இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் ‘பப்’ எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
‘லோஞ்’ எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய தொழில் முனைவர்கள் அதிக அளவில் மதுபான விடுதிகளை நடத்திவருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான இந்தியர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் 2 மாதங்களுக்கு முற்றிலும் முடக்கம் கண்ட இதர தொழில்கலைப் போல இந்தத் துறையும் பாதிக்கப்பட்ட போதிலும் மே மாத வாக்கில் இந்நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. ஆனால் நல்லிரவு 12 மணிக்கு அவை மூடப்படவேண்டும் என்ற கட்டுப்பாடும் கூடவே வந்தது.
இதற்கு முன் பின்னிரவு 2 அல்லது 3 மணி வரையில் கூட திறந்திருந்த பல நிலையங்களின் வியாபாரம் இந்த நேரக் கட்டுப்பாட்டினால் கிட்டதட்ட 40 விழுக்காடு வரையில் சரிவு கண்டதாகத் தெரிகிறது.
இவ்வேளையில் தங்களுடைய தொழிலை பழையபடி இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு அரசாங்கத்தின் தளர்வுகளுக்காகக் காத்திருந்த இந்நிலையங்களை வேறுவிதமான ஒரு பாதிப்பு 2ஆவது அலையாகத் தாக்கியுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு எதிரான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு அண்மையில் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து தங்களுடைய தொழில் மேலும் 20 விழுக்காடு வரையில் பாதிப்படைந்துள்ளதாக பல மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் நொந்துகொண்டுள்ளனர்.
பால் பொங்கும் வேளையில் தாழி உடைந்த கதையாக, ஏறக்குறைய 60 விழுக்காட்டு இழப்பை தாங்க முடியால் அவர்கள் தலை மேல் கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய இழப்பை சமாளிக்க முடியாமல் பல மதுபான விடுதிகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன என்றும் நம்பப்படுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் தலைநகரில் வெற்றிநடை போட்ட பிரபல மதுபான விடுதி ஒன்றும் கூட விற்பனைக்கு உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மதுபான விடுதிகளுக்கு பெயர்பெற்ற இடமான பங்சார் வட்டாரத்திலும் இதே நிலைமைதான். அங்குள்ள பல நிலையங்கள் விற்பனைக்கு அல்லது மூடப்படும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு பிரச்னைக்குப் பின்னாலும் ஏதாவதொரு வாய்ப்பு ஒழிந்திருக்கும் என்பதற்கு ஏற்ப நம் இளைஞர்கள் சிலர் புதுவிதமான தொழில்களைத் தொடக்கி இதற்கு தீர்வு காண முற்பட்டுள்ளனர்.
கடுமையாக்கப்பட்டுள்ள சட்ட விதிகளுக்கு பயந்து வீட்டினுள்ளேயே முடங்கிக்கிடக்கும் மது பிரியர்களுக்கு ஆறுதலாக, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அண்மைய மாதங்களாக பலவிதமான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருவது சற்று ஹாஸ்யமாகக் கூட உள்ளது.
‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் – நீங்கள் அருந்துங்கள், நாங்கள் ஓட்டுகிறோம்’ எனும் ஒரு விளம்பரம், ‘நாங்களே உங்களை மதுபான விடுதிக்கு அழைத்துச் சென்று, பிறகு பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைப்போம்’, என்று குறிப்பிடுகிறது.
உங்கள் பாதுகாப்பான பயணம் எங்கள் கையில். ‘கவலையை விடு, குவளையை எடு’ எனும் அடுக்கு மொழியில் மற்றொரு விளம்பரம்.
‘வருத்தப்படாதீர்கள் – மது அருந்துவதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள், பத்திரமாக அனுப்புவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்’ என பிரிதொரு விளம்பரம். இந்த சேவைக்கு தாங்கள் பயன்படுத்தும் கார்களையும் கூட அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எம்மாதிரியான கார் வேண்டும் என வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
இன்னொரு விளம்பரமோ, ‘உங்கள் கார் – எங்கள் டிரைவர்’, என்று குறிப்பிட்டு ‘நீங்கள் எங்கிருந்தாலும் நாங்கள் அங்கு வந்து உங்கள் காரிலேயே உங்களை அழைத்துச் செல்வோம்’ என்று கூறுகிறது.
மற்றுமொரு நிறுவனம், வாடிக்கையாளரோடு அவருடைய காரையும் ஒரு லோரியில் ஏற்றிச் செல்ல உறுதியளிக்கிறது.
இம்மாதிரியான தனிப்பட்ட நிறுவனங்களின் பலதரப்பட்ட சேவைகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு மதுபான விடுதி சொந்தமாகவே இதுபோன்ற சேவையை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முற்பட்டுள்ளது.
புலனம் வழியாக விண்ணப்பம் செய்தால் வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே வாகனத்தை அனுப்பி அவரை ஏற்றி வந்து பிறகு அவரை திருப்பி அனுப்புவதற்கான சேவைகளையும் அந்த மதுபான விடுதி வழங்குகிறது.
இதுபோன்ற சேவைகளுக்கு தனிப்பட்ட கட்டண அட்டவணையை சம்பந்தப்பப்ட எல்லா நிறுவனங்களுமே வைத்திருக்கின்றன. தூரத்திற்கு ஏற்வாறு கட்டணங்கள் அமைகின்றன.
மது அருந்துவதை ஊக்குவிக்கக் கூடாது என்ற போதிலும் சமயோசிதமாக சிந்தித்து தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய தொழில்களைத் தொடக்கியுள்ள நமது இளைஞர்களின் முயற்சிகளை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
இத்தகைய சேவைகள் இல்லையென்றால் தொழில் இழப்பை சமாளிக்க முடியாமல் அதிகமான மதுபான விடுதிகள் முடப்படுவதை தவிர்க்க இயலாது. அத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரமும் கூட கேள்விக்குறியாகிவிடும் என்பது திண்ணம்.
ஆக, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது ஒருபுறமிருக்க மதுபான விடுதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தால் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அது உதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.