இராகவன் கருப்பையா – நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டின் 2ஆம் கட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் உணவுக்குத் திண்டாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது நமகுக்கு கவலையாகத்தான் உள்ளது.
இத்தகையோருக்கு உதவ தன்னால் இயன்ற வரையில் அரசாங்கம் ஒருபுறம் முயன்று வருகிறபோதிலும் தனியார் துறையினர் ஆற்றிவரும் மாபெரும் பங்கை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
குறிப்பாக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான நம் இளைஞர்கள் ஒற்றுமையுடன் களமிறங்கி ஏழை எளியோருக்கு உதவி வருவது நமக்கு பூரிப்பைத் தருகிறது.
எனினும் இத்தகைய தொண்டூழிய நடவடிக்கைகள் ஆக்ககரமாக இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்வது அவசியமாகும்.
உதாரணத்திற்கு தினந்தோரும் ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு 2 அல்லது 3 வேளை உணவு சமைப்பது சாதாரனமான விசயமில்லை.
இத்தகைய கடுமையான சவாலுக்கு ஆள்பலமும் நிறையவே தேவைப்படுகிறது. மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் கூடல் இடைவெளி முதலியவற்றையும் அவர்கள் அணுக்கமாகக் கடைபிடிக்கவேண்டியுள்ளது.
எனவே இத்தகைய சிக்கல்களை கருத்தில் வைத்து சமையல் வேலைகளை குறைத்துக்கொண்டு சமையல் பொருட்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பது விவேகமாக இருக்கும்.
வீடற்றோருக்கு சமைத்த உணவுதான் வழங்க வேண்டும், வேறு வழியில்லை.
ஆனால் மற்றவர்களுக்கு இரண்டொரு வாரங்களுக்குத் தேவையான அரிசி, உப்பு, சீனி, பால், சமையல் எண்ணெய், பிஸ்கெட், மாவு, முட்டை முதலிய அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் சமையலுக்கான இதர சாமான்களையும் ரேஷன் போன்று பொட்டலங்களில் வழங்குவது குறித்து ஆராயவேண்டும்.
இவ்வாறு செய்தால் இரண்டொரு வாரங்களுக்கு உணவுத் தேடி அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் இருக்காது. தொண்டர்களின் நடமாட்டத்தையும் கூட இதன் வழி குறைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எது எப்படியாயினும் இத்தகைய நடவடிக்கைகளின் போது சுகாதார பாதுகாப்பை முன்னிருத்தி, உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்த கொடூரமான நோய்க்கு எதிரான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அணுக்கமாகக் கடைபிடிப்பது அவசியமாகும்.
இதற்கிடையே இத்தகைய தொண்டூழிய உதவிகள் மனிதாபிமான அடிப்படையில், இன பாகுபாடின்றி, தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் அது அர்த்தம் பொதிந்த ஒரு மனிதநேய சேவையாக அமையும்.
சரியான ஆலோசனை எழுத்தாளரே.