கோறனி நச்சிலுக்கு  எதிரான போராட்டத்தில், நாம் வெற்றியா அல்லது தோல்வியா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தற்போதைய பிரதான எதிரியான கோறனி நச்சிலுக்கு எதிரான போரில் நாம் வெற்றியா அல்லது தோல்வியா?

அண்மைய வாரங்களாகச் சற்று மோசமாகி வரும் நிலைமையைப் பார்த்தால் ஒருவித அச்சம் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது.

குறிப்பாக கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் மரண எண்ணிக்கை நமக்கு மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதக் கடைசியில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேலாக இருந்த போதிலும் மரண எண்ணிக்கை குறைவுதான்.

ஆனால் கடந்த  சில நாள்களாகச் சராசரி 6,000கும் மேற்பட்டோர்

இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் அன்றாட மரண எண்ணிக்கை 45-ஐ தாண்டியுள்ளது.

இதுவரையிலான மரணங்கள் 2,000-ஐ கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை நெருங்குகிறது.

சுங்ஙை பூலோ மருத்துவமனையின் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றை கிடத்தி வைப்பதற்குக் கிடங்கிற்கு வெளியே கொண்டெய்னர்கள் எனப்படும் கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இக்கொடிய நோய்க்கு எதிராக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்ற போதிலும் அவையனைத்தும் ஆக்க கரமாக இல்லை என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மை.

தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாடு எவ்வகையில் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்ற ஐயப்பாடு பலரின் மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டைப் போல் இல்லாமல் இம்முறை பொருளாதார நடவடிக்கைகள் துளியளவும் முடக்கப்படவில்லை.

இந்நிலையில் தங்களுடைய அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள அனுமதிக் கடிதங்களுடன் ஏறக்குறைய எல்லாருமே சாலைகளில் வலம் வருகின்றனர். அதனால் வாகனங்களும் குறைந்தபாடில்லை. வாகன போக்குவரத்து வழக்கம்போல்தான் உள்ளது.

இத்தகைய சூழலில் வெறும் சாலைத் தடுப்புகள் மட்டும் கொரோனாவை கொன்றுவிடுமா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

தனிமைப்படுத்தும் மையங்களில் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என எண்ணிலடங்கா புகார்கள்.

தடுப்பூசி நடவடிக்கைகளும் கூட எதிர்பார்த்த அளவில் இல்லாமல் ஆமை வேகத்தில் நகர்கின்றன. நாட்டின் 33 மில்லியன் மக்கள் தொகையில் இன்னும் ஒரு மில்லியன் பேருக்குக் கூட தடுப்பூசி போட்டு முடிக்கப்படவில்லை என்ற குறைபாடு ஒருபுறம்.

இதற்கிடையே எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை அமல்படுத்துவதில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி.

இம்மாதிரியாக பலதரப்பட்ட குளறுபடிகளினால் தள்ளாடுகிறது தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணை.

பிரதமர் முஹிடின் தன்னைச் சுற்றிப் பல தகுதியற்ற, திறமையில்லாத அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்துக்கொண்டு அவதிப்படுவது வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரியும்.

நிலைமை வரம்பு மீறிப் போய்க்கொண்டிருப்பதால் நாட்டின் நலன் கருதி தனது நிலையிலிருந்து அவர் சற்று இறங்கி வரத்தான் வேண்டும்.

அரசியல் வேற்றுமையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு நோய்க்கு எதிரான போராட்டத்தை வழி நடத்த திறமையான வல்லுநர்களைக்கொண்டு ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும்.

மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் மற்றும் பக்காத்தான் அரசாங்கத்தில் சுகாதாரத்துறை துணயமைச்சராக இருந்த டொக்டர் லீ புன் சாய் போன்றோர் அல்லும் பகவும் அரிய பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன் வைக்கின்றனர்.

ஆனால் அரசுத் தரப்பில் யாரும் அவற்றைச் சட்டை பண்ணுவதாகத் தெரியவில்லை.

சுப்பிரமணியம் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள வேளையில், கோப்பெங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லீ ஒரு இருதய நோய் நிபுணராவார்.