மஇகா-வின் வீழ்ச்சியும் – இந்தியர்களின் திக்கற்ற அரசியல் நிலைபாடும்

இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியுடன் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் இன்பத்திலும் துன்பத்திலும் கூட்டாக பங்கெடுத்து உறவாடிய பிறகு அந்த பழங்கால நட்பை தற்போது துண்டித்துக் கொள்ளும்  விளிம்பில் ம.இ.கா. நிற்கிறது.

“அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. அமைச்சரவை நியமனங்கள் மட்டுமின்றி அரசாங்க நிறுவனங்களிலும் கூட எங்களுக்கு இடமளிக்கப்படவில்லை,” என அக்கட்சியின் துணைத்தலைவர் சரவணன் அண்மையில் மிகக் கடுமையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“இந்த ஆட்சியில் நாங்கள் வரவேற்கப்படாத விருந்தாளிகளைப் போல இருப்பதால்  எங்களுடைய எதிர்கால இலக்கு குறித்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு முடிவெடுப்போம்,” என அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

சரவணனின் இந்த உணர்ச்சித் திரளைத் தொடர்ந்து, ‘பாரிசானை விட்டு ம.இ.கா. வெளியேற வேண்டும்,’ என அக்கட்சியின் பல மாநில ஆண்டுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தகையத் தீர்மானங்கள் முன்னுதாரணம் இல்லாத ஒன்று என்பதால், இது ஏற்கெனவே வரையப்பட்ட மேகா திட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட அரசியல் நகர்வாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ‘சோழியின் குடுமி சும்மாடு ஆகாது,’ அல்லவா!

ம.இ.கா.வின் இந்த ‘டிராமா’வை பாரிசானின் உயர்மட்டத் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களேத் தவிர உறுதியான, ஆக்ககரமான அறிக்கைகள் எதனையும் அத்தரப்பில் இருந்து காணவில்லை.

ம.இ.கா.வுக்கு முன்பிருந்த பலம் இப்போது இல்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ‘ஹிண்ட்ராஃப்’ பேரணிக்குப் பிறகு நம் சமூகத்தின் பெருவாரியான ஆதரவை இழந்துவிட்ட அக்கட்சி தற்பொழுது ‘சிறகொடிந்தப் பறவை’யாகத் தவித்துக் கொண்டிருப்பது அவர்களுக்கும் தெரியும்.

அமைச்சரவையிலோ அரசாங்க நிறுவனங்களிலோ பதவிகள் வழங்கப்படாமல் அக்கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ளது அதன் அரசியல் பலவீனத்தைதான் காட்டுகிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

அடிப்படையில் பார்க்கப்போனால் ஒரு அரசியல் கட்சியின் பலமானது, தேர்தல் காலங்களில் எந்த அளவுக்கு வாக்காளர்களின் ஆதரவை அது திரட்ட இயலும் என்ற அரசியல் கணத்தில்தான் உள்ளது.

பாரிசானுக்கு அரசியல் பலம் சேர்க்கும் அளவுக்கு ம.இ.கா.விடம் வலுவில்லாத பட்சத்தில் அந்தக் கூட்டணியை உரசிப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அக்கட்சியிடம் தற்போது இருப்பதோ ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதிதான். அதுவும் கூட பாரிசானின் ஆதரவில் கிடைத்த வெற்றிதான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் ஏறக்குறைய இதே போன்ற ஒரு நிலையில்தான் அக்கட்சி இருந்தது. தேர்தலுக்கு முன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிருப்தி கொண்ட அக்கட்சி, பாரிசானின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது. தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கக் கூடும் என்ற சூழலும் அப்போது நிலவியது.

எனினும் இதனையெல்லாம் சம்பந்தப்பட்ட யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றதை உணர்ந்த அதன் தலைவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பல்டியடித்து பாரிசானின் தேர்தல் களத்தில் மீண்டும் நுழைந்தனர்.

இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தலில் மடானி அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் தனது மேகா திட்டத்தில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறு சிறு கட்சிகள் அனைத்தையும் பெரிக்காத்தான் தன் வசம் ஈர்க்கத் துடிக்கிறது. எனவே ம.இ.கா.வும் அந்தப் பக்கம் இணைவதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

ஆனால் பெரிக்காத்தானில் ம.இ.கா.வின் பங்கு எப்பபடியிருக்கும் என்பதுதான் தற்போதைய ‘மில்லியன் டோலர் கேள்வி’. அதன் நிலை, ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதை’யாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் பெரிக்காத்தாளில் ஏற்கெனவே எம்.ஐ.பி.பி. எனும் ஒரு இந்தியக் கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்கிறது. அது மட்டுமின்றி காற்றில் சாய்ந்த நாணலைப் போல, நம் சமூகம் சார்ந்த கட்சிகளின் ஒரு பெரிய பட்டாளமே அங்கு முண்டியடித்து இடம் பிடிக்கக் காத்திருக்கின்றன.

வேதமூர்த்தி தலைமையிலான ‘எம்.ஏ.பி.’, ராமசாமி தலைமையிலான ‘உரிமை’ மற்றும் மலேசிய இந்திய முஸ்லிம் கட்சி, ஆகியவையும் அவற்றில் அடங்கும். எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்குள் இன்னும் எத்தனை கட்சிகள் இந்தப் பட்டியலில் சேரும் என்று தெரியாது.

பெர்சத்து கட்சியில் இந்திய பிரிவு ஒன்று இருப்பதையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூற வேண்டும். இவை அனைத்துமே தொகுதி, பதவி, போன்ற கனவுகளைச் சுமந்துதான் அங்கு சாய்த்துள்ளன என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

நம் நாட்டில் எந்த ஒரு தொகுதியிலும் இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மையாக இல்லாத பட்சத்தில், இந்த கட்சிகளைச் சேர்ந்த எண்ணற்ற வேட்பாளர்களுக்குத் தொகுதி பங்கீடு செய்வது பெரிக்காத்தானுக்கு மிகப் பெரியதொரு தலைவலியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக, “எங்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை, அரசாங்க நிறுவனங்களிலும் நியமனங்கள் இல்லை,” எனும் ஆதங்கத்தில் பாரிசானை விட்டு வெளியேற எண்ணும் ம.இ.கா.வின் திட்டம் முற்றிலும் சுயநலமிக்க ஒரு முடிவாகவே கருதப்படுகிறது.

மாறாக, பழைய மாதிரி இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் கணிசமான அளவுக்கு நம் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் வகையில் தனது சேவைத் தரத்தை மேம்படுத்தி மக்களைக் கவருவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை முதலில் அக்கட்சி மேற்கொள்ள வேண்டும்.

பதவி இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்றில்லாமல், அரசாங்கப் பதவிகள் இல்லாவிட்டாலும் ஒரு அரசு சாரா நிறுவனத்தைப் போல இயங்கி நம் சமூகத்தைச் சார்ந்த சாமானிய மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவந்தால் பெயர், புகழ், பட்டம், பதவி எல்லாம் தானாகவே வரும்.

கடந்த காலங்களில் எண்ணற்ற பதவிகளும் நியமனங்களும் இருந்த போது, “சமூகத்திற்காக அப்படி என்ன சாதனை புரிந்தார்கள்?” எனும் கேள்வி எழுவதிலும் நியாயம் உள்ளது.

காரணம், இனவாத கட்சி அரசியலில், ஒரு சிறுபான்மை இனம், அதன் பலத்தை காட்டி மிரட்ட இயலாது என்பதையும், சிறுபானமையினரின் அரசியல் பலம், பலவீனமான பெரும்பான்மை உண்டாகும் போதுதான் கிடைக்கும்.

இக்கட்டான சூழல்களில் உள்ள ஒரு சிறுபன்மை இனம், மேலும் பிரிவினைவாத தன்மையுடன் போட்டா போட்டியுடன் குட்டி அரசியல் கட்சிகளை உண்டாக்குவதால் மேலும் பலவீனமாகிறார்கள்.

இந்த நிலைமையில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பலவீனமான அரசியல் நிலைதான் நமக்கு உள்ளது.