பள்ளிகள் விரைவில் திறக்கப்படும்!

சங்கா சின்னையா | பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா? இன்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்படுகின்ற முக்கிய தலைப்புகளில் இதுவும் ஒன்று.

பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்பவர்களின் வாதம் இவைதாம்:

அ. அவ்வாறு திறக்கப்பட்டால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?

ஆ. குழந்தைகள் இயல்பாகவே குறும்புத்தனம் மிகுந்தவர்கள். அவர்களால் கூடல் இடைவெளியைப் பின்பற்ற இயலுமா?

இ. ஆசிரியர் பணி அறப்பணி என்று வாழ்கின்றவர்கள் மத்தியில் எங்களுக்கு கோவிட் 19 நோய்த்தொற்று ஏற்பட்டால் என்னாவது? எங்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் என்ற பல ஆசிரியர்களின் மனக்குமுறல்களுக்குக் கல்வி அமைச்சு செவிசாய்க்குமா?

பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்பவர்களின் வாதம்:

அ. நாங்கள் வேலைக்குச் சென்றுவிட்டால் எங்கள் குழந்தைகளை யார் பார்ப்பது?

ஆ. மாணவர்களுக்கு இயங்கலைக் கல்வியால் அதிகம் நன்மை விளையவில்லை எனவே குழந்தைகளின் கற்றலில் நிறைவு இல்லை!

என்னுடைய பார்வையில்…

குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தேர்வுகள் இல்லை என்ற அறிவிப்பு வந்தவுடனேயே பல பெற்றோர்கள் வழங்கப்படும் பயிற்சிகளைச் செய்வதைக் குறைத்துவிட்டனர். கணினி, தொலைக்காட்சி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்குக் கேட்டினை விளைவிக்கின்றது என்பதை உணரத் தொடங்கி விட்டனர். இயங்கலைக் கல்வியும் தொலைக்காட்சி பார்ப்பதும் ஒன்றுதான்; இதன் வழி கற்றல் நடைபெறுகிறது என்பது உண்மையானாலும் அவற்றின் விளைபயன் குறைவு என்பதைப் தெளிவாகப் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.

இன்னும் தேர்வு மயக்கத்தில் உள்ள பெற்றோர்கள் அறிவார்ந்த முயற்சிகளைப் புறந்தள்ளி, தொடர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்; மிகைநேர வகுப்புகளின் (டியுஷன்) வழி அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிரியர்கள் பலர் இதை ஊக்குவித்தும் வருகின்றனர்.

மாணவர்கள் செய்யும் பயிற்சிகளின் வழி செய்யப்படும் மதிப்பீட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இதற்கானத் தீர்வு அவசியம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

மலேசிய தேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் (2013 – 2025) இரண்டாவது அலை முடிவுறும் இத்தறுவாயில் இப்பேரிடர் நேர்ந்திருப்பது கல்வியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மிகப்பெரிய மூலதனம் அந்த நாட்டின் அறிவார்ந்த மக்களே என்பதை யாராலும் மறுக்கவியலாது. ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்ற கல்விக்குத் தற்சமயம் மிகப்பெரிய ஒரு மாற்றுத்திட்டம் தேவை என்பதைக் கல்வியாளர்கள் உணர வேண்டும்.

உயிருக்கு முன் எதுவுமே முக்கியமில்லை என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இதற்கு மாற்றுவழியே இல்லை என்று கூறுவதில்தான் உடன்பாடு காணமுடியவில்லை.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கிய முதல் வாரத்திலேயே இணைய வழிக் கல்வி உரிய பலனை அளிக்கவில்லை என்பதைப் பலர் உணர்ந்தாலும் தேவை கருதி அமைதியாகவே இருந்துவிட்டனர். இருப்பினும் பலர் தேர்வு கருதி அதிக பயிற்சிகளை வழங்கினாலும் ஒரு சில மாணவர்களே பயிற்சிகளைச் செய்தனர். தேர்வு இல்லை என்ற அமைச்சரின் அறிவிப்பு வந்தவுடன் பயிற்சிகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேர்வு முக்கியத் தேவையென்றே கருத்தினைத் தெரிவிக்கின்றனர். மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் மூன்றாவது அலை (2021 – 2025) தொடங்க வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கும் மலேசியர்களின் தேர்வு கண்ணோட்டத்திலான சிந்தனையையும் நாம் ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது.

இதன் வழி நமது கல்விப்பெருந்திட்டத்தின் அடிப்படை சித்தாந்தமே ஆட்டம் கண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். கடந்தாண்டு இறுதியில் நமது கல்விப் பெருந்திட்டம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வெற்றி அடைந்துள்ளது என்பதைச் சான்றுகளுடன் கல்வியமைச்சு நிறுவியுள்ளது.
பள்ளி திறக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கும் பரிந்துரைக்கும் உட்பட்டது. அதன் பிறகே கல்வியமைச்சின் அறிவிப்பு வெளிவரும்.

ஆனால் அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன் என்றுதான் புரியவில்லை?

ஆசிரியர்கள் தம் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆசிரியர்கள் மாணவர்கள் உளத்தியலை நன்கு அறிந்தவர்கள்; கட்டுக்கோப்புடன் பணி செய்யக்கூடியவர்கள்; நேரங்காலம் பாராது உழைப்பவர்கள்; தம் சொந்தப் பணத்தையும் பள்ளிக்காக, மாணாக்கர்களுக்காகப் பயன்படுத்துபவர்கள்; ஆசிரியப்பணி அறப்பணி என்ற சிந்தனையில் பணிபுரிகின்றவர்கள்.

அரசாங்கம், கல்வியமைச்சு ஆசிரியர்களை நம்பாமல் பெற்றோர்கள் யாரை நம்புவது?

வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை வகுத்துவிட்டால் இதில் திண்ணமாகச் சிக்கல் எழ வாய்ப்பில்லை. மனம் உண்டானால் மார்க்கமுண்டு. பள்ளி திறக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதற்கான வழிகளை ஆராய வேண்டுமே தவிர கோவிட் 19 முற்றாக ஒழியும்போதுதான் பள்ளி திறக்கப்படும் என்றால் அது செயல் திறனற்ற ஒன்றாகக் கருதப்படும்.
பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் இருப்பின் அவர்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி கற்கும் நிலைக்கு ஒப்புதல் வழங்கலாம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு பள்ளிக்கு அனுப்பலாம்.
உயிருக்கு ஆபத்து என்கின்ற ஆசிரியர்களுக்கு வீட்டிலிருந்தே பாடம் போதிக்கும் ஒப்புதல் அல்லது இருக்கும் விடுமுறை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கலாம். உயிரா, பணமா என்ற நிலை வரும்போது உயிர்தானே முக்கியம்!

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்குப் பின்னரே கல்வியமைச்சு பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்கும் நடவடிககைகளில் இறங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. பலதரப்பட்ட ஆய்வுக்குப் பின்னரே இம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே. பின்னர் ஏன் தயக்கம் என்பது புரியவில்லை.

நமது சுகாதார அமைச்சு திறம்பட இயங்கியுள்ளது என்பதை உலக நாடுகள் பாராட்டியதை நம் அனைவரும் அறிவோம். அதே வேளையில் உலக சுகாதார நிறுவனமும் நம் நாட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளது. இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

செயற்பாட்டுக்கு முன்னரே கணிப்புகள் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றேன். கல்வியமைச்சின் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்; வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயற்படுவோம்.

– சங்கா சின்னையா, பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்