தங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு!

நெதர்லாந்தில் நடை பெற்ற உலகப் பாரா அம்பு எய்தல் போட்டியில் நாட்டிற்குத் தங்கம் ஈட்டித்தந்த சுரேஷ் செல்வதம்பிக்கு எனது பாராட்டுகள். எதிர்வரும் 2022ம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெறவிருக்கும் பரா ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தங்கம் பெற எனது ஆசிகள். இன்றைய இளைஞர்கள் இடையே ஆக்கச் சிந்தனைகளை விதைக்க அவர் நல்லதொரு  எடுத்துக்காட்டு என்றார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

“உலக அளவில் ஒரு வெற்றியாளர் விருதைப் பெருவது சுலபமல்ல, இந்த வெற்றியின் வழி சுரேஷ் செல்வதம்பி நாட்டுக்கு மட்டுமின்றி இந்நாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு கௌரவத்தைப் பெற்றுத் தந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. சுரேஷ் செல்வதம்பி என்ற அந்த இளைஞரின் வெற்றி, நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் ஒரு ஊக்குவிப்பாக அமைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு”

“இன்றைய இளைஞர்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் சிறுசிறு தோல்விகளைக் கண்டு துவண்டு விடுகின்றனர், வழி தடுமாறுகின்றனர். வெற்றிபெறப் பிறந்தவர்கள் நாம், உலகுக்கு வழி காட்டப் பிறந்தவர்கள் என்ற மனப்பான்மையுடன், நம்பிக்கையுடன், உறுதியுடன் நம் இளைஞர்கள் வாழ்க்கை பயணத்தைத்  தொடரவேண்டும்”

“இந்தப் போட்டியில் அவருக்குக் கிடைத்த வெற்றியோ அவர் படைத்துள்ள சாதனையோ அவருக்கு எளிதில் கிடைத்ததில்லை, அதற்கு  அவர் கடுமையாகப் பாடுபட்டுள்ளார், சிறந்த மனப் பலத்தைக் கொண்டுள்ளார் என்பதனை வாழ்வில் சுரேஷ் செல்வதம்பி சந்தித்த சோதனைகளைக் கவனித்தால் புரியும்.”

“சாலை விபத்தில் ஊனமுற்ற அவர், அதன் பின் தனது சகோதரியை மற்றொரு விபத்தில் பறிகொடுத்த சுரேஷ் செல்வதம்பித்தான் உலகப் பாரா அம்பு எய்தல் போட்டியில் இன்றைய வெற்றியாளர் என்பதனையும் அறியும் போது அவரின் திறமையையும் மன வலிமையையும் நாம் உணரமுடிகிறது.”

சவால் மிக்க இக்கால கட்டத்தில் எதுவும் நமக்கு சுலபமாக கிடைத்து விடாது, நம் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும், விடா முயற்சியும், மன வலிமையையும் கொண்டிருப்பது அவசியம் என்பதனை  நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் சேவியர் ஜெயக்குமார்.