இராகவன் கருப்பையா – ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது,’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது தற்காலிகமாக உருவாகும் மணல் மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்பது அதன் பொருளாகும்.
ஆனால் எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தற்போது அதைத்தான் செய்ய முனைந்துள்ளதைப் போல் தெரிகிறது. இந்த விஷப்பரீட்சையினால் ஏற்படக் கூடிய சிக்கல்களை அந்தக் கூட்டணி உணரவில்லை என்றேத் தோன்றுகிறது.
இதுவரையில் தனது கூட்டணியில் 12 கட்சிகள் இணைந்துள்ளதாகவும் மேலும் 2 கட்சிகள் சேரவிருப்பதாகவும் அதன் தலைவர் முஹிடின் யாசின் அண்மையில் அறிவித்தார்.
இருப்பினும், எத்தனை கட்சிகள் இணைந்துள்ளன எனும் எண்ணிக்கையை விட அக்கட்சிகள் எவ்வளவு பலத்தைக் கொண்டுள்ளன, என்பதே முக்கியமாகும். எண்ணிக்கையைக் காட்டி மடானி அரசாங்கத்தை அவர் பயமுறுத்த முடியாது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சிகள் தனது கூட்டணிக்கு எத்தனை இலட்சம், அல்லது குறைந்தபட்சம் எத்தனை ஆயிரம் வாக்குகளைத் திசைத்திருப்ப இயலும் என்பதை முஹிடின் மதிப்பீடு செய்தாராத் தெரியவில்லை. ‘வெறும் கையில் முழம் போட முடியாது,’ என்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ள இரு பெரும் கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சத்துவைத் தவிர்த்து கெராக்கானும் எம்.ஐ.பி.பி. எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்கின்றன.
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. பெரிக்காத்தான் கூட்டணி அதற்கான சகல முன்னெடுப்புகளையும் முடுக்கிவிட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது.
அந்தக் கூட்டணியில் முதுகெலும்பாகத் திகழும் பெர்சத்துவும் பாஸ் கட்சியும்தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. எம்.ஐ.பி.பி. கட்சியும் கெராக்கானும் வெறும் மாயைதான் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
ஒரு காலத்தில் பினேங் மாநிலத்தை ஆட்சி புரிந்த வலுவான கட்சியான கெராக்கான் தற்பொழுது ‘பல்லில்லா புலி’யாகப் பரிதவிக்கிறது. அதே சமயத்தில் எம்.ஐ.பி.பி. முற்றிலும் புதியவர்களைக் கொண்டு உருவான ஒரு ‘கொசு’ கட்சியாகும்.
இத்தகைய சூழலில் அந்தக் கூட்டணிக்குள் நுழைவதற்கு சாரை சாரையாக வரிசை பிடித்து நிற்கும் கட்சிகளில் பெரும்பாலானவை வெறும் ‘நொண்டிக் குதிரைகள்’தான்.
பொது மக்களிடையே, குறிப்பாக மலாய்க்காரர்களிடையே பெரிக்காத்தானின் செல்வாக்கு கணிசமான வேகத்தில் தற்போது வலுத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.
எனவே ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்,’ எனும் சுயநல வேட்கையில்தான் இந்தக் கட்சிகள் அக்கூட்டணியுடன் உறவாடத் துடிக்கின்றன என்பதும் யாவரும் அறிந்த உண்மை.
பதவி சுகபோகங்களை குறிவைத்துதான் இந்தக் கட்சிகளின் நகர்வுகள் உள்ளன எனும் யதார்த்தத்தை பெரிக்காத்தான் தலைவர்கள் உணர்ந்துள்ளார்களா தெரியாது.
ஆனால் தேர்தல் களத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கு இந்த ‘நொண்டிக் குதிரை’களின் பங்கு எவ்வகையில் ஆக்ககரமாக இருக்கும் என்பது கேள்விக் குறிதான்.
























