அரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்

இராகவன் கருப்பையா – புதிய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரையில் அதன் திட்டங்களிலும் அவற்றின் அமலாக்கத்திலும் நிலவும் குளறுபடிகளினால் மக்கள் சற்று அதிகமாகவே குழம்பிக்கிடக்கின்றனர்.நாடு முழுவதிலும் இதுவரையில் 4,661-கும் மேற்பட்டோரை தொற்றியுள்ளதோடு, 76 உயிர்களையும் பலிகொண்டுள்ள கோவிட்-19 கொடூர நோயை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட சில அமைச்சர்கள் அந்தத் திட்டங்களை முன்னுக்குப் பின் முரணாக அறிவிப்பதாலும் அவைகளை நடைமுறைபடுத்துவதில் அவர்கள் காட்டும் தடுமாற்றத்தினாலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறையும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வருமானமின்றி தவிப்போருக்கும் வறுமையில் வாடுவோருக்கும் அரசாங்கம் அறிவித்த உதவித் தொகை விவேகமான ஒரு முடிவுதான்.

எனினும் அதன் அமலாக்கத்தில் உள்ள குளறுபடிகளினால் அரசாங்கத்தின் மீது பொது மக்கள் அதிருப்தி மட்டுமின்றி சினமும் அடைந்துள்ளனர்.

உண்மையிலேயே உதவித் தேவைப்படும் அடிதட்டு மக்கள், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு வெளியே அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளியோருக்கு சல்லி காசுக்கூட சென்று சேராத நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிபின் மணைவி ரோஸ்மாவுக்கும் கூட இந்த உதவித் தொகை என்பது கேலிக்கூத்தான ஒன்றுதான்.

வருமான வரித்துறையின் 2018ஆம் ஆண்டு  புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது என அந்த இலாகா கூறும் சாக்குப்போக்கு நமக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.

அப்படியென்றால் அந்த இலாகாவில் இதுவரையில் எவ்விதப்பதிவும் செய்திராத, குறைந்த வருமானமுடையோரின் நிலை என்ன? 2018ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வேலையில் அமர்ந்த இளையோரின் நிலையும் அதுதானா?

இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய புதிய நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ரிலிடம் இருந்து  இதுவரையில் எவ்வித விளக்கத்தையும் காணோம்.

இதற்கிடையே தலைநகர் மத்தியில் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் ஸ்தம்பித்து நிற்கும் சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலாயன் மேன்ஷன் ஆகிய இரு குடியிருப்பு வளாகங்களிலும் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் சுமார் 6,000 அன்னியத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உணவு வழங்காது என்றும், தத்தம் தூதரகங்கள்தான் அவர்களை கவனிக்க வேண்டும் எனவும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா கொடுமையான ஒரு அறிவிப்பை கடந்த வாரம் செய்தார்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே, அரசாங்கம் அவர்களுக்கு உணவு வழங்கும் என கோலாலம்பூர் மாநகர மேயர் அறிவித்தார். இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் இவர்கள் இருவருமே ஒரே அமைச்சின் கீழ்தான் உள்ளனர்.

முன்னதாக, ரமலான் சந்தை தொடர்பாகவும் முன்னுக்குப்பின் முரணாக அறிக்கைகளை வெளியிட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக மக்களை குழப்பிக்கொண்டிருந்தார் அனுவார் முசா.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18ஆம் தேதியே அமலாக்கம் கண்ட போதிலும், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய 3 கூட்டரசுப் பிரதேசங்களிலும் ரமலான் சந்தை இருக்கும் என மார்ச் 31ஆம் தேதி அவர் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாளே அவர் பல்டியடித்தார். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ஏப்ரல் 1ஆம் தேதியன்று கூறிய அவர் பிறகு ஒரு வாரம் கழித்து, ரமலான் சந்தை ரத்து என்று ஏப்ரல் 8ஆம் தேதி அறிவித்தார்.

இத்தகைய முரண்பாடுகளினால் கோபமடைந்த நிலையிலிருந்த மக்களுக்கு உயர் கல்வியமைச்சர் நொராய்னி அஹ்மட்டின் கேலிக்கூத்தான ஒரு நடவடிக்கை மேலும் எரிச்சலூட்டியது.

ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரையில் ‘டிக் டாக்’ வீடியோ பதிவு போட்டியொன்றை அறிவித்த அவருடைய நடவடிக்கை, கடந்த வாரம் மகளீர் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ரீனா ஹருன் காட்டிய வேடிக்கைக்கு இணையாகத்தான் உள்ளது.

ரீனாவின் அமைச்சு வெளியிட்ட, நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் வீட்டில் உள்ள பெண்கள் முக அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கணவர்களை நச்சரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தும் புலனப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள் எள்ளி நகையாடியதை நாம் மறந்திருக்க முடியாது.