தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் பல பாரம்பரிய போட்டிகளுடன் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 22.01.2020 (புதன்கிழமை) பள்ளி அளவிலானக் கொண்டாட்டம் பால் பொங்குவதுடன் மட்டுமில்லாமல் வண்ணம் தீட்டும் போட்டி, கோலம் போடுதல், கூந்தல் பின்னுதல், மலர் தொடுத்தல் மற்றும் உரி உடைத்தல் போன்ற பல நடவடிக்கைகளின் கலவையாக அமைந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்குமட்டுமின்றி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தோட்டப் புற பள்ளியாக இருப்பினும் சுமார் 100 மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் இவ்வாறானக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் மிக மகிழ்ச்சி அடைவதாக மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையின் தலைவர் திரு.ஹேலன் தமதுரையில் குறிப்பிட்டார். மலேசியத் திராவிட கழக சுங்கை சிப்புட் கிளையின் பொருளாளர் திரு.ச.நாகேந்திரன் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் பள்ளியில் இனிவரும் காலங்களில் நெகிழி மற்றும் போலிஸ்திரின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு வேண்டுகோளை முன்வைத்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.ந.கற்பகவள்ளி இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டம் மாணவர்களுக்குப் புதிதொரு அனுபவமாக அமைந்துள்ளதாகக் கூறினார். அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்ட மலேசியத் திராவிட கழகம் சுங்கை சிப்புட் கிளையினருக்குத் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். பாரம்பரிய நடனமான கும்மி மற்றும் கரகத்துடன் தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் முத்தாய்பாக அமைந்தது.
இக்கொண்டாட்டத்தில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.க.சிவஞானம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியக் குழு தலைவர் திரு.வெ.சிங்கார வடிவேலு கலந்து சிறப்பித்தனர். மலேசியத் திராவிட கழக சுங்கை சிப்புட் கிளையின் சார்பில் பள்ளிக்குத் திருக்குறளை ஒலிக்கக்கூடிய சுவர்கடிகாரங்கள் இரண்டினை நினைவுபரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.