இவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்!

சிவாலெனின் | விடுதலை என்பது அனைவருக்கும் சமமானது. ஆனால், சொந்த மண்ணில் சுவாசிக்கும் காற்றைக் கூட அதிகார வர்க்கம் மறுக்கும் போது ஏற்படும் வலியானது சொல்ல இயலாத வலிமிக்கது. அப்படி அடக்கி ஆளப்பட்ட தமிழினம் வெகுண்டெழுந்து இன விடுதலைக்காக, தன்னுயிர் ஈந்த இந்நாள் தான் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளாக, வீரவணக்கம் செலுத்தும் உன்னதநாளாய் அறியப்படுகிறது.

தாய்நாட்டிற்காகவும் தன் இனத்திற்காகவும் ஈழத்தை வென்றெடுக்க உயிர் ஈந்த போராளிகளை நினைவுக்கூறும் நாளாக, கடந்த 1989 முதல் இலங்கை மட்டுமின்றி உலகின் பெரும்பகுதிகளில் நவம்பர் 27-ம் நாள், மாவீரர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. மண்ணுக்காக வாழ்ந்துப் பார், மரணத்திலும் சரித்திரம் படைப்பாய் என்பது போல் தமிழீழம் மலர உயிர் ஈந்த அந்தப் போராளிகள் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

மனிதனுள் இயல்பாக பற்றிக்கொள்ளும் ஆசைகளையும் உணர்வுகளையும் புறந்தள்ளி, தமிழினத்தின் உரிமைக்காக போராடி மரணத்தை எதிர்க்கொண்ட போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் அன்பியல் நாள் இது. இறந்தவர்களுக்காக அழுபவர் மத்தில், அழுபவர்களுக்காக இறக்க துணிந்த உத்தமர்கள் இவர்கள்.

தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த நாள் தான் மாவீரர் நாளாகா கொண்டாடப்படுவதாகவும் நினைப்பவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆகும். நவம்பர் 27 தான் மாவீரர் நாள். மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு, அவரைப் பிழைக்க வைக்க அவரது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமல், தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க, 27.11.1982 அன்று மாலை 6.05 மணிக்குச் சங்கர் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறார்.

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவுநாள், தமிழீழத் தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. தனது இனிய உயிர் அர்ப்பணிப்பால் விடுதலைக்கு வித்திட்டு உரமான மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான இந்நாள், தமிழீழத்தின் தேசிய நாளாகக் கருதப்படுகிறது. சங்கர் உயிர் பிரிந்த நேரமான 6.05 மணிக்கு, மாவீரர் நாளில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.

 

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்தான் ஓர் இனத்தின் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும். அவ்வாறு இல்லாமல் கொட்ட கொட்ட குனிந்துக் கொண்டிருந்தால் செத்த பிணமாக மடிந்து போகத்தான் வேண்டியிருக்கும். மேலும், ஓர் இனம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அந்த இனம் தனது மொழி, பண்பாடு, நாகரீகம் உட்பட தனது பூர்வீக நிலப்பரப்பு போன்றவற்றைப் பேணிக்காத்தல் அவசியமாகிறது. அத்தகைய பேணிக்காத்தலை முன்னெடுத்த போராளிகளுக்கு உகர்ந்த நன்மதிப்பு மிக்க நாள் தான் மாவீரர் நாள்.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக களம் நின்ற போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் இன்னாள் உலகத் தமிழர்களின் எழுச்சிநாளாகவே பெருமிதம் கொள்ளப்படுகிறது. உரிமைகாக உயிர் ஈந்திருந்தாலும், அவர்களின் போராட்ட தத்துவத்தையும் இலக்கையும் யாராலும் கொல்ல முடியாது. ஒவ்வொரு மாவீரர் நாளிலும் அது ஒவ்வொருவரின் உணர்விலும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழீழ விடுதலை போராட்டம் என்பது பல விடுதலை பயிர்களின் உயிர்களை விதைத்திருக்கும் பெரும்வெளியாகவும். உரிமைக்காக உயிர் ஈந்த போராளிகள் இங்கு புதைக்கப்படவில்லை. மாறாய், அவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த விதைகளின் விருட்சம் தொடர்ந்து உயிர்ப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழீழத்தின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து ஈழ மக்களின் மனங்களில் மட்டுமின்றி உலகத் தமிழர்களின் இதயங்களிலும் நிறைந்து நிற்கும் மாவீரர்களை பெருமிதத்தோடு நினைவுக்கூறும் இந்நாளின் ஒவ்வொரு ஆண்டும் மேதகு பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையை மக்கள் முன் தோன்றி ஆற்றுவார். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அவரது உரையின்றி உலகம் முழுவதும் மாவீரர் நாள் நினைவுக்கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் மேதகு பிரபாகரன் தோன்றுவார், உரை நிகழ்த்துவார் எனும் எதிர்பார்ப்பு நீண்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர் இருக்காரா இல்லையா எனும் சர்ச்சைக்கு இந்த ஆண்டாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா எனும் எதிர்பார்ப்பும் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள் எனலாம்.

ஒவ்வொரு ஆண்டும் அவரது உரையில் இனவிடுதலைக்கு இன்னுயிர் ஈகம் செய்த அந்த மாவீரர்கள் தான் எமது போராட்டத்தின் உயிர் சக்திகள் எனவும் தமிழீழம் மலர்வது கனவல்ல, அஃது இலட்சியம் எனவும் அவர் முழங்குவார். நடப்பில் போராட்டம் ஓய்ந்து விட்டதாக யாரும் கருதவில்லை. அஃது தற்காலிகமாய் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்த நாள் ஈழ மக்களுக்கு மிக முக்கியமான நாளாகவே அவர்களின் மத்தியில் உணர்வுப்பூர்வமாய் சிலிர்த்திருக்கிறது எனலாம். தமிழீழத்தின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்து ஈழ மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் புனிதநாளாகவே அது கருதப்படுவதோடு அன்றைய தினம் மாவீரர்களின் துயில் இல்லத்தில் ஒன்றுக்கூடி மரியாதை செய்வது அவ்வளவு உணர்ச்சி மிக்கதாகவும் ஆழமான விடுதலை போராட்டத்தின் தடமாகவும் விளங்கும்.

மேலும், ஈழ மக்களின் தேச விடுதலைக்கும் அவர்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழ வேண்டும் எனும் இலட்சியத்திற்காகவும் வீரமரணம் அடைந்த மாவீரர்களை அந்த வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் உன்னத நாளாகவும் அந்நாள் போற்றப்படுகிறது.

வீரமரணம் அடைந்த மாவீரர்கள் தங்களின் சொந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தனது தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் போராடுவது என்பது மிகவும் பொருள் பதிந்தது. அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்து பல்வேறு தியாகங்களைப் புரிந்த அந்த மாவீரர்களின் செயல்பாடும் உணர்வுகளும் உலக வரலாற்றில் ஒப்பற்றவை என்பதை மறுத்திடலாகாது.

மாவீரர் நாளை நினைவுக்கூறுவதற்கு முன்னதாக ஈழப்போராட்டத்தைச் சற்று பின்னோக்கி பார்த்தால், தொடக்கத்தில் ஜனநாயக வழியில் அமைதியாகவும் மென்மையான வழியிலும் உரிமைப்போராட்டம் தொடங்கியது. உரிமைகாக தமிழர்கள் முன்னெடுத்த அறவழி போராட்டங்கள் எல்லாம் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருக்கத்தனமாக ஒடுக்க முனைந்த வேளையில்தான் இலங்கையில் தமிழர்களும் திருப்பி அடிக்க தொடங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து தாங்க முடியாத கொடுமைகளை ஈழ மக்கள் எதிர்கொண்ட நிலையில், வரலாற்றின் தன்னியல்பான விடுதலை இயக்கம் உருவானதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். மேலும், நாம் என்ன ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எதிரிதான் முடிவு செய்கிறான் எனத் தோழர் சே குவேரா கூறுவது இங்குக் காலத்தோடு ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் மாவீரர் நாள்

மலேசியாவைப் பொருத்தமட்டில் மாவீரர் நாள் ஒவ்வொரு ஆண்டும் நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மிகச் சிறப்பான முறையிலும் உணர்வுப்பூர்வமாகவும் தொடர்ந்து நினைவுக்கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவ்வாண்டு அவ்வாறு மரியாதை செலுத்தப்படுமா என்பது பெரும் ஐயத்தை எழுப்பியுள்ளது.

 

அண்மையில், விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி, இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பன்னிரெண்டு பேரை மலேசிய போலீஸ் கைது செய்திருப்பதால், நாட்டில் தமிழர்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், விடுதலைப்புலிகள் குறித்தும், அதுசார்ந்த விடயங்கள் தொடர்பிலும் பேசவும் செயல்படவும் பலர் அஞ்சினாலும் இன்னமும் ஈழ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் மலேசியத் தன்மான தமிழர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இருந்தாலும், இவ்வாண்டு மாவீரர் நாள் மலேசியாவில் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஈழ மக்களின் விடுதலை தீவிரவாதமாய் மலேசிய உட்பட உலக நாடுகள் பல வரையறுத்திருப்பது அநாவசியமானது எனும் உண்மையை உலகிற்கு ஐநா பறைச்சாற்ற வேண்டும். அதேவேளையில், மலேசிய அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் ஈழப்போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய அமைச்சர்கள் உறுதிப்பட தெளிவுப்படுத்துதல் வேண்டும்.

மாவீரர் நாள் உலக அளவில் தமிழர்களின் உணர்வினை மெய்பிக்கும் உன்னதநாளாக நினைவுக்கூறப்படுகிறது. சொந்த தேசத்தின் விடுதலைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் இன்னுயிர் ஈகம் செய்த போராளிகள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர் என்பதை மீண்டும் ஆழமாய் பதிவு செய்யும் அதேவேளையில், ஈழப்போராட்டம் தீவிரவாதம் அல்ல; அஃது ஓர் இனத்தின் உரிமை, ஒரு தேசத்தின் விடுதலை என்பதை இந்த மாவீரர் நாளில் உலகிற்கு எடுத்துரைப்போம். ஓர் இனத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன்னுயிர் ஈகம் செய்த மாவீரர்களுக்கு நன்றியோடு வீரவணக்கம் செய்வோம்.

தமிழீழம் கனவல்ல – இலட்சியம்!! தமிழீழம் மலரும் மாவீரர்களின் இலட்சியம் அதன் இலக்கை எட்டும் என நம்பிக்கையோடு மாவீரர்களுக்கு மரியாதையும் வீரவணக்கமும் செய்வோம். விழ விழ எழுவோம், மீண்டும் மீண்டும் முளைவோம், வீழ்ந்தாலும் மடிந்தாலும் இலக்கு ஒன்றுதான், அது இனத்தின் விடுதலைதான்.