அமுதா கருப்பண்ணனின் அபாரப் பயணம்!

இராகவன் கருப்பையா- ஆண்களை மிஞ்சும் பெண்கள் அதிசயிக்கும் சாதனைகளை புரிவது அரிது. அதிலும் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சாதிக்கும் தமிழ்ப் பெண்களைக் காண்பது சற்று அபூர்வம்தான்.

ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வறுமைக் கோட்டில் வளர்ந்து ஆயுள் காப்புறுதித் துறையில் ஆசிய நிலையில் உச்சத்தைத் தொட்டவர்தான் அமுதா கருப்பண்ணன்.

ஒரு குடும்பப் பெண்ணாக, காப்பறுதியின் கருவறை கூட என்னவென்று தெரியாமல் அத்துறையில் கால் பதித்த அவர், நிகரற்ற தன்னம்பிக்கையாலும் கடுமையான உழைப்பாலும் காப்புறுதிக்கே கலங்கரை விளக்காக சுடர்விடும் ஆசிய ஜோதியானார்.

பிறந்ததிலிருந்தே வறுமையைத் தவிர வேரெதனையும் பார்த்திராத அமுதா, பிஞ்சு வயதிலேயே குடும்பத்தைக் காப்பாற்ற அம்மா சுட்டுக்கொடுத்த இட்லி, தோசையை இரு கூடைகளில் சுமந்து கால்நடையாகவே சென்று சுற்றுவட்டத்தில் விற்பனை செய்தது மட்டுமின்றி 8 வயதிலேயே தமது தந்தையுடன் டாமன்சரா பகுதியில் உள்ள பல வீடுகளில் தோட்ட வேலைக்குச் சென்றார்.

ஒரு சந்தர்ப்பத்தில் தோட்ட வேலை முடிந்த பிறகு அந்த வீட்டின் முதலாளியின் மணைவி வழங்கிய ஒரு சூடான பானத்தை அருந்திவிட்டு மெய்மறந்து போன அமுதா அந்தக் குவளையை இருக அணைத்துக் கொண்டு ‘இது என்ன பானம் அப்பா’ என தந்தையிடம் கேட்டிருக்கின்றார்.

‘இது பெயர் நெஸ்கஃபே கண்ணு. இது பணக்காரர்கள் அருந்தும் பானம், நம்மால் வாங்க முடியாது,’ என்று 40 ஆண்டுகளுக்கு முன் தமது தந்தை குறிப்பிட்டதை இப்போது கண்ணீர் மல்க நினைவு கூறும் அமுதா, தமது பதின்ம வயதில் வீட்டுப் பணிப் பெண்ணாகவும் வேலை செய்துள்ளார்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தப் பிள்ளையான அவர் குடும்பக் கடனை அடைக்க சொந்த பாட்டி வீட்டிலேயே பல ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்ய வேண்டிய கொடுமைக்கு ஆளானார்.

இவ்வளவு சோதனைகளுக்கிடையிலும் எஸ்.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற அமுதா மேல் படிப்பைத் தொடர வசதியில்லாமல் மீண்டும் வீட்டுப் பணிப்பெண் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு சீனர் வீட்டில் வேலை செய்யும் போது அங்குள்ள ஒரு நாய்ப்பட்டி, மற்றும் 3 கார்களையும் தினமும் கழுவ வேண்டியது மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட காலணிகளையும் 2 நாள்களுக்கு ஒரு முறை  ‘போலிஷ்’ செய்ததாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதே வீட்டில் ஒரு நாள், காலை உணவின் போது 2 ரொட்டித் துண்டுளை சாப்பிட முற்பட்ட வேளையில் தீடீரென அங்கு வந்த முதலாளியின் மணைவி ஒரு ரொட்டித்துண்டை விடுக்கென பறித்துக்கொண்டு, வீட்டுப் பணிப் பெண்ணுக்கு ஒரு ரொட்டித்துத் துண்டு போதும் என்று கர்ஜித்த அந்தக் கொடுமையான அனுபவம் இன்றும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் அமுதா.

இவ்வாரான சோகங்களையெல்லாம் தாண்டி தமது மேல்படிப்பைத் தொடரும் பொருட்டு வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு பகுதி நேர வகுப்புகளை நடத்தி வருமானம் ஈட்டினார்.

மேல் படிப்பை முடித்து செயலக நிறுவனம் ஒன்றில் வேலைக்கு அமர்ந்த அமுதா தமது 23ஆவது வயதில் ஜோன்சன் செல்லப்பன்  எனும் ஒரு மின்பொருள் விற்பனை பிரதிநிதியைக் கரம் பிடித்தார்.

அரும்பாகி, காய் காய்த்து கணியாக விழுவதற்குள் அடி இடிபோல் விழுந்தால் அன்பு வாழ்வும் இன்ப வாழ்வும் காற்றாற்று வெள்ளத்தில் காணாமல் போய்விடும். அதே நிலைமைதான் அமுதாவின் வாழ்விலும் ஏற்பட்டது.

ஒரு நாள் காலை அவருடைய கணவருக்கு திடீரென கடுமையான மூளை பக்கவாத நோய் ஏற்பட்டு ஆலமரம் போல் சாய்ந்தார்.

தொழிலில் பாடுபட்ட அவருடைய வெற்றியை குடும்பம் அனுபவிப்பதற்குள் சூடுபட்டு சுயமாய் சித்தமும் போய் சத்தமும் போய் படுத்த படுக்கையானார் அவர்.

மருத்துவமனையில் 2 வாரங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை குணப்படுத்த இயலாது என மருத்துவர்கள் கைவிரித்த போது தமது வாழ்க்கையில் ‘துன்பம் ஒரு தொடர்கதைதானா’ என்ற பெரியதொரு கேள்விக்குறியுடன், சக்கரநாற்காலியில் சாய்ந்து கிடந்த தமது கணவருடனும் 3 மகன்களுடனும் அங்கிருந்து கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறினார் அமுதா.

தமது கனவு, இலட்சியம் எல்லாமே அஸ்தமனமாகிவிட்டதே என்ற விரக்தியில் அன்றிரவே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற கடுமையான கொடுமையான ஒரு முடிவில் வீடு வந்தடைந்த அவரை வீட்டினுள்ளிருந்த குடும்பப்படம் ஒரு கனம் உலுக்கியது.

அந்த ஒரு விணாடிதான் அமுதாவின் இன்றைய அசுர சாதனைக்கு அடித்தளமாக அஸ்திவாரமிட்டது. தங்களுக்கு இல்லாவிட்டாலும் 8 வயது முதல் 14 வயது வரையிலான 3 மகன்களுக்காவது வாழவேண்டும் என முடிவெடுத்தார் அவர்.

ஆயுள் காப்புறுதித் துறையில் ஏற்கெனவே கோலோச்சி நின்ற ஒரு சில குடும்ப நண்பர்களின் ஆலோசனையின் பேரில் எழுந்தார், வீறுகொண்டு எழுந்தார். காப்புறுதியை கவசமாக அணிந்து கால்களை ஓடவிட்டார், காலத்தையும் வென்றார்.

இவர் சார்ந்த காப்புறுதி நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி உள்பட எல்லாரும் வியந்துபோகும் அளவுக்கு இவரது வெற்றி சிகரத்தை எட்டியது. அந்நிறுவனத்தின் நூற்றாண்டுகால வரலாற்றில் எந்த ஒரு இந்திய முகவரும் செய்திராத சாதனையைப் படைத்து சீன, மலாய்க்கார முகவர்கள் உள்பட எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்தார் அமுதா.

ஆயுள் காப்புறுதி முகவர்களுக்கான ஆக உயரிய விருதான டி.ஒ.டி(TOT) எனும் நிலையை இந்நாட்டில் மட்டுமின்றி ஆசிய கண்டத்திலேயே அடைந்த முதல் தமிழ் பெண் அமுதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

காப்புறுதியின் இரும்புப் பெண்மணி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான அவரை, சாதிக்க வேண்டும் என்று தீப்பொறியாய் எரிந்துகொண்டிருக்கும் எண்ணமே தூங்கவிடாமல் செய்து ஒரு சாதனையாளராக்கியது.

நாடு தழுவிய நிலையில் எண்ணற்ற தன்முனைப்பு கருத்தரங்குகளில் உரை நிகழ்தியுள்ள அமுதா தன்முனைப்பு குறுவட்டுகளையும் சுயசரிதை ஒன்றையும் கூட வெளியிட்டுள்ளார்.

தமது கணவரை மருத்துவர்கள் கைவிட்ட போதிலும் முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எண்ணத்தில் காப்புறுதியில் ஈட்டிய வருமானத்தைக்கொண்டு சற்றும் மனம் தளராமல் பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று இப்போது அவர் சுயமாக எழுந்து நடக்கும் அளவுக்கு சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார் அமுதா.

டாமன்சராவில் தமது தந்தையுடன் தோட்ட வேலை செய்த வீடுகளைப் போலவே தாமும் ஒரு ‘பங்களா’ வாங்க வேண்டும் என்ற வேட்கையிலும் வெற்றி பெற்ற அவர், முடியும் என்ற வைராக்கியம் இருந்தால் கடவுள் துணையுடன் எதனையும் சாதிக்கலாம் என்கிறார்.

‘ஏழையாக பிறப்பது தவறில்லை, ஏழையாக மரணிப்பதே தவறு’ என்பதுவே ஆசிய ஜோதி அமுதாவின் தாரக மந்திரம்.