ஆள் பிரச்னையெல்லாம் ஆலயப் பிரச்னையாக உருமாற்றம்!

பால், பருவம், வண்ணம், வடிவம், அருவம், உருவம், இளமை, முதுமை, உற்சாகம், சோர்வு, மூப்பு, பிணி, தோற்றம், மறைவு, தொடக்கம், முடிவு என்றெல்லாம் எவ்வகைக் கூறுக்கும் ஆட்படாத எட்டாத ஒப்பிலா-உயர்விலா பரம்பொருளை உள்ளத்தால் துய்த்துணரும் பேராற்றலும் பெருவாய்ப்பும் எல்லா மனிதருக்கும் வாய்ப்பதில்லை;

அப்படி வாய்க்கப்பெற்ற பெரியோரைத்தான் ஆன்றோர் என்றும் சான்றோர் எனவும் போற்றுகிறோம்; சித்தர்கள் என்றும் சமய ஞானியர் என்றும் தலை தாழ்த்தி வணங்குகிறோம்.

திருமூல நாயனார், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட நாயன்மார் பெருமக்கள், அண்மைக் காலத்து வள்ளலார் சுவாமிகள், நந்தன் உள்ளிட்ட இறையடியார்கள் எல்லாம் அப்படிப்பட்டவர்கள்தான்.

எல்லாம் வல்ல பரம்பொருளை எளிதாக இல்லாவிடினும்கூட அரிதாகக்கூட அறிய முடியாத.. உணரவியலாத  பாமர மக்களுக்கு விளக்கிச் சொல்லும்பொருட்டுதான் பலவிதமான இறை உருவங்களைப் படைத்ததுடன் அன்றி அவற்றுக்கான புராண கதைகளையும் புனைவான விளக்கங்களையும் சில ஆன்மிகப் பெரியோர்கள் சொல்லி வைத்தனர்.

காலம் செல்ல செல்ல, அறிவியல் அறிவு வளர வளர, வாழ்க்கைச் சூழல் மாற மாற மனிதன் இறைமாட்சிக்கு அஞ்சி வாழும் மனநிலையை அடியோடு தொலைத்துவிட்டு, ஆலயத்தில் இருக்கிற இறை உருவங்களை சமாதானப் படுத்தும் நோக்கில் ஏதாவது பரிகாரம் செய்தால் போதும்; கடவுள் சாந்தமாகி விடுவார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

அதனால், ஒரு முறை ஏதோவொரு  பரிகாரம் செய்தபின், அடுத்த பரிகாரம் செய்யும் காலத்திற்கு இடைப்பட்ட வேளையில் வஞ்சகமில்லாமல் தவறு செய்யலாம்; ஆண்டவன் என்னும் உலகாளும் இறைமாட்சி, ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்துக்குள் மட்டும் முடங்கிக் கிடக்கிறவர்தானே; மிஞ்சிப் போனால் ஆலய வளாகத்திற்குள் வலம் வரக்கூடும்; அவ்வளவுதான்.

அதனால், ஆலயத்திற்கு செல்லும்போது மட்டும் மனம் அஞ்சி-கெஞ்சி இறைவனைப் பணிந்தால் போதும் என்ற மனநிலைக்கு பெரும்பாலான பக்தர்கள் வந்து விட்டனர். பரிகாரம் மட்டும்தான் இறைவழிபாடு.. ..; ஆன்மிக நன்னெறி.. சமய அறிவு என்பதெல்லாம் வேலை அற்றவர்களின் வெட்டிப் பேச்சு என்றாகி விட்டது.

இதனால்தான்,

‘கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது’

என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான பக்தி பாடல்களுக்கு இருக்கும் பெருமையும் புகழும்

‘பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்’ அல்லது

‘தெய்வம் இருப்பது எங்கே?அது இங்கே..(உள்ளம்), அல்லது

‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’

 என்றெல்லாம் தொடங்கும் அற்புதமான இறைநேசப் பாடல்களுக்கு நம் பக்தர்களிடம் இல்லாமல் போய்விட்டது; இறைவனின் பேராற்றாலையும் கருணை வடிவையும் எடுத்துரைக்கும் ஆன்மிக நெறி ததும்பும் பாடல்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை!

இதன் ஒட்டுமொத்த விளைவு சுயநலக்காரர்களும் வணிக நோக்கம் கொண்டவர்களும் ஆலயங்களுக்கு தலைமை ஏற்கும் போக்கு வெகுவாக பரவிவிட்டது. வண்ண ஆடையும் முகத்தில் முடியும் கழுத்தில் ருத்திராக்க மாலையும்தான் ஒருவர் ஆன்மிகத் தலைவர் என்று அடையாளம் காட்டிக்கொள்வதற்கு போதுமான தகுதி என்று ஆகிவிட்டதால், பக்தப் பெருமக்களும் அதே மனநிலக்கு ஆளாகிவிட்டனர்.

தன் பெயருக்கு முன்னால் ஒருவர் எத்தனை ‘சிவ’, ‘சிவ’ என்று போட்டுக் கொண்டாலும் கேட்பார் எவருமில்லை; அதைப்போல ‘ஸ்ரீ’, ஸ்ரீ’ என எத்தனை ஸ்ரீ’ வேண்டுமானாலும் ஒரு போட்டுக் கொள்ள எந்தத் தடையும் இல்லை.

இப்படி யெல்லாம் எந்த வரமுறையும் ஒழுங்குமுறையும் இல்லாத போக்கு தொடர்வதுடன், இத்தகையோர் வழிபாட்டு தலங்களுக்கு தலைமை யேற்கும் நிலையும் தடையில்லாமல் தொடர்கிறது.

2007- இல் கம்போங் கருப்பையா ஆலய விவகாரத்தில் என்ன நடந்ததோ அதுதான் பதினோரு ஆண்டுகள் கழித்தும் அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள சீ ஃபீல்ட் ஆலய  சிக்கலிலும் இன்றைய அளவில் தொடர்கிறது.

மற்ற சமயங்களின் வழிபாட்டு தலங்களுக்கு இப்படி உடைபடும் அல்லது இடம்பெயரும் நிலை வராதபோது நம் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வரிசையாக நேர்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தோட்டப்புற சூழலில் ஏதோ அகப்பட்ட இடத்தில் வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொண்டோம். ஆனால், நாடு விடுதலை அடைந்து அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் அந்தச் சறுக்கலை யெல்லாம் சரிசெய்திருக்க வேண்டாமா இல்லையா?

இடத்திற்கு உரியவர்கள் கேட்கும்பொழுது அசைந்து கொடுப்பதில்லை; நீதிமன்ற நடவடிக்கைக்கும் மதிப்பில்லை; இருக்கின்ற இடத்திலேயே வழிபாட்டுத் தலம் நீடித்தால்தான், மளிகைக் கடை முதலாளியாக இருக்கும் ஆலயத் தலைவருக்கும் உணவகத் தொழில் நடத்திக் கொண்டே ஆலயத் தலைவராக நீடிப்பவருக்கும் தொழில் நடத்த ஆலயம் என்ற கட்டமைப்பு வசிதியாக இருக்கும்.

இதற்கு தோதாக, நூற்றாண்டு பெருமை வாய்ந்த கோயில், இரு நூற்றாண்டு வரலாற்றுக்கு சொந்தமான ஆலயம் என்று வெற்றுக் கூப்பாடு போட்டுக் கொண்டு, தனக்கு வேண்டிய அடியார்(?)களையும் திரட்டிக் கொண்டு, தமிழ் நாளேடுகளில் அறிக்கையும் விட்டுக் கொண்டு, புதிய ஆட்சியில் நான்கு அமைச்சர்கள் இருந்தும் இதற்கு நியாயம் தேடித் தரவில்லை என்று புறம்பேசிக் கொண்டும் சமுதாயத்திலும் ஆன்மிக நெறியிலும் அக்கக்போர் புரிவோரைக் கண்டு..,

“ஏன்யா? சுந்தந்திர நாட்டில் ஊரார் நிலத்தில் வழிபாட்டுத் தலத்தை நடத்திக் கொண்டு என்னய்யா வரலாற்றுப் பெருமை பேசுகிறாய்? உன்னுடைய நிலமாக இருந்தால் இப்படி விட்டுக் கொடுப்பாயா என்று ஒரு பக்தரும் கேட்டதில்லை; கேட்பதுமில்லை; இனி கேட்கப் போவதுமில்லை;

முடிவு, ஆள் பலமும் பண வலிமையும் கொண்டவர்கள்தான் வழிபாட்டுத் தலங்களுக்கு தலைமை ஏற்கும் நிலை தொடரும்..! அடுத்தவர் நிலத்தில் இருக்கும் ஆலயத்தின் வருமானத்தில் மட்டும் குறி வைத்து ஆலயந்தோறும் நிர்வாகச் சண்டை தொடர்வதும் ஆட்களின் பிரச்சினையை ஆலயப் பிரச்சினயாகக் காட்டுவதும் தொடர்ந்தால்.. .., ஆன்மிக நெறி என்னாகும்?

நாளைய சமுதாயத்தின் சமய சிந்தனை எப்படி  நல்வழியில் செல்லும் ??

  • நக்கீரன் –