சில சமயங்களில் மின்னாத மின்னல் எப் எம் – இராகவன் கருப்பையா

20 லட்சம் இந்தியர்கள் வாழும் நம் நாட்டில் 2 தமிழ் வானொலிகள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய சந்தோசமான விசயம்.

ஒரு வானொலி அன்றாடம் தமிழ் மொழியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பந்தாடிக்கொண்டிருக்கும் வேளையில், இனிய தமிழ் என்றால் மின்னல் எப். எம். மட்டுமே – அண்மைய காலம் வரையில்!

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகள் கூட தமிழை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் நமது மின்னலின் தமிழ் பயன்பாடு மிகவும் உயர்வானது, பாராட்டுக்குரியது.

ஆனால் இந்நிலை அண்மையில் சர்று தடுமாற்றம் காண்பது நமக்கு வேதனையளிக்கிறது.

ஓர் உதாரணம்: அண்மையில் ஹரி மற்றும் தெய்வீகன் ஆகிய இரு அறிவிப்பாளர்களும் படைத்த ஒரு நிகழ்ச்சி. ஆசிரியர் சேம் என்னும் ஒருவரை பேட்டி கண்டனர்.

அந்த சேம் என்பவர் தமிழரா அல்லது வேறு இனத்தைச் சேர்ந்தவரா என்று தெரியவில்லை. ஏனென்றால் இவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு அவர் முற்றிலும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். அவர் பேசியது எத்தனை நேயர்களுக்கு புரிந்திருக்கும் என்று கூட தெரியவில்லை – அப்படிப்பட்ட ஆங்கிலம்!

இந்த குழப்பம் தேவையா? அவரை ஆங்கில வானொலிக்கு அனுப்பியிருக்கலாம் அல்லது தமிழ் பேசத் தெரிந்த ஒருவரை பேட்டி கண்டிருக்களாம் – ஆளா இல்லை! மக்கள் முழுமையாக பயனடைய இயலாத ஒரு நிகழ்ச்சியை ஏன் படைக்க வேண்டும்?

இதற்கிடையே, காலையில் பள்ளிக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளை தொலைபேசியில் அழைக்கச் சொல்லவது முட்டாள்தனமாக உள்ளது.

பேசப்படும் விசயங்கள் பயனானவைதான், அதற்கான கால அவகாசமும் குறைவுதான். இருந்தாலும் வாணொலி நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு காலையில் அந்த மாணவர்கள் விரயமாக்கும் நேரத்தைப் பற்றி அறிவிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.

மின்னலில் பல்லாண்டு காலமாக திருத்தப்படாமல் இருக்கும் இன்னொரு விசயம் பேட்டிகாணப்படும் பிரமுகர்களை அவர்கள் அழைக்கும் விதம்.

டத்தோ அல்லது தான்ஸ்ரீ போன்ற விருதுகளைக் கொண்டிருப்பவர்களை பேட்டிகாணும் போது அவர்களுக்கு உரிய மரியாதை என்பது அவசியமான ஒன்றுதான்.

 

ஆனால்  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அறிவிப்பு செய்யும் போது மட்டும்தான் அவர்களுடைய பெயர்களை முழுமையாக அறிவிக்கிறார்கள். நிகழ்ச்சியின் இடையில் அவர்களுடன் பேசும்போது, ‘ஆமாங்க டத்தோ’, ‘அப்படியாங்க டத்தோ’, ‘நன்றிங்க டத்தோ’, ‘வாய்ப்பு இருந்தால் மீண்டும் சந்திப்போம் டத்தோ’, என்று நிகழ்ச்சியை முடித்துவிடுகிறார்கள்.

 

அவர்களுடைய பெயர்களை முழுமையாக சொல்லாத பட்சத்தில், நிகழ்ச்சியின்  இடையில் வானொலியைத் திறப்போருக்கு, அன்றைய பிரமுகர் யார் என்றே தெரியாமல் போய்விடுகிறது.

இப்போதெல்லாம் நம்மை சுற்றி கொஞ்சம் நஞ்சமான டத்தோக்களா இருக்கிறார்கள? எங்கு பார்த்தாலும் ஒரே டத்தோ மயம்தான்!

ஆக, சொல்லப்படுகிற விஷயங்கள் எவ்வளவு நல்ல விஷயங்களாக இருந்தாலும் சொல்பவர் யார் என்று தெரியவில்லை என்றால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

நிகழ்ச்சியை படைப்பவர்கள் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நேயர்களுக்கு பயன் உள்ளதாக இருப்பதை உறுதி செய்வது அவர்களுடைய கடப்பாடாகும்.

எனவே இதுபோன்ற விசயங்களில் நமது மின்னல் எஃப். எம்.  சற்று கவனம் செலுத்தினால் வானொலியின் தரம் குன்றாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

மின்னல் தொடர்ந்து மின்னுமா?