அறம் செய்ய கரம் வேண்டும்: மாணவர்கள் வேண்டுகோள் ~இராகவன் கருப்பையா

கோறனி நச்சிலின் கோரப்பிடியில் சிக்கி கடந்த 15 மாதங்களாக அவதியுறும் தரப்பினரில் பள்ளிப் பிள்ளைகளின் நிலையே சற்று மோசமாக உள்ளது.

தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமலும், பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க இயலாமலும், முறையாக தேர்வு எழுத முடியாத நிலையிலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருவது வருத்தமளிக்கும் ஒரு விசயம்தான்.

இயங்கலை வழியாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் எண்ணிலடங்கா இந்திய மாணவர்கள், குறிப்பாக பி40 தரப்பினர் கணினி வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றர் எனும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.

பொது மக்கள், அரசு சாரா இயக்கங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சில அரசியல்வாதிகளும் கூட தங்களால் இயன்ற உதவிகளை ஆங்காங்கே செய்துவருகிற போதிலும் நிறைய மாணவர்களின் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த பட்டியலில் சேர்ந்துள்ள உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் பி40 தரப்பில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  ‘டேப்லட்’ எனப்படும் வரைபட்டிகைகளை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றர்.

‘மலேசிய இந்திய மாணவர் முன்னணி’ எனும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்துள்ள இவர்கள் நாட்டிலுள்ள சுமார் 30 அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.

மலாயா பல்கலைக்கழத்தின் முதுகலை பட்டப்படிப்பு மாணவரான அர்வின் அப்பளசாமி தலைமையில் இயங்கும் இந்த முன்னணி, ‘அறம் செய் தோழா’ எனும் ஒரு பேரியக்கத்தைத் தொடங்கி குறைந்த பட்சம் 65,000 ரிங்கிட்டைத் திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிதியைக்கொண்டு சுமார் 100 வரைபட்டிகைகளை வாங்க எண்ணியுள்ள அவர்கள் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.

நம் சமூகத்தைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர்வதற்கு குறைந்த பட்சம் ஒரு வரைபட்டிகையையாவது வைத்திருக்க வேண்டும் என்று கூறும் அர்வின் தேவைப்படும் நிதியை அடுத்த மாத இறுதிக்குள் திரட்டி முடிக்க இலக்கு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கோறனி நச்சிலின் தாக்கம் நாம் யாருமே சற்றும் எதிர்பாராத ஒரு பேரிடி. இத்தகைய காலக்கட்டத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது நம் அனைவருடைய தார்மீக பொறுப்பாகும். இலையேல் அவர்களுடைய எதிர்காலம் பாலாகிவிடும் என்று கூறிய அர்வின் இந்நாட்டில் கல்வி ஒன்றே நம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றார்.

வசதி குறைந்த நம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களை அடுத்தக் கட்டத்திற்கு முன்னெடுத்து செல்வதற்கான பல்வேறுத் திட்டங்களையும் தாங்கள் வரைந்து வருவதாக அர்வின் விவரித்தார்.

அந்த மாணவர்கள் குறைந்தபட்சம் தங்களைப்போன்று பல்கலைக்கழகம் வரையில் முன்னேறுவதற்களை செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

இந்த மாணவர் முன்னணியின் ‘அறம் செய் தோழா’ இயக்கத்திற்கு நிதி வழங்க விரும்புவோர் கீழ் காணும் பொருளகக் கணக்கில் அதனை செய்யலாம்.

PERTUBUHAN BAKTI ILMUAN MALAYSIA

RHB BANK: 26261600008385