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர்.

ஆனால் இப்பொழுதெல்லாம், மாதம் முடிந்ததும் சம்பளம் கிடைப்பதென்பது, இராவுத்தர் வீட்டு குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதையாகிவிட்டது. மலேசியாவில் தமிழ் நாளேடுகள் ஒன்று, இரண்டாகி, அப்படியே மூன்றாகி ஒரு கட்டத்தில் ஏழு வரை எட்டியது. இதனால், தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சி அடைந்ததாகவோ தமிழ் வாசகர்கள் பெருகி விட்டதாகவோ நினைத்தால், அது முற்றிலும் தவறானது.

அப்படி இப்படி என்றாகி, தற்பொழுது நான்கு நாளேடுகள் நிலைபெற்றுள்ளன. இவற்றில் ஏதோ ஓரோர் பத்திரிகையில்  மட்டும்தான் மாதம் முடிந்து, அடுத்த மாதம் தொடங்கிய பின் ஏறக்குறைய ஒரு வார காலத்தில் ஊதியம் வழங்கப் படுகிறது. ஆண்டுக் கணக்கில் தொடரும் இந்த நிலையில், சம்பளத்திற்கே ‘தகினதத்தோம்’ என்பதால், ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை போன்ற அணுகூலங்களைப் பற்றி யெல்லாம் தமிழ்ப் பத்திரிகைப் பணியாளர்கள் நினைத்துப் பார்ப்பதில் கடுகளவும் பயனில்லை;

ஆனாலும், இப்படிப்பட்டவர்களின் நிலைமை ஓரளவிற்கு நலம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், செப்டம்பர் மாதத்தில் ஒன்றரை வாரங்களை எட்டிய நிலையிலும் ஒரு சில நாளேடுகளின் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியம்கூட இன்னும் கிடைக்கவில்லை.

நாட்டின் மையப் பகுதியில் கோலாலம்பூரைச் சுற்றி வாழும் தமிழ்ப் பத்திரிகை ஊழியர்களின் இன்றைய உண்மை நிலைமை இதுதான். இதற்காக, பத்திரிகை உரிமையாளர்களையும் குறைசொல்ல இயலாது. 25 மில்லியனை எட்டுகின்ற மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய இருபதில் ஒரு பங்கு என்ற அளவில் தமிழர்களின் எண்ணிக்கை இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் நான்கு நாளேடுகள் என்பது அதிகம்தான்.

ஏதோ, சூழ்நிலையின் விளைவாக தமிழ்ப் பத்திரிகையை நடத்த முன்வந்து விட்டனர். ஆனால், தமிழ் நாளேடுகள்தான் விற்பனை ஆவதில்லை.

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி, உருமாற்றம், மேம்பாடு என்பதெல்லாம் கட்டட வளர்ச்சி என்பதாகத்தான் அரசியல் -சமூகத் தலைவர்களும், அரசு சாரா அமைப்புகளின் பொறுப்பாளர்களும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ப் பள்ளி மணவர்கள் என்றால் பாடப் புத்தகங்களை கையாள்வது என்ற மட்டில் தங்களை வரையறுத்துக் கொள்கின்றனர்.

இடைநிலைப் பள்ளியிலும் தமிழைப் படிக்க வேண்டும்; பாட நூல்களைத் தவிர மற்ற நூல்களையும் படிக்க வேண்டும்; நாளேடுகளையும் படிக்க வேண்டும்; எந்நேரமும் படிக்க வேண்டும் – தமிழைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின், குறிப்பாகத் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களின் உள்ளத்தில்கூட தோற்றுவிக்கப்படுவதில்லை.

பெண்கள் அறவே படிப்பதில்லை; குடும்பப் பெண்கள், கல்லூரிப் பெண்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினரும் வாசிப்பதில்லை; தமிழ் நாளேடுகளில் பணி புரியும் பெண்கள் அறவேப் படிப்பதில்லை; பத்திரிகையில் பணி புரிவதே ‘பெருந்தமிழ்ப் பணி’ என்ற அவர்கள் கருதிக்கொள்கின்றனர் போலும். வீட்டிலும் வெளியிலும் பெண்கள் அதிகமாக படித்தால்தான், குறிப்பாக தாய்மார் அவ்வாறு செய்வதைப் பார்க்கும் பிள்ளைகளும் வாசிப்பதில் நாட்டம் கொள்வார்கள். படிப்பார்வம் எல்லா மட்டத்திலும் குறைந்து கொண்டே வந்தால், தமிழ் நாளேடுகள் எப்படித்தான் நிலைபெறும் இந்த மண்ணில்!

முன்பெல்லாம் மெக்னம்-டோட்டோ-பிக் ஸ்வீப் ‘நம்பர்’ வெளியாகும் அடுத்த நாட்களில் சற்று அதிகமாக தமிழ் நாளேடுகள் விற்பனை ஆகும். அந்த வாய்ப்பை இப்பொழுது, புலனம் என்னும் ‘வாட்ஸ்அப்’ வசதி அடியோடு விழுங்கி விட்டது.

இதுவெல்லாம், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள். இவற்றை எதிர்கொண்டு தமிழ் நாளேடுகள் வாழ வேண்டுமென்றால் அவற்றை நடத்தும் முதலாளிமார் மாற்றி யோசிக்க வேண்டும்.. .. யோசிக்கத்தான் வேண்டும்..! வேறு வழி? ஆக்கப் பூர்வமாக சிந்திப்பதையும் செயல்படுவதையும் விடுத்து, ‘ஐயோ, இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க வேண்டுமே; மாதம் முடிந்து விட்டதே; பத்திரிகை விற்பனை ஆகவில்லையே’ என்று தடுமாறுவதால் எந்தப் பயனும் இல்லை.

ஆக்கப் பூர்வமாக சிந்தித்தால் நிச்சயம் நல்வழி பிறக்கும். முதலில், தமிழ் நாளேடுகளின் முதலாளியர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நன்றாக சிந்திக்க வேண்டும்; கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வழி பிறக்கும்.

பத்திரிகைப் பணியாளர்களும் தமிழ் நாளேட்டு விற்பனையை ஊக்குவிப்பதைப் பற்றி சிந்திக்கலாம். இது முதலாளிகளின் வேலை என்று கருதாமலும் நமக்கு ஊதியம் மட்டும் கிடைத்தால் போதும் என்ற அளவில் வாளாயிராமலும் தமிழ்ப் பத்திரிகை கூடுதல் விற்பனைக்கு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு செய்தியாளரும் ஒவ்வொரு பணியாளரும்  எண்ணிப் பார்க்கலாம்.

இந்தக் கட்டத்தில் ஒன்றை கண்டிப்பாக கூற வேண்டும். தமிழ் நாளேடுகளில் ஆசிரியர்களாக வலம் வருபவர்கள் காய்தல் உவத்தல் இன்றி அனைவருக்கும் சமமானவராகத் திகழ வேண்டும்; சமூகப் பற்றுடனும் படைத் தலைவனைப் போன்றும் செயல்பட வேண்டும். இதையெல்லாம் விடுத்து, நமக்கானது நிறைவேறினால் போதுமென்ற மனதுடன் இருப்பது சரியா என்பதை அவர்களே தங்களுக்கு தாங்கள் கேட்டுக் கொள்ளட்டும்.

இவை எல்லாவற்றையும்விட இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் இருக்கிறது. இச்சங்கத்தின் அரும்பணி என்ன வென்றால்.., அதுவும் தொய்வின்றி கடந்த மூவாண்டுகளாகத் தொடரும் அந்த நற்பணி யாதென்றால், ஆண்டுக்கொரு முறை பத்திரிகைப் பணியாளர்களின் குடும்பங்களை ஒன்று திரட்டி சாப்பாடு போடுவதும் பரிசுக்கூடை அளிப்பதும்தான்.

அத்துடன், சங்கத்திற்கும் நிகழ்ச்சிக்கும் நிதி உதவு செய்தவர்களைப் பற்றி வஞ்சகமில்லாமல் செய்திபோட்டு நன்றிக்கடன் ஆற்றுவது. இதைத் தவிர, தமிழ் நாளேடுகள் விற்றால் என்ன? விற்காவிட்டால்தான் இவர்களுக்கு என்ன வந்தது?? பத்திரிகைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைத்தால் என்ன??? கிடைக்காவிட்டால்தான் என்ன நேர்ந்தது இவர்களுக்கு????

இதோ இன்னும் தடபுடலான உணவுடன் அடுத்த ஆண்டு ஒன்றுகூடலுக்கு இவர்கள் தயாராகின்றனர் பாருங்கள்!!!