நாட்டின் முதல் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – எழுத்தாளர் கே.பாலமுருகனின் முன்னெடுப்பு

இளம் படைப்பாளர்களைச் சிறந்த கற்பனைவளத்துடன் தமிழில் உருவாக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் நாடெங்கிலும் சிறுவர் சிறுகதைப் பட்டறைகள் நடத்திக் கொண்டும் சிறுவர் சிறுகதைகள் தொடர்பான வழிகாட்டி நூல்களை எழுதி வெளியிட்டும் வரும் ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகனின் அடுத்த கட்ட நகர்ச்சித்தான் கடந்த 26 மே 2019 செந்துல் தம்புசாமி தமிழ்ப்பள்ளியில் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்ட ‘சிறுவர் சிறுகதை இலக்கிய விழா’ ஆகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய அளவில் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியை ஆசிரியர் கே.பாலமுருகன் பத்திரிகை, முகநூல், புலனம் ஆகியவற்றின் வாயிலாக அறிவித்திருந்தார். ஒரு மாத காலத்திலேயே நாடெங்கிலிருந்தும் 257 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பியது இலக்கியம் மீதான மாணவர்களின் ஈடுபாட்டைக் காட்டுவதாக கே.பாலமுருகன் முகநூல் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். முதல் சுற்றில் ஆசிரியர் குழுவின் மூலமாக 22 சிறந்த சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சிறுகதைகளைத் தலைமை நீதிபதியான எழுத்தாளர் திரு.ந.பச்சைபாலன் அவர்கள் முதல் பத்து நிலைகளுக்களுக்கான வரிசையை முடிவு செய்தார். இருப்பினும் இறுதி சுற்றுவரை தேர்வாகிய 22 சிறுகதைகளும் ஒவ்வொன்றும் சளைக்காமல் போட்டிக் கொடுத்ததால் அனைத்துச் சிறுகதைகளுக்கும் பரிசும் நற்சான்றிதழும் வழங்கப்படவிருப்பதாக சிறுவர் சிறுகதை இலக்கிய விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கே.பாலமுருகன் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படியே இலக்கிய விழாவில் 22 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மேடையில் இளம் எழுத்தாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுப் பரிசுகளும் பெற்றார்கள். நாட்டில் ஒரே மேடையில் 22 இளம் எழுத்தாளர்களை அவர்கள் எழுதிய சிறுகதைகளை நூலாக்கம் செய்து வெளியீடுவது இதுவே தமிழிக்கியத்தில் முதல் முயற்சி என்று அவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய மேனாள் தேர்வு வாரிய தமிழ்ப்பிரிவின் இணை இயக்குனரும் இலக்கிய ஆர்வளருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டிருந்தார். கலை மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை உண்டு செய்து மனத்தை மேம்பெடுத்தும் என்றும் நம் நாட்டின் சிறுவர்கள் அத்தகையதொரு சிறுவர்களுக்குரிய தன்மைகளோடு விளங்கும் சிறுவர் இலக்கியத்தில் பங்கெடுப்பதன் மூலம் விலைமதிக்கத்தக்க ஆளுமையைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யார் அந்த மந்திரவாதி என்கிற தலைப்புடன் இறுதி சுற்றில் தேர்வான வெற்றியாளர்களின் எல்லா சிறுகதைகளும் நூலில் தொகுக்கப்பட்டிருந்தன. சிறுவர் சிறுகதைகளுக்குரிய தன்மைகள் பல சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருந்தாலும் அக்கதைகள் யாவும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய கடப்பாட்டைத் தாம் ஒரு தொகுப்பாளராக மேற்கொள்ள வேண்டியிருந்ததாக கே.பாலமுருகன் தம் வரவேற்புரையில் கூறினார். மேலும், ஹெர்ரி போட்டர் நாவலுக்கிருக்கும் வாசக அலை, வாசகப் பெருக்கம் நம் நாட்டிலும் தமிழ் படைப்புகளுக்கு உருவாக வேண்டும் என்பதற்காகவே இளையோர் மத்தியில் இலக்கிய இரசனையை மேம்படுத்துவதற்காக தாம் ‘தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தைத்’ தொடங்கியதாக அவர் மேலும் கூறினார்.

இறுநூறுக்கும் மேற்பட்டோர் வந்திருந்த நாட்டின் வரலாற்றில் தடம் பதித்த சிறுவர் சிறுகதை இலக்கிய விழாவில் விமர்சன உரையை வழங்கிய எழுத்தாளர் ந.பச்சைபாலன் வரலாற்றில் வெற்றி பெற்ற பல நிகழ்வுகள் தனிமனித முயற்சிகளால் உருவானவை என்றும் பாலமுருகன் இளம் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் முன்னெடுத்திருக்கும் இவ்விலக்கிய விழாவும் அத்தகையதொரு வரலாற்று சாதனையாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார். மேலும், போட்டிக்கு வந்திருந்த பெரும்பாலான சிறுகதைகள் மாணவர்களின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

எழுத்தாளர் யோகி, திரு.குணநாதன், எழுத்தாளர் கந்தன், ஆசிரியர் பாண்டியன், ஓவியர் சந்துரு, சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர், சுடர் பதிப்பக உரிமையாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள், ஆஸ்ட்ரோ தமிழ் செய்தி பிரிவைச் சேர்ந்த சாலினி, மின்னல் வானொலி செல்லமே செல்வமே பிரிவின் தொகுப்பாளர் திருமதி நளினி, திருமதி இராஜலெட்சுமி என மேலும் பல முக்கியமான தமிழ் ஆர்வலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியின் முதல் நிலை வெற்றியாளர் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி மாணவர் நிமலேஷ்வரன் தமிழரசு ஆவார். இஃது என்ன மாயம் என்கிற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதையின் முடிவு நகைச்சுவையாகவும் திருப்பத்துடனும் அமைந்திருப்பதாக நீதிபதிகள் கருத்துரைத்திருந்தார்கள். இப்போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளரான சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளியின் மாணவர் கோமேதகன் சுகு அவர்கள் எழுதிய ‘எட்டு ஏ’ சிறுகதை மாணவர்களுக்குரிய படிப்பினையைச் சுவைப்பட எழுதியிருப்பதாக நீதிபதி ந.பச்சைபாலன் குறிப்பிட்டிருந்தார். தேசிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியின் மூன்றாம் நிலை வெற்றியாளர் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ‘மருதாணி’ என்ற தலைப்பில் சிறுகதை எழுதிய மாணவி சஸ்மீத்தா இரவி ஆவார்.

மேலும், சஞ்சனா ஸ்ரீ சந்திரன், கெஸ்விந்தன் சரவணன், தேவேந்திரன் விஜயகுமார், மனோஷ் ராஜ் சங்கர், யாழினி சிவஞானம், திரிஷானா கோபு, தவநிதா அழகர்சுவாமி ஆகிய மாணவர்கள் முதல் பத்து நிலைகளில் வெற்றி வாகைச் சூடினர். அடுத்த நிலையில் சிறந்த சிறுகதைகளை எழுதி ஆறுதல் பரிசுகளைத் தட்டிச் சென்ற மாணவர்கள் கீர்த்திக்கா கனியப்பன், காயத்திரி முனியாண்டி, கவிவர்மன் சரவணன், சுஜித்தா மணிமாறன், ஜெய்ஸ்ரீ ரமேஷ், திவ்யாஷினி ஜெயவாணன், நித்திலா புஷ்பராஜன், பர்வேஷ் கணேசன், தமிழ்மலர் இராமலிங்கம், தருவின் கணேசமூர்த்தி, விஷால் புஷ்பராஜன், தனுஸ்ரீ சதிதியநாராயணன் ஆகியோர் ஆகும். இவர்கள் யாவரும் இன்னும் பத்தாண்டுகளில் நாட்டின் இலக்கிய சூழலை மாற்றக்கூடியவர்கள் என்று அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதில் மும்முரம் காட்டி வரும் கே.பாலமுருகன் மேடையில் அழுத்தமாக முழங்கினார். சிறந்த பங்கேற்பிற்கான விருது சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

கே.பாலமுருகன் அவர்களால் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் யாவரும் ‘எழுத்தாளர்’ என்கிற பட்டத்தையும் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது மிகவும் புதுமையாக இருந்ததாக வருகையாளர்கள் பலர் குறிப்பிட்டனர். ஒரு மொழியில் சிறந்த படைப்பாளர்கள் உருவாக வேண்டுமென்றால் அம்மொழியில் நிறைய வாசகர்கள் தோன்ற வேண்டும். நல்ல இலக்கியம் வாசகர்களின் மூலமே மீட்டுக் கொண்டு வரப்படும் என்பதனை இச்சிறுவர் சிறுகதை இலக்கிய விழா நன்கு உணர்த்தியுள்ளது. கெடா, பேராக், பஹாங், கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் போன்ற பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் நிறைவான விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

இவ்வாண்டு அக்டோபரில் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி மீண்டும் இரண்டாவது முறையாக அறிவிக்கப்படும் என்று கூறிய தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் தோற்றுனர் எழுத்தாளர் கே.பாலமுருகன் புதிய முயற்சியாக இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இளையோர் சிறுகதை எழுதும் போட்டியை நடத்தவிருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.