நிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா!

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட ஒரு மாபெரும் அரசியல் கூட்டணிக் கட்சி, ஆட்சியை இழந்த பின் முதல் முதலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வக்கும் வகையும் அற்றுப்போன கட்சி, அடக்கமாக இருப்பதேச் சிறப்பு.

மாறாக, 14-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான கூட்டம் தொடங்கும் சமயத்தில் நிழல் அமைச்சரவை அமைப்பதாக சொல்வது, ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்று தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்கே அன்றி வேறெதற்கு?

மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக மக்களாட்சி முறை மலர்ந்து ஜனநாயக நறுமணம் உலகெங்கும் பரவியும் நிரவியும் இருக்கின்ற இன்றைய போதில், மலேசியாவின் தேசிய முன்னணிக்கு உள்ளபடியே ஒரு வரலாற்றுப் பெருமை உண்டு.

ஆயிரம் பிணக்குகள் இருந்திருக்கலாம்; கருத்து மாச்சரியம் நிலவி இருக்கலாம்; பொருளாதார ஏற்றத் தாழ்வும் இருந்திருக்கிறது; சமுதாயத்தில் சமன்பாடற்ற போக்கும் காணப்பட்டது; இருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் அமைதிவழிப்பட்ட நாடாக மலேசியாவைத் திகழ வைத்ததிலும்  சமுதாய ஒருங்கிணைப்பு, சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டியதிலும் தேசிய முன்னணி அறுபது ஆண்டுகளாக ஆற்றிய பங்கும் கடப்பாடும் போற்றுதலுக்கு உரியது!

இருந்தாலும், வணிகத்தில் நிகர இலாபம் என்ன என்பதைப் போல, மலேசிய மக்கள் அடைந்த பயன் என்ன என்பதை நடுநிலையோடு நோக்கினால், அனைவருக்கும் உண்மை நிலை பளிச்சென தெரியும்.

தேசிய முன்னணி ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் பண பரிவரித்தனைதான் பரவலாக இடம்பெற்றது; ஊழலை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே ஊழலின் கடைசி எல்லை வரை சென்று அட்டகாச சதிராட்டம் புரிந்தனர். வெள்ளித் தாள்களைப் புரட்டுவதிலும் பதுக்குவதிலும்தான் கவனம் செலுத்தினர்.

அரசியல் தலைவர்களைப் பார்த்துப் பார்த்து, அரச அதிகாரிகளுக்கும் துளிர்-விட்டுப் போனதால் அவர்களும் தங்கள் பங்கிற்கு காரியமாற்றி ஊழல் பெருச்சாலிகளாக அதிகமானவர்கள் விளங்கினர். இஸ்லாமியப் பெருமக்கள் தங்களின் இறைநேசப் பயணத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட அறநிதியத்தில் கூட விழுந்து புரண்டு சுருட்டிக் கொண்டனர் என்றால், கடந்துபோன தேசிய முன்னணி ஆட்சியில் ஊழல் எந்த அளவிற்கு தலைவிரித்தாடியது என்பதை நாமெல்லாம் ஊகிக்கலாம்.

இதனால்தான், தேர்தல் வீழ்ச்சிக்குப்பின், அந்த முன்னணியின் தலைமையால் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை; தான் தலைமை வகித்த சொந்தக் கட்சியில் கூட தேர்தல் முடிவிற்குப்பின் தொடர முடியாமல் போனது.

அப்படிப்பட்ட தலைமையைக் கொண்டிருந்தக் கட்சியான அம்னோ, தன்னத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் இது. புது வடிவம் பெற வேண்டிய இரும்பு எப்படி உலைக்களம் புகுமோ அதைப்போன்ற நிலைக்கு அம்னோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, புத்தாக்கத்துடன் புது வடிவம் பெற்று, நாளைய மலேசியாவை வழிநடத்த தயாராக வேண்டும்.

அதைவிடுத்து, நிழல் அமைச்சரவையை அமைக்கிறோம் என்றெல்லாம் போடுகின்ற வெற்றுக் கூப்பாட்டை நிறுத்திக் கொள்வது அம்னோவிற்கு நன்மையாக அமையும்.

‘ஞாயிறு’ நக்கீரன்.