சீ பீல்டு மஹா மாரியம்மன் ஆலயத்தை தற்போதுள்ள இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும் என்று போராடும் தன்னார்வலர்களும், ஆலய பொறுப்பாளர்களும் கொள்கையற்றவர்கள் என்றும் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் என்றும் குழப்பமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜனநாயக செயல்கட்சியின் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் கணபதி ராவ்.
இதில் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற வாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். ஆலயம் உடைபடாமல் தற்போதுள்ள இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்று போராடுவதில் என்ன அரசியல் நோக்கத்தை கணபதி ராவ் கண்டார் ? ஆலயத்தின் தொன்மையும் வரலாறும் நிலைநிறுத்தப் படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் எவ்வகையில் இவர்கள் கொள்கை இல்லாதவர்கள் ஆகி விட்டார்கள் ?
மேலும் கடந்த 11 மார்ச் 2014-இல் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதிலிருந்து மாநிலஅரசு பின்வாங்காது என்றும் கணபதி ராவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதே தீர்ப்பில் ஆலயத்திற்கு என்று வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மாற்று நிலம் (A) செல்லப்பா என்ற நபரால் ஆலய நிர்வாக மற்றும் பொறுப்பாளர்களிடம் இருந்து எவ்விதமான முறையான ஒப்புதலும் இன்றி 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு மேம்பாட்டு நிறுவனத்திடம் கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செல்லப்பாவின் இந்த செயல் மூலம் நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது. ஆனால் ஆலயத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை செல்லப்பா மேம்பாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது பற்றி கணபதி ராவ் அறிக்கையில் ஒருவரி கூட இல்லாதது வியப்பளிக்கிறது. மாநில அரசு தனது கொள்கையிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று கணபதிராவ் கூறுவதை ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் அத்தகைய கொள்கையில் நிதர்சனமும் இருக்க வேண்டும்.
பணமும் அதிகாரமும் உள்ள மேம்பாட்டு நிறுவனத்தார் போன்றோர் கொள்கைகளுக்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்களா என்ன ? பணம் படைத்தவர்களின் விதிமீறல்களை மாநில அரசாங்கம் கண்டுகொள்ளாதிருக்க முடியாது என்பது கணபதி ராவ் அறியாத ஒன்றல்ல.
மேம்பாட்டு நிறுவுனத்தின் அத்துமீறல்களையும் குறிப்பிட்டு நியாமான நடுநிலையான அறிக்கையை கணபதி ராவ் வெளியிட்டிருக்க வேண்டுமே தவிர ஆலய எதிகாலத்திற்காகபோராடிக் கொண்டிருப்பவர்களை மட்டும் ஒருதலைபட்சமாக சாடி இருப்பது விவேகமல்ல.
மேலும் சீ பீல்டு ஆலய தற்கால போராட்டம் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொது மக்களைக் குறித்தும் தொடர்ந்து கணபதி ராவ் வெளியிடும் கருத்துகள்அவருடைய சொந்த கருத்துகளா அல்லது அவர் சார்ந்திருக்கும் டிஎபி கட்சியின் நிலைப்பாட்டை குறிக்கின்றனவா என்றும் அவர் தெளிவு படுத்த வேண்டும்.
கி. தமிழ்ச்செல்வன்
சீ பீல்டு ஆலய பாதுகாப்பு குழுவினரில் ஒருவர்.
16.11.2018