மனித வாழ்க்கையில் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றி பல எதிர்பார்ப்புக்களுடனேயே வாழ்கிறான்.
உயர் பதவிகள் வகிக்க வேண்டும், பணக்காரனாக வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், காதலில் வெற்றிப் பெற வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என பல்வேறு எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்கிறான். இவற்றில் ஏதாவது ஒன்று நிறைவேறாவிடினும் வாழ்க்கையே துன்பமாகி விட்டதாக எண்ணுகிறான்.
ஒரு பெண் பலவாறான எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்வில் நுழைகிறாள். அவளது எதிர்பார்ப்புகள் முரண்படுகையில் ஏமாற்றமடைகிறாள். ஒரு இளையன் நல்ல வேலை வாய்ப்பை எண்ணி காத்திருக்கிறான். அது கிடைக்காவிட்டால் அவனது எதிர்பார்ப்புகள் முறியடிக்கப்படுகின்றன. இத்தகைய நிலை வாழ்க்கையில் பிடிப்பின்மையை ஏற்படுத்துகிறது.
நாம் சிலரிடம் வாழ்க்கை எப்படியிருக்கு? என்று கேட்டால் ‘ஆ நன்றாகப் போகிறது’ என்று கூறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ‘ஏதோ போகுது’, ‘வாழ்க்கையே வெறுத்துப் போச்சு’ என்றெல்லாம் கூறுபவர்களே அதிகமாக உள்ளனர். இவையெல்லாம் பிடிப்பில்லாத வாழ்வின் வெளிப்பாடுகளே ஆகும்.
சிக்கல் நிறைந்த வாழ்க்கையை கண்டு ஓட ஆரம்பித்தால் எதுவரை ஓடுவது? ஏதாவது ஒரு புள்ளியில் நின்றாக வேண்டும். ஓடி, ஓடி களைத்து திரும்பிப் பார்க்கையில் நாம் சந்தித்த துயரங்கள் சிறுதுளியாகத் தெரியும். ஆனால் காலம் கடந்திருக்கும்.
பிரச்சனை இல்லாத வாழ்க்கையில்லை. அதேபோல தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை. ஆனால் நாம்தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றுமில்லாத சிறு விசயங்களைக்கூட பெரிய பிரச்சனையாக கருதுவதுண்டு. அதைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து கலங்குவதுண்டு. ஆனால், அவை மிக சிறிய விசயமாக இருக்கும். முதலில் நாம் பிரச்சனைக்குள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும். அதை தீர்க்கும் வழிபற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உரிய பிரச்சனைக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பதில்லை. ஒருசில பிரச்சனைகள் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.
மனித மனம் மென்மையானது. அதற்குள் கவலைகள், கோபங்கள், துன்பங்கள் ஆகியவற்றை நிரப்பி வைத்து வேதனைப்படுவது தவறான செயலாகும். மனதை இலேசாக வைத்திருக்க முயல வேண்டும். துன்பத்தைக் கண்டு ஓடுவதைத் தவிர்த்து, அதை சவாலாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைய நாகரீக சமூகம் எல்லாவற்றிலும் முன்னேறி விஞ்ஞான மயமாகி விட்டது. ஆனாலும், மனிதனது வாழ்க்கை மட்டும் போராட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
விஞ்ஞான உலகில் மனிதன் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, சவாலை சமாளிக்கத் தெரிய வேண்டும். ‘துணிந்தவனுக்கு மலையும் மடு’ என்ற பழமொழிக்கிணங்க நாம் துணிவுடன் சவாலை சந்திக்க வேண்டும். துன்பங்களை முறியடித்து வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டும்.