இராகவன் கருப்பையா- நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி நடவடிக்கைகள் அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்னமும் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது சராசரி விகிதம் நமது பின்தங்கிய நிலையையே காட்டுகிறது.
இருந்த போதிலும் கடந்த மாதம் வரையில் ஆமை வேகத்தில் இருந்த அந்த நடவடிக்கைகள் தற்போது கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களின் கடுமையான கண்டனத்திற்குள்ளான அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சர் கைரியும் நிலைமையை இப்போது சற்று சுமூகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
33 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டில் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளோரின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சர் அடாம் பாபா ஒரு சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை கொண்டாடுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை.
இதற்கிடையே ‘மைசெஜாத்தரா’ எனும் செயலி வழியாக தடுப்பூசிக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இன்னமும் கூட குளறுபடிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இிந்த சூழலில் கணினியோ நவீன கைத் தொலைபேசியோ இல்லாதவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக பி40 தரப்பினரில் இன்னமும் நிறைய பேர் இத்தகைய வசதிகளின்றி வாழ்கின்றனர். அப்படியே இருந்தாலும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய இயலாத பழைய கைத் தொலைபேசிகளைத்தான் வைத்திருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் தங்களை பதிந்து கொள்ளலாம் என கைரி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த யோசனையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது சந்தேகமே.
நான்கு மாதங்களுக்கு முன் முறையாக ‘மைசெஜாத்தரா’ செயலி வழியாக பதிவு செய்து இன்னமும் தடுப்பூசிக்கான தேதி கிடைக்காத நிலையில் சம்பந்தப்பட்ட மையங்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள இயலாமல் எண்ணிலடங்காதவர்கள் இன்னமும் தடுமாறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் தூரமான கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு வெளியிலும் வசிக்கும் பி40 தரப்பினரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருப்பதால் இத்தகையோர் சுகாதார நிலையங்களைத் தேடி வருவது சாத்தியமாகுமா?
எனவேதான் நாடளாவிய நிலையில் இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 5 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள் எனும் செய்தி நமக்கு வருத்தமளிக்கிறது.
சுகாதாரத்துறை துணையமைச்சர் நோர் அஸ்மி இத்தகவலை நேற்று வெளியிட்ட போது, இந்த விசயத்தில் கூடவா நாம் பின்தங்கியிருக்கிறோம் எனும் கவலை நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது.
ஆக, ஆங்காங்கே உள்ள நமது அரசு சாரா இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் தனிப்பட்டவர்களும் கூட, இவ்விசயத்தில் உதவி தேவைப்படும் நம் சமூகத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்வது அவசியம் மட்டுமின்றி கடப்பாடுமாகும்.
நம் சமூகத்தினரில் நிறைய பேர் இன்னமும் ஏழ்மை நிலையிலும் கல்வியறிவு குறைவாகவும் வெளியுலகத் தொடர்பின்றியும் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாமலும் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
சற்று சிரத்தையெடுத்து இவர்களையும் அடையாளம் கண்டு உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
தடுப்பூசித் திட்டத்திலிருந்து இத்தரப்பினர் விடுபடுவார்களேயானால் நாளடைவில் அது ஒரு பெரிய விபரீதமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.