தாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி செய்திப்பிரிவு பட்டம் சூட்டுகிறது

“சுத்தமான தமிழில் பேசினால் எந்தத் தமிழனுக்கு விளங்கும்?. சாதாரண தமிழில் பேசினால்தான் நன்றாகப் புரியும். இப்பொழுதுகூட ‘நிகராளி’ என்னும் சொல்லை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இந்தச் சொல், தமிழ் வெறியர்களுக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். ஆனால், சாதாரண தமிழனுக்கு எப்படி புரியும்?. ஏன் இப்படி தமிழ் வெறி பிடித்து அலைகிறீர்கள்” என்று மின்னல் பண்பலை வானொலியின் செய்திப் பிரிவு கேட்கிறது; நேரடியாகவே வினா தொடுக்கிறது.

இது, தமிழன்னை பெற்ற பேறு போலும்!

உடனிருந்து இழைக்கும் இரண்டகத்தையும் வஞ்சகத்தையும் காலமெல்லாம் எதிர்கொள்வது என்பதுதான் அந்தப் பேறு. ஆண்டவன் பெயராலேயே அதுவும் எல்லாம்வல்ல பரம்பொருள் குடிகொண்டிருக்கும் எல்லையிலேயே தமிழ்ப் பதிக்கப்பெற்ற ஓலைச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிய தமிழ் இரண்டகம் நடந்ததை நாமெல்லாம் அறிவோம்.

அம்பலத்தே நின்றாடும் கூத்தபெருமானின் திருநாமத்தை ஓதி அவனருள் நாட துணைபுரியும் திருமுறை என்னும் பத்தி இலக்கியம் பதிக்கப்பெற்ற ஓலையேடுகளை அழிக்கும் பணியை அவனெல்லையிலேயே நடத்தியது ஆரியம். இன்றளவும் தமிழை ‘நீஷ’ என்று பழிக்கும் இழிக்கும் ஆரியம், இன்று நேற்றா அந்த வேலையைச் செய்கிறது?; இந்த வஞ்சகம் பல்லாயிர ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஏர் கலப்பையைத் துணைகொண்ட தமிழர் மண்ணில் நிலைபெற்ற செம்மொழியை வீழ்த்த தர்ப்பப்புல் ஏந்திய ஆரியக் கூட்டம் வழிவழியாகப் புரியும் தமிழ் இரண்டகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கிவிட்ட இந்த இரண்டகத்திற்கு, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பன் உள்ளிட்ட பெருங்கவி பெருமக்களே முகம் கொடுக்க நேர்ந்ததையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால், தமிழன் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மொழியால் பிழைப்பு நடத்திக் கொண்டே இப்படி தமிழை இழிக்கும் பழிக்கும் வேலை தொடர்வதற்கு என்ன காரணம் என்று எத்துணைத்தான் எண்ணியெண்ணிப் பார்த்தாலும் மனம்தான் களைப்படைகிறதே  தவிர விடை கிடைக்கவில்லை.

நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், ‘ஜோ லோ’ என்னும் மறைமுக வர்த்தகப் பெரும்புள்ளியை எல்லாம் வல்ல அரசாங்கமே தேடிவரும் நிலையில், அவரைப் பற்றி மின்னல் வானொலி செய்தி அறிக்கையில், ‘தனவந்தர்’ என்று அண்மையில் குறிப்பிடப்பட்டது.

அதற்கு மறுமொழியாகவும் விளக்கமாகவும் இணைய ஏட்டில் நான் விடுத்த அறிக்கையில், அவரைத் தனவந்தர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்வந்தர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நெல், கம்பு, கோதுமை, எள், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களையும் பச்சைப் பயறு, உளுந்து போன்ற பயறு வகை இன்னும் அவரை-துவரை உள்ளிட்ட பருப்புகளை விளைவித்தும் விற்பனை செய்தும் பெரும்பொருள் படைத்தவரை வேண்டுமானால் தனவந்தர் என்று சொல்லலாம்; ஆனால், காலமெல்லாம் கடலில் மிதப்பவரை அல்லது மறைமுக ஊக வணிகம் புரியும் ஜோலோவைச் செல்வந்தர் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

இந்தக் கருத்தில் தவறோ அல்லது நெருடலான கருத்தோ இருந்தால் அதற்கு விளக்கம் அளித்திருக்கலாம். அதைவிடுத்து, தனலெட்சுமி என்று பெயர் கொண்ட பெண்ணில் வீட்டில் நவதானியமெல்லாம் குவியலாகக் கொட்டிக் கிடக்கிறதா? நீங்கள் என்ன பெரும்புலவரா? ஏன் இந்த தமிழ்வெறி என்று கேட்டு மின்னல் பண்பலையின் செய்திப் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் என்னைப் பொறித்து எடுத்துவிட்டார்.

‘தமிழ் வெறியர்’, ‘தமிழ் வெறியர்’ என்று என்னைக் குறிப்பிட்டு தன் வஞ்சத்தையும் ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்டார்.

அத்துடன், சுத்தத் தமிழில் பேசினால் ஒருத்தருக்கும் புரியாது. சாதாரண தமிழில் பேசினாலே போதும் என்றதுடன், மின்னல் வானொலி செய்தி அறிக்கையில் பலுக்கப்படும் நிகராளி என்ற சொல் உங்களைப்போன்ற தமிழ்வெறியர்களுக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும்; மற்றவர்களுக்குப் புரியாது என்றும் அவர் சொன்னார்.

மற்றவர்கள் என்றால், யார் யார் அந்த மற்றவர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை. இவரைப் போன்ற இன்னும் பலர் சொல்வதைப் போல, சுத்தத் தமிழ், அழுக்குத் தமிழ், சாதாரண தமிழ், சாதாரணமல்லாத தமிழ் என்றால் அவை எப்படி இருக்கும்?

தமிழ் என்றால் அது, தமிழ்தான்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணப் பெருமகனார் அறுதியிட்டு உரைத்ததைப் போல, உலகின் முதல் மொழியான தமிழ் மொழி, முன்னர் உலகெங்கும் பரவி விரவி இருந்தது. இடைக்காலத்தில் தமிழர்கள், தம் தாய்மொழியான தமிழின்பால் விட்டேற்றித் தனமாக இருந்ததால் தமிழ் மெல்லச் சிதைந்தது; சுருங்கியது; இன்றளவு இந்நிலை நீடிக்கிறது.

இதற்கெல்லாம் நம் கண்முன்னே தோன்றும் தக்கச் சான்றுகள், தமிழில் சமஸ்-கிருதம் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் துளிர்த்ததும் அந்த இடத்தில் எல்லாம் வாழ்ந்த தமிழ் மறைந்ததுமாகும்.

இவ்வளவு ஏன்?

தமிழினத்தின் முன்மை சிறப்பையும் வாழ்க்கை வளத்தையும் அறனநெறி வழுவா ஆட்சி முறைமையையும் எடுத்துக் காட்டும் மக்கள் காப்பியமும் பெருங்காப்பியமுமான சிலப்பதிகாரத்தை இயற்றிய  இளங்கோ அடிகளின் வழித்தோன்றலினர் இன்று மலையாள மொழிபேசுவோராக அடியோடு மாறிவிட்டனர்.

இவற்றை யெல்லாம் எவரால் மறுக்கவும் மாற்றவும் முடியும்?.

நிகழும் நூற்றாண்டுக்குள் வழக்கொழியும் மொழிகளுள் தமிழும் ஒன்றாக இருக்கும் என்று, ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ பிரிவு இன்றைய நிலையில் சுட்டிக் காட்டியிருப்பதைப் பற்றி, பொதுவாகத் தமிழர்கள் பொருட்படுத்துவதில்லை. ஒன்று, இரண்டு என்று இலக்கத்தைத் தமிழில் உச்சரிக்கும் தமிழரை இன்று காண்பது மிகவும் அரிது என்பதெல்லாம், யுனெஸ்கோவின் கருத்து பலித்துவிடுமோ என்ற அச்சத்திற்கு வலு சேர்க்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் கூட்டாளி, பங்காளி, பாட்டாளி, உழைப்பாளி, உழவாளி, ஏமாளி என்ற சொற்களெல்லாம் தமிழருக்குப் புரியும் நிலையில் நிகராளி என்னும் சொல் மட்டும் எங்ஙனம் புரியாமல் போகும்?. அது, புது சொல்லாகவே இருக்கட்டும்; பலுக்கப் பலுக்க.., பழகப் பழக அறிமுகம் காணும்தானே? வழக்கிற்கும் வரும்தானே??

2004 டிசம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களில் ‘சுனாமி’ என்னும் வேற்றுச் சொல் தமிழர்க்கு எப்படி விளங்கிப்போனது? அந்தச் சொல்லையே எழுதினோம்; அச்சிட்டோம்; படித்தோம்; சொன்னோம். ஆழிப் பேரலை என்னும் நற்றமிழ்ச் சொல்லைக் கொண்டிருக்கும் தமிழுக்குச் சுனாமி எதற்கு?

இப்பொழுதுகூட, சுனாமி-ஆழிப் பேரலை என்று சேர்த்துச் சொல்வதுதான் மின்னல் பண்பலை செய்திப்பிரிவிற்கு வழக்காக இருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமில்லை, ‘ஐம்பதாமாண்டு பொன்விழா’, ‘இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழா’ என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு எப்படி மாற்றிக் கொள்ளத் தோன்றும்!.

ஏன், பொன்விழா, வெள்ளி விழா என்றால் தெரியாதா? யாருக்கு விளங்காது??. மாற்றிக் கொள்ள உங்களுக்கு மனமில்லை என்பதுதான் உண்மை. ‘Undivided  Support’ என்னும் ஆங்கில சொற்றொடரை ‘ஒருமித்த ஆதரவு’ அல்லது ஒன்றுபட்ட ஆதரவு என்று சொல்ல மனமில்லாமல் ‘பிளவுபடாத ஆதரவு’ என்று காலமெல்லாம் சொல்லிக் கொள்ளும் நீங்கள் நிகராளி என்னும் சொல்லை சொல்ல மனமில்லாவிட்டால், விட்டுவிடுங்கள். அதற்காக, ‘நிகராளி’ என்ற சொல்லையும் சொல்லிவிட்டு, இது தமிழ் வெறியர்களுக்கு மட்டும் இனிக்கும் என்பது சுத்த சண்டித்தனம்.

உலகத் தாய்மொழி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? அவரவர் தத்தம் தாய்மொழியைப் பேண வேண்டும் எனபதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தத்-தானே?

தேசிய மொழியில், மொழிதான் இனத்தின் உயிர் என்று சொல்லப்படுவதன் பொருள் நன்கு தெரிந்திருந்தும், தாய்மொழியின்பால் பற்றுகொண்ட எங்களைப் போன்றோரை தமிழ் வெறியர் என்று குறிப்பிடும் தடித்தனப் போக்கை காலமெல்லாம் கைக்கொள்ளும் தனம் உங்களைப் போன்ற சிலருக்கு ஏன்?

இன்றையத் தமிழர்கள் தமிழின்பால் விட்டேற்றியாக இருக்கும் நிலை தொடரும்வரை உங்களைப் போன்றோரின் இந்நிலையும் தொடரத்தான் செய்யும்! பாவேந்தரின் ஈட்டி முனை வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்.. ..,

“ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்”

என்னும் நிலை தமிழரிடையே நீடிக்கும்வரை, ‘தமிழ் வெறியர்’ என்னும் பட்டத்தை நாங்கள் சுமக்கத்தான் வேண்டும்.!

ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது. இயற்கை வெளிப்பாட்டின் அத்தனைக் கூறுகளையும் வசப்படுத்தத் தெரிந்த மனிதனுக்கு மின்னலை மட்டும் அவ்வாறு ஆகவில்லை. கோடிக்கணக்கான ‘வோல்ட்’ மின்னாற்றல் கொண்ட மின்னலுக்கு, அகப்பட்டதை யெல்லாம் தீய்க்கத்தான் தெரிகிறது.

அதனால்தானோ என்னவோ, மின்னலின் செய்திப் பிரிவிற்கு அவ்வப்போது தமிழுக்கு திடீர் வெளிச்சத்தைத் தந்தாலும் கூடவே தமிழைத் தீய்க்கும் குணமும் தொடர்கிறது போலும்!!.

காலமென்னும் நல்லாசிரியர்தான் இதற்கெல்லாம் தீர்வு சொல்ல வேண்டும். !!!

– நக்கீரன்