‘கடவுள் துகள்கள்’ என்றால் என்ன? ‘காட் பார்டிகிள்’ எனும் பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்?

சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ‘லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்’ மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது.

பிரிட்டனில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், ‘நிறையின் தோற்றம்’ என்று தமிழில் பொருள்படும் ‘ஆரிஜின் ஆஃப் மாஸ்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பேரண்டம் உருவாகக் காரணம் என்று பெரும்பான்மையான அறிவியலாளர்களால் நம்பப்படும் ‘பெரு வெடிப்பு’ (Big Bang) நிகழ்ந்தது.

அந்த வெடிப்பில் இருந்து சிதறிய கூறுகள், வெவ்வேறு திசைகளில் ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் சிதறின. அவ்வாறு சிதறிய கூறுகளுக்கு நிறை கிடையாது.

நிறை இல்லாத அந்தக் கூறுகள் ஓர் ஆற்றல் புலத்தில் இணையும்போது அவை நிறை பெறுகின்றன என பீட்டர் ஹிக்ஸ் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

(ஒரு பண்டத்தில் எந்த அளவுக்கு பொருள் திணிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் நிறையானது ‘பொருண்மை’ அல்லது ‘திணிவு’ என்றும் வழங்கப்படுகிறது. அப்பண்டத்தின் நிறையுடன், அது இருக்கும் இடத்தில் உள்ள ஈர்ப்பு விசையைப் பெருக்கினால், அதன் எடை கிடைக்கும். எடுத்துக்காட்டாக புவியிலும், நிலவிலும் ஒரே பொருள் அல்லது நபரின் எடை வேறுபடக் காரணம், இரண்டின் ஈர்ப்பு விசையும் வெவ்வேறாக இருப்பதே. )

அந்த ஆற்றல் புலம் அறிவியலாளர்களால் ‘ஹிக்ஸ் புலம்’ (Higgs Field) என்றும், அந்த ஆற்றல் புலத்தில் இருந்துகொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் நிறையை வழங்கும் துகள்கள் ‘ஹிக்ஸ் போசான்கள்’ (Higgs Bosons) என்றும் அழைக்கப்படுகின்றன. நான் சொன்னதை யாருமே தீவிரமாக எடுத்துகொள்ளவில்லை, என்னுடன் யாரும் பணியாற்ற விரும்பாவில்லை என்று தனது ஆய்வுக் கட்டுரை குறித்து பிபிசி ரேடியோ- 4 நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் பீட்டர் ஹிக்ஸ் .

1960களில் பீட்டர் ஹிக்ஸ் அனுமானமாக முன்வைத்த இந்தத் துகள்களின் இருப்பு, 2012இல் பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், பூமிக்கு அடியில் அமைத்துள்ள ‘லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்’ (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன் மிக்க துகள் முடுக்கி (Particle Accelerator) மூலம் செய்யப்பட்ட சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதுவரை கண்டுபிடிக்க முடியாத மற்றும் இயலாத ஒன்றாகவே இது கருதப்பட்டு வந்தது. இதுவே கடவுளுடன் இந்தத் துகள்கள் அடையாளப்படுத்தப்படக் காரணமானது என்பதைப் பற்றிப் பார்க்கும் முன், ‘ஹிக்ஸ் போசான்’ எனும் பெயருக்கு உள்ள இந்தியத் தொடர்பு குறித்துக் காண்போம்.

  • போசான்இந்திய விஞ்ஞானியின் பெயர்

இந்தப் பேரண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்கள் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ஆகியவற்றால் ஆனவை.

புரோட்டான், நியூட்டரான் போன்றவற்றையும் அணுவடித் துகள்களாகப் பிரிக்க இயலும். இந்த அணுவடித் துகள்கள் அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என இரு வகைப்படும்.

அடிப்படைத் துகள்கள் போசான்கள் (Bosons), ஃபெர்மியான்கள் (Fermions) என இரு வகைப்படும். குவாண்டம் புள்ளியியலின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றான போஸ் – ஐன்ஸ்டைன் புள்ளியியல் கோட்பாட்டை மேம்படுத்த இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் ஆற்றிய பங்களிப்பைபோற்றும் வகையில் பால் அட்ரியன் டிராக் எனும் அறிவியலாளர், இந்தக் கோட்பாட்டின்படி அமைந்துள்ள அடிப்படைத் துகள்களுக்கு ‘போசான்கள்’ என்று பெயரிட்டார்.

ஹிக்ஸ் அனுமானித்த இந்த துகள்களும், ஒரே குவாண்டம் நிலையில் இயங்கும் பல துகள்கள் இருக்கும்படியான போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் கோட்பாட்டின்படி அமைந்துள்ளது என்பதால் இதற்கு ‘ஹிக்ஸ் போசான்’ என்று பெயர் வந்தது.

‘கடவுள் துகள்கள்’ என்று பெயர் வந்தது எப்படி?

1982ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற லியோன் மேக்ஸ் லேடர்மேன், எழுத்தாளர் டிக் தெரேசி உடன் இணைந்து எழுதிய நூல் ‘The God Particle: If the Universe Is the Answer, What Is the Question?’ என்பது.

1993இல் வெளியான இந்த நூலின் தலைப்பில் The Goddamn Particle என்று எழுதியிருந்தனர்.

‘goddamn’ எனும் ஆங்கில வார்த்தை சலிப்பு அல்லது வெறுப்பால் உண்டாகும் கோபத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவது.

ஆய்வாளர்கள் கண்ணில் சிக்காமல் நழுவிக்கொண்டே போகும் அந்த ‘போசான்’ துகள்களை விளக்கும் வகையிலான அந்தத் தலைப்பை நூலின் பதிப்பாளர் விரும்பவில்லை.

இதன்காரணமாக இதன் பெயரை ‘The God Particle’ என்று மாற்றியதாக லியோன் மேக்ஸ் லேடர்மேன் மற்றும் டிக் தெரேசி அப்புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளனர்.

நாசா வெளியிட்ட கருந்துளை சித்தரிப்பு படம்

‘ஹிக்ஸ் போசான்’ துகள் இருப்பதாக ஓர் அனுமானம் முன்வைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட, பல்வேறு ஆய்வுகளிலும் இதன் இருப்பு உறுதிசெய்யப்படாமல் இருந்தது. அதனால் உண்டான சலிப்பையே அவர்கள் ‘goddamn’ என்று எழுதியுள்ளனர்.

அதுவே ‘கடவுள் துகள்கள்’ என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார் என்று மதங்கள் நம்புவதால், உலகில் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் நிறையைக் கொடுக்கும் இந்த துகளுக்கு ‘கடவுள் துகள்’ என்று ஒரு சாராரால் அழைப்புப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்போது அறியப்படாத அந்தத் துகள்களை கடவுளாக சித்தரிப்பதையோ, குறிப்பதையோ பல மதகுருக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இது அலுவல்பூர்வமான பெயர் அல்ல என்பதால் அறிவியல் ஆய்வாளர்கள் அவ்வாறு அதை அழைப்பதில்லை, என்று பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்களும் தங்கள் பேட்டிகளிலும் உரைகளிலும், ‘ஹிக்ஸ் போசான்’ துகள்களை ‘கடவுள் துகள்கள்’ என்று அழைப்பது சரியானதல்ல என்று தெளிவு படுத்தியுள்ளனர்.

BBC