பக்காத்தான் – அம்னோ கூட்டணியில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன! ~இராகவன் கருப்பையா

சுமார் ஒரு ஆண்டுக்கு முன் புறவழி அரசாங்கம் அமைந்ததில் இருந்து மலேசிய அரசியல் களத்தில் அவ்வப்போது நிகழும் திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை.

ஆகக்கடைசியாக இப்போது பக்காத்தானும் அம்னோவும் கூட்டணி அமைப்பது தொடர்பான செய்திகள் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது.

அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் அறிவித்துள்ள போதிலும் அப்படி ஒன்றும் இல்லை என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் மறுத்துள்ளார்.

ஆனால் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என நம் எல்லாருக்கும் நன்றாகவேத் தெரியும். வார இறுதியில் நடைபெறவிருக்கும் அம்னோ பொதுப் பேரவையின் போது வெளிப்படவிருக்கும் பேராளர்களின் உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கு முன் அவசரப்பட்டு மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

பிரதமர் முஹிடினின் ஆளும் பெர்சத்து கட்சியுடன் அனைத்து ஒத்துழைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும் என அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ள போதிலும் பக்காத்தானுடனான உறவு குறித்த அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்று இதுவரையில் தெரியவில்லை.

எனினும் புதிய ஆட்சியமைக்க அன்வாருக்கு ஆதரவளிப்பதாகக் கூறிவிட்டு பிறகு பின்வாங்கியதும் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக அறிவித்து பிறகு முடிவை மாற்றிக்கொண்டதுமாக இருமுறை அம்னோ பல்டியடித்ததை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டுகாலமாக  நிலையற்ற அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டில் எப்போ என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

இருந்த போதிலும் பக்காத்தான் – அம்னோ கூட்டணி சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்று நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் ம.இ.கா. நட்டாற்றில் விடப்படுமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஏனென்றால் பக்காத்தான் – அம்னோ கூட்டணி என்றுதான் பேச்சு அடிபடுகிறதேத் தவிர பக்காத்தான் – பாரிசான் என்று இல்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் இடம்பெற அம்னோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் பெர்சத்துவுக்குக் கீழ் ‘இரண்டாம் தாரம்’ என்ற நிலைதான் அக்கட்சிக்கு. 60 ஆண்டுகளுக்கும் மேல் முன்வரிசையில் நின்று நாட்டை நிர்வகித்த அவர்களுக்கு இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

அண்மைய காலமாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றன் பின் ஒன்றாக பல வழிகளில் வசீகரித்து தன்வசம் இழுத்து தனது பலத்தை அதிகரித்துவரும் பெர்சத்துவின் போக்கும் அம்னோவுக்கு ஒரு மிரட்டலாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில்தான் பக்காத்தானுடன் கூட்டு சேர அக்கட்சி முடிவெடுத்திருக்கக் கூடும்.

தனது பிழைப்புக்காக போராடும் அக்கட்சிக்கு, இரண்டே தொகுதிகளைக்கொண்டிருக்கும் ம.சீ.ச.வையும் ஒரே ஒரு தொகுதியைக்கொண்டிருக்கும் ம.இ.கா.வையும் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது.

இவ்விரு கட்சிகளையும் முறையே சீனர்களும் இந்தியர்களும் ஏற்கெனவே கைவிட்டுள்ள நிலையில் அம்னோ ஆதரவின்றி அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

இந்த அச்சத்தினாலோ என்னவோ பாரிசானை விட்டு ம.இ.கா. ஒருபோதும் விலகாது என்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் லாவகமாக அண்மையில் அறிவித்தார்.

பாரிசான், முஹிடின் அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வதையே தனது கட்சி விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அப்படியே பரிதாபப்பட்டு ம.இ.கா.வை அம்னோ கையோடு அழைத்துச் சென்றாலும் விக்னேஸ்வரனின் எண்ணப்படி 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கிடைப்பது வெறும் பகல் கனவாகத்தான் அமையும்.

ஏனென்றால் ம.இ.கா.வினரை விட அதிக ஆற்றலுடைய இந்திய வேட்பாளர்கள் ஜ.செ.க.விலும் பி.கே.ஆர். கட்சியிலும் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அது ஒருபுறமிருக்க பக்காத்தானில் உள்ள இதர உறுப்பு கட்சிகளும் ம.இ.கா.வை தங்களுடன் சேர்த்துக்கொள்ள விரும்புவார்களா என்று தெரியாது.

ஆக பக்காத்தான் – அம்னோ கூட்டணி உண்மையிலேயே உருப்பெருமேயானால் ம.இ.கா.வுக்கு அது மற்றொரு சோதனைகாலம்தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது.