‘தமிழ் மொழி, இனம், பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து மதச் சாயம் பூசாதே!’ – இந்து சங்கத்திற்குத் தமிழர் தேசிய இயக்கங்கள் கண்டனம்

மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழ்ப்பள்ளிகளில் மூக்கை நுழைக்கும் வண்ணமாக, தமிழ்மொழி, தமிழர் இன வரலாறு போன்றவற்றில் அடிப்படை  புரிதலற்ற நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது.

தமிழ்ப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழிக்கும் எழுத்துக்கும் பங்காற்றியவர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்குறிப்புகள் தமிழ் மொழியின் வரலாற்றை மையப்படுத்தியதாகும். மாறாக, மலேசிய இந்து சங்கம் அறிக்கை கூறுவதுபோல, எந்த ஒரு சித்தாந்தமும் கொள்கை திணிப்பும் இல்லை. அப்படி, திராவிட சித்தாந்தக் கொள்கை திணிப்பு என்பது பள்ளிகளில் இருக்குமானால், அதனை முதலில் எதிா்ப்பதே தமிழர் இயக்கங்களாகத்தான் இருக்கும்.

அதோடு தை முதல் நாள், தமிழர் புத்தாண்டாகத் திணிக்கப்படுவதாவும் இந்து சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களின் தொடர் ஆய்வுகளால், தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற வரலாற்று மீட்சியைத் தமிழ்ப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் முன்னெடுப்பைத் திணிப்பு என சாடுவதும், கூறுவதும் தமிழர்களிடையேக் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

தன் இன வரலாற்றை அறிந்த எத்தனையோ தமிழர்கள் இந்து சங்கத்தை ஏற்கவில்லை. உண்மையில் இந்து மதம்தான் அண்மையில் தமிழர்களிடத்தில் திணிக்கப்பட்டது என்பது வரலாறு. தமிழரிடத்தில் சிவனியம், மாலியம், முருகியம், முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்ற பல சமய வழிபாட்டு நிலைகள் காலங்காலமாக இருப்பதையும் தமிழர் அறிவர்.

ஆதியிலிருந்து  தமிழ் முன்னோர்கள் யாவரும் உலக இயற்கையும் அறிவியலும் உணர்ந்து வகுத்து, தைத் திங்களேத் தமிழர்ப் புத்தாண்டாக கொண்டாடி, வழி வழியே இன்றுவரை தமிழருக்குக் கற்பித்து வந்துள்ளனர். அதற்குப் பற்பல இலக்கியச் சான்றுகளையும் வாழ்வியல் சான்றுகளையும் வழங்கி, தமிழ்ப் பேரறிஞர்களும் தமிழின ஆதரவாளர்களும் மெய்பித்து தீர்மானித்துள்ளனர்.

தமிழறிஞர், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் நடத்தப்பட்ட இரு மாநாடுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும் தமிழின ஆதரவாளர்களும் சமயம், மதம், அரசியல் கொள்கைகளைக் கடந்து, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும், திருவள்ளுவராண்டு தமிழருக்குத் தொடராண்டு எனவும் அறிவித்தனர். மலேசிய மண்ணில்’தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு உலகப்பரிந்துரை மாநாடு’, கடந்த 2001, 2004, 2013-ஆம் ஆண்டுகளில் 3 முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ஏற்றே, திருவள்ளுவராண்டு தமிழ் நாளிதழ்களிலும், தமிழ் நாள்காட்டியிலும் இன்றுவரை நடைமுறையில் உள்ளதை எவறாலும் மறுக்க முடியுமா?

அதிகாரப்பூர்வமாக, 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, மேற்படி திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தனது நாட்குறிப்பிலும், 1972-ஆம் ஆண்டு அரசிதழிலும் வெளியிட ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து, அனைத்து ஆவணங்களிலும் தமிழர் ஆண்டு தொடக்கமாகத், தை (சுறவம்) 1-ஆம் நாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென 01.01.2008 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்றியது.

 

மேலும், தமிழ்நாட்டில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 13-ஆம் நூற்றாடைச் சேர்ந்த பழங்காலக் கல்வெட்டிலும் தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டிலும் தை முதல் நாளே தமிழர்ப் புத்தாண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் பெருஞ்சான்று.

எனவே, இதனை அறியாமல் கடந்த நூற்றாண்டில் தோன்றியத் திராவிட அரசியலுக்கும் தமிழரின் தொன்மையான வரலாற்றுக்கும் அடிப்படையில்லாமல் முடிச்சுப்போட்டு கருத்துரைப்பது அறியாமையின் உச்சமாக உள்ளது.

நிலைமை இப்படியிருக்க, இந்து சங்கத்தின் அறிக்கை அறியாமையும் தெளிவின்மையும் யாரோ கூறியதை ஆய்ந்து பார்க்காமல் எழுதியதைக் காட்டுகிறது.

தமிழ்ப்பள்ளி தமிழினத்தின் மொழி, இன, தனிச் சமயப் பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாக கொண்டது.  இதில் இந்து சங்கத் தலையீடுகள் இல்லாமல் இருப்பதே அறிவார்ந்தது. இந்நாட்டில் ஏரத்தாள 3000-க்கும் மேற்பட்ட ஆலயங்களும் நூற்றுக்கணக்கான இந்து சங்கம் உட்பட்ட சமய இயக்கங்களும் நடந்துகொண்டிருக்கிற சமய விழாக்களும் புகுத்தாத புகட்டாத சமயநெறிகளை, அரசாங்கக் கல்விக் கொள்கையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிற, வெறும் 527 தமிழ்ப்பள்ளிகளின் வழியாகத்தான் மாணவர்களுக்குச் சமயத்தைப் புகட்ட வேண்டுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. எனில், உங்கள் சமய இயக்கப் பணியில் நீங்கள் தோல்வி கண்டுவிட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

அங்கிகாரம் பெற்ற கல்வியமைச்சின் திறன்மிகு அதிகாரிகளால் தமிழ்மொழிப் பாடத்திலும் தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் முன்வைக்கப்படும் ஆக்கமான தமிழ்மைச் சார்ந்த கருத்துகளையும் செயல்பாடுகளையும் தமிழர்கள் வரவேற்பது மேலும் ஊக்கமளிக்கின்றார்கள்.

இறுதியாக, இத்தோடு இந்து சங்கம் மத சித்து விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தமிழர் தேசிய இயக்கங்கள் நினைவுறுத்துக்கிறோம். தொடர்ந்து, தமிழர்களிடையிலான இந்து மத உணர்வைப் பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முயன்றால், கடுமையான எதிர்வினைகளை எதிா்நோக்கக் கூடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கண்டனம் தெரிவிக்கும் தமிழர் தேசிய இயக்கங்கள் :-

  1. உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்
  2. மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை
  3. மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம், சுங்கை சிப்புட்
  4. வள்ளலார் அன்பு நிலையம், புந்தோங், ஈப்போ
  5. கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்
  6. மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம்
  7. மலேசியப் புதியத் தமிழ் தலைமுறை இயக்கம்
  8. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம்
  9. மலேசியத் தமிழர் செயல்குழு இயக்கம்
  10. தமிழர் ஒற்றுமை இயக்கம்
  11. பேராக், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கம்
  12. தமிழ் வளர்ச்சிக் கழகம்
  13. குறிஞ்சித்திட்டு தமிழ்க் கழகம், ஈப்போ, பேராக்
  14. பினாங்கு தமிழ் வாழ்வியல் இயக்கம்
  15. கம்பார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் கழகம்
  16. மலேசியத் தமிழியல் ஆய்வுக் களம்
  17. சிலாங்கூர் மக்கள் சமுகநல இயக்கம்
  18. மலேசியச் சைவ நற்பணிக் கழகம்
  19. பேராக் தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம்
  20. மலேசியத் தங்கத் தமிழர் இயக்கம்