பி40-இல் உள்ளவர்களும் முன்கள பணியாளர்களே!

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து மருத்துவத்துறை மற்றும் காவல்துறை போன்ற முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த 2 தரப்பினருக்கு அடுத்தபடியாக எந்தத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.

 உதாரணமாக, பி40 பிரிவில் உள்ள மக்கள், உடல் உழைப்பைக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் தான் கீழ்மட்ட வேலைகளிலும், நெருக்கமான வகையிலும் வாழ்பவர்கள். உதாரணமாக சுத்தம் செய்பவர்கள், பணியாட்களாக உணவகம் மட்டும் கடைகள், பேரங்காடிகளில் பணி புரிபவர்கள், முடி திருத்துபவர்கள் போன்றோர் முன்கள பணியாளர்களாகக் கொள்ளலாம்.

இவர்கள்தான் உழைக்கும் வர்க்கம். இவர்களுக்கு பெரிய குடும்பம் ஆனால் குறைவான வசதி கொண்ட நெருக்கமான சூழலில் வாழ்பவர்கள்.   இது போலவே வேறு தரப்பினர்களும் உள்ளனர்.

தடுப்பூசி போடுவதில் உணவக தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என முதியோர் இல்ல நடத்துநர்கள் சங்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட மையங்களில் பணிபுரிபவர்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மலேசியாவில் உள்ள அந்நிய நாட்டவர்கள் மத்தியில் அதிக அளவு தொற்று பரவியுள்ளதால் இங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலையும் சில தரப்பினர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்களுடைய துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும் ஆயுள் காப்புறுதி முகவர்களை இத்தருணத்தில் புறந்தள்ளிவிட முடியாது.

நம் நாட்டில் உள்ள 16 ஆயுள் காப்புறுதி நிறுவனங்களை பிரதிநிதித்து அன்றாடப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 76,000 முகவர்களை அரசாங்கம் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவர்களில் குறைந்த பட்சம் 50,000திக்கும் மேற்பட்டோர் இத்தொழிலை முழு நேரமாகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில பெரிய நிறுவனங்கள் கணினி வாயிலாக ஆயுள் காப்புறுதி பதிவு பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளன.

இத்தகைய நிறுவனங்களை பிரதிநிக்கும் முகவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திக்காமலேயே காப்புறுதி விற்பனைக்கான பதிவு நடவடிக்கைகளை நிறைவேற்ற இயலும்.

எனினும் இதர நிறுவனங்களை பிரதிநிதிக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் தினமும் வெளியே சென்று தங்களுடைய வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.எனவே இந்தத் தரப்பினரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான முன்னுரிமைக்குத் தகுதி பெற்றுள்ளனர் எனலாம்,

இந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு  வித்திடும் காப்புறுதி முகவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களையும் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்த்து தடுப்பூசித் திட்டத்தில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் இதில் பணியாற்றுபவர்கள்.