டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம் டாலர் யாருக்கு?

‘ஞாயிறு’ நக்கீரன்

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் இலக்கியப் பரிசாக பத்து ஆயிர அமெரிக்க டாலரை நான்காவது முறையாக வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் பரபரப்பும் ஆர்வமும் எழுந்துள்ளன.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அமைத்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் சார்பில் நான்காவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

இலக்கியப் படைப்பு ஓர் இனத்தின் காலக் கண்ணாடி என்பதாலும் சமூக-பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு அது என்பதாலும் அதை தமிழ்ப் படைப்பாளிகளின் மூலம் வெளிக்கொணரும் நோக்கில் கடந்த 2012 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பன்னாட்டு புத்தகப் பரிசுப்போட்டி டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் திங்களில் நான்காவது போட்டி குறித்து அறிவிக்கப்பட்ட பின் இதற்கான நடைமுறை சுமார் ஓராண்டாகத் தொடர்ந்த நிலையில், நடுவர் பெருமக்களால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இப்பொழுது பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

கூட்டுறவு சங்க தோட்ட மாளிகையில் நவம்பர் 17-ஆம் நாள், சனிக்கிழமை மாலை 4:00 மணி அளவில் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமையிலும் அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலையிலும் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பன்னாட்டுப் பிரிவில் ஒரு வெற்றியாளரும் மலேசிய அளவில் ஒரு வெற்றியாளரும் அறிவிக்கப்பட உள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து  மூன்று நடுவர்கள் இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். பன்னாட்டுப் பிரிவு வெற்றியாளருக்கும் பத்தாயிர அமெரிக்க டாலரும் மலேசிய வெற்றியாளருக்கு பத்தாயியிர மலேசிய வெள்ளியும் வழங்கப்பட உள்ளன. 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் போட்டியில் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற படைப்பிற்காக ஈழ எழுத்தாளர் மு.பொன்னம்பலம் பத்தாயிர டாலரை வென்ற வேளையில், ‘விடியல்’ என்ற நூலிற்காக மலேசியப் படைப்பாளி அ.ரெங்கசாமி பத்தாயிர வெள்ளியைத் தட்டிச் சென்றார்.

2014-ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற நூலிற்காக தமிழகத்தின் கவிப்பேரரசு வைரமுத்துவும் மலேசியப் பிரிவில் ‘செலாஞ்சார் அம்பாட்’ என்னும் படைப்பிற்காக கோ.புண்ணியவானும் பரிசுகளை வென்றனர். அதைப்போல, 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவு, உள்நாட்டுப் பிரிவு ஆகிய இரண்டிலுமே மலேசியர்கள் வென்றனர். ‘அழகான மௌனம்’ நூலிற்காக முனுசாமி கன்னியப்பன் பன்னாட்டுப் பிரிவிலும் ‘காத்திருந்த விடிய’லுக்காக திருமதி விமலா ரெட்டி உள்நாட்டுப் பிரிவிலும் வாகை சூடினர்.

தற்பொழுது நடைபெறவுள்ள நான்காவது போட்டியில் 2016, 2017-ஆம் ஆண்டுகளில் நாவல், ஆய்வுப் படைப்பு, வரலாற்று நூல், ஒரே எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு, அதைப்போல ஒரே எழுத்தாளரின் கவிதைத் தொகுப்பு ஆகிய படைப்புகளை வெளியிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுவரை ஈழ, தமிழக, மலேசியப் படைப்பாளிகள் பன்னாட்டுப் பிரிவின்வழி 10,000 டாலரை வென்றுள்ள வேளையில், இம்முறை சிங்கப்பூர் எழுத்தாளருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா அல்லது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளருக்கு பன்னாட்டுப் பரிசு வசப்படுமா என்பது வரும் சனிக்கிழமை தெரிந்துவிடும்.

ஒருவேளை, மலேசிய, தமிழக, ஈழப் படைப்பாளிகளே மீண்டும் வெல்வரா என்பதும் அன்று தெரிந்துவிடும்.