அரசாங்கத்தின் அசட்டுத்தனமும் மக்களின் மெத்தனப் போக்கும்

இராகவன் கருப்பையா- இன்னும் 4 மாதங்களில் நம் நாட்டில் கோறனி நச்சிலின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாவோரின் எண்ணிக்கை 26,000தை தாண்டக்கூடும்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் வழி இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது என உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவியல் சபை உறுப்பினர் முனைவர் அடிபா கூறியது நமக்கெல்லாம் பேரதிர்ச்சிதான்.

நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்க்கமான, விவேகமான முடிவுகளை எடுக்கவில்லை எனும் குறைபாடுகள் ஒரு புறம் இருந்தாலும் பொது மக்களில் ஒரு சாராரின் மெத்தனப் போக்கை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது.

எங்குச் சென்றாலும் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனும் கடப்பாடு இன்னமும் கூட நிறை பேருக்குத் தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம்.

நோன்புப் பெருநாளுக்கு முன், இரவு சந்தைகளில் கொஞ்சமும் கூடல் இடைவெளியின்றிக் கூட்டம் கூட்டமாகக் குழுமிக் கூத்தடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியானதைக் காண முடிந்தது.

பிறகு விடுமுறையைக் கழிக்க மாநில எல்லைகளைக் குறுக்கு வழிகளில் கடக்கும் பொருட்டுக் கிராமப்புறங்களில் நுழைந்தும் செம்பனைத் தோட்டங்களில் ஊடுருவியும் புழுதி படிந்த செம்மண் சாலைகள் வழியாகப் பலர் பயணித்த சேட்டைகளையும் பார்த்தோம்.

இதுவெல்லாமே அரசாங்கக் கட்டளைகளை மீறி நடந்த அநியாயங்கள்.

அன்றாட மரண எண்ணிக்கை தற்போது 100ஐத் தாண்டியுள்ள நிலையிலும் மக்களுக்குப் பீதி ஏற்படவில்லையென்றால் அவர்களுடைய ஏனோதானோ எனும் போக்கை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தலைநகருக்கு வெளியே சுங்ஙை பூலோ மருத்துவமனையிலும் செலாயாங் மருத்துவமனையிலும் சவக்கிடங்குகள் நிரம்பி வழிந்த சூழ்நிலையைச் சமாளிப்பதற்குப் பிரத்தியேகக்  கொள்கலன்கள் வரவழைக்கப்பட்ட போதே நிலைமையை மக்கள் சுதாகரித்திருக்க வேண்டும்.

ஆனால் அதுவும் இல்லை. மெத்தனப் போக்குதான் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

இவற்றுக்கெல்லாம் அரசாங்கமும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டும். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளில் எப்படியுமே குளறுபடிகள். முன்னுக்குப் பின் முரண்பாடுகள்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்கள் கழித்து முழு முடக்கம் என்ற அறிவிப்பு வெளியானது.

முழு முடக்கம் என்ற போதிலும் நாடு தழுவிய நிலையில் 95,142 நிறுவனங்கள் வழக்கம் போலச் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அனைத்துலகத் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் செய்த அறிவிப்பு ஒரு கேலிக் கூத்து.

மொத்தம் 1 மில்லியன் 5 இலட்சம் பேருக்கு வேலை நிமித்தமாக வெளியே நடமாட அனுமதி உள்ளது எனப் பாதுகாப்புத் துறையமைச்சர் இஸ்மாயில் சப்ரி செய்த அறிவிப்பு மற்றொரு கோமாளித்தனம்.

இது என்ன முழு முடக்கம் எனச் சாமானிய மக்களும் கூடக் கேள்வி எழுப்பும் அளவுக்கு அறிவிலித்தனமாகத்தான் உள்ளது இந்த விதிமுறைகள்.

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைச் சற்றும் பொருள்படுத்தாமல் அரசியல் சுயநலத்தையே முன்வைத்து, அதிகாரம் கையிலிருக்கிறது என்பதற்காக இஷ்டம் போல நடந்துகொள்ளும் போக்கை அமைச்சர்கள் முதலில் கைவிட வேண்டும்.

இத்தகைய குளறுபடிகள் தொடர்பாகச் சில அமைச்சர்களுக்கிடையே காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக இப்படியெல்லாம் விதிமுறைகளைத் தான்தோன்றித்தனமாக வசதிக்கேற்ப வளைத்து நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எண்ணினால், ‘ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு ஆகாது’ என்ற நிலைதான் கடைசியில்.