‘அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை, நியாயமாக விவாதிக்கப்பட வேண்டும்’ – எஸ் அருட்செல்வன்

கருத்து | அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை வழங்குவதற்கான தெங்கு ரஸலீ ஹம்சாவின் முன்மொழிவு ஒரு சிறந்த யோசனையாகும், மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமடைந்த போதிலும், நம் நாட்டில் தலைவிரித்தாடும் இனவெறி பிரச்சினையைப் புதைக்க விரும்பினால், இதனை விவாதிப்பது நியாயமானது.

1947-ம் ஆண்டில் புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ.-ஆல் இந்தச் சிறந்த யோசனை முன்மொழியப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், மக்கள் அரசியலமைப்பு நமது அரசியலமைப்பாக மாறியிருந்தால், இன்று மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களிடையேயான இன துருவமுனைப்பு மற்றும் ஒற்றுமை பலவீனம் தலைகாட்டியிருக்காது, அதேப்போல் பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத பிரச்சனையும் இருந்திருக்காது.

புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ. சமர்ப்பித்த மக்கள் அரசியலமைப்பு, மலாயாவின் தேசியம் அனைத்து இனங்களுக்கும் திறந்துவிடப்பட்டு, ஒவ்வொரு குடிமகனையும் “மலாய்” என்று அழைக்க அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தது. அந்த நேரத்தில் மக்கள் அரசியலமைப்பின் முன்மொழிவுகளில், சட்டத்தில் இனப் பாகுபாட்டைத் தடுக்க ஓர் “இனக்குழு மன்றம்” நிறுவப்பட்டது.

இந்த யோசனை டாக்டர் புர்ஹானுதீன் அல்-ஹெல்மி போன்ற இடது தேசியவாத நபர்களால் பிறந்து மட்டுமல்ல, மற்ற இடதுசாரிகளின் சிந்தனைகூட அதுதான். இது தான் செங் லோக்-உடன் எட்டப்பட்ட ஒரு சமரசமாகும், மேலும் அந்த நேரத்தில் ம.இ.கா. போன்ற மலாய் அல்லாதக் கட்சிகளாலும் அது ஆதரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பார்த்தால், மோதல் நிலைக்கு இரண்டு சிக்கல்கள் இருந்தன, அதாவது ஏ.எம்.சி.ஜே.ஏ. ஆதரித்த குடியுரிமை (ஜுஸ் சோலி) திட்டத்தை, புத்ரா விரும்பவில்லை, அதேபோல், என அழைக்கப்படும் அனைத்து குடிமக்களுக்கும் ஜனநாயக முறையிலான மலாய் பெயர் திட்டத்தை புத்ரா முன்மொழிந்தது, ஆனால் ஏ.எம்.சி.ஜே.ஏ. ‘மலாயன்’ என்றப் பெயரை முன்மொழிந்தது.

ஆனால் டாக்டர். ஏ-புர்ஹானுதீன் ஹெல்மி, அஹ்மத் போஸ்தமம் மற்றும் தான் செங் லோக் ஆகியோர் ஒரு சமரசத்தை எட்டினர், அதில் குடியுரிமை அனைவருக்கும் திறந்திருக்கும், ‘மலாய்’ குடியுரிமை என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் கலவையாக விளங்கிய ஏ.எம்.சி.ஜே.ஏ., அந்த ஆவணத்தில் இஸ்லாமிய மதத்தின் 10 கொள்கைகளையும் மலாய் பழக்கவழக்கங்களையும் முன்மொழிந்ததோடு; மலாய்க்காரர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

சமரசம் மற்றும் சகிப்புத்தன்மையுடன், அவர்களால் ஓர் இனவெறி பிரச்சினையை மிகவும் புத்திசாலித்தனமாக தீர்க்க முடிந்தது. அவர்களின் தீர்வு சமுதாயத்தை இரண்டு குழுக்களாகப் பிரிப்பது அல்ல, மாறாக பொதுவான ஒரு ஒற்றுமையை நாடுவது.

இருப்பினும், அந்த நேரத்தில், பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் மத்திய அரசியலமைப்பை விரும்பினர், இது அம்னோ’வால் ஆதரிக்கப்பட்டது.

தெங்கு ரஸலீயின் முன்மொழிவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பைக் கொடுக்கும் தரப்பு அம்னோவிலிருந்து வரும் என்று நான் நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, அம்னோவின் முதல் தலைவர் ஓன் ஜாஃபர் பதவி விலக வேண்டியிருந்தது, ஏனெனில் பல இனங்கள் கொண்ட ஒரு கட்சி யோசனையை அம்னோ எதிர்த்தது. இன்றும் இது தொடர்கிறது, பல்லினக் கட்சியின் தலைவரான அன்வர் பிரதமராக முடியாது என துன் மகாதீர் எதிர்க்கிறார்.

இன்றைய சூழ்நிலையில், இனவெறி மற்றும் மதக் கட்சிகளிடமிருந்து கட்டுப்பாடுகள் வரும், ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, அது அவர்களின் அடையாளப் போராட்டத் திட்டத்தை அச்சுறுத்தும். மற்றொரு சிக்கல் என்னவென்றால், புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ. இந்த யோசனையை முன்மொழிந்த போது, ‘மலேசியா’ இன்னும் உருவாகவில்லை, அந்த நேரத்தில் நாட்டின் பெயர் ‘மலாயா’ அல்லது ‘தானா மெலாயு’. எனவே, இது ஒரு மலாய் அடையாள குடியுரிமை.

இன்று, பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாதவர் பிரச்சினை மக்களைப் பிரிக்கும் ஒரு இனச் சுவரை உருவாக்குகிறது. உதாரணமாக, மலேசியாவில் உள்ள இந்தியர்களும் சீனர்களும் தங்கள் தினசரி உரையில் நாட்டில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என்று சொல்வார்கள், ஆனால் வெளிநாட்டில் இருக்கும்போது தாங்களை மலேசியர்கள் என்று பெருமையுடன் கூறுவார்கள்.

எனவே இன்று, இரு தரப்பிலும் அதற்கு ஒரு சமரசம் தேவை. மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இன அடையாளத்தைக் கைவிடத் துணிய வேண்டும், அதேசமயம், மலாய்க்காரர்களும் பழங்குடி மக்கள் எனும் தங்கள் அடையாளத்தைக் கைவிடத் தயாராக இருக்க வேண்டும் – இது நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஒரு புதிய நாட்டை உருவாக்கியபோது இல்லாத ஒரு சொல் ஆகும்.


எஸ் அருட்செல்வன் மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்