பேரரசரின் ஆலோசனையும் அதன் வியாக்கியானங்களும்

இராகவன் கருப்பையா- 

கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேரரசர் விடுத்த ஆலோசனையைத் தங்களுடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாதிரி திரித்துக் கொண்டு பலவிதமான வியாக்கியானங்களைப் பறைசாற்றும் அரசியல்வாதிகளின் போக்கினால் பொது மக்கள் சினமடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நம் நாட்டில் ஜனநாயகம் படும் அவஸ்தைக்கு இவ்வாரம் ஒரு முடிவு ஏற்படும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்பப் பேரரசர் தனது ஆலோசனையை வழங்கியுள்ள போதிலும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சுயநலப் போக்கினால் துன்பம் இன்னமும் தொடர்கதைதான்.

உலகிலேயே நாடாளுமன்றக் கதவுகளைப் பூட்டிவைத்துக் கொண்டு ஜனநாயக அரசியல் நடத்தும் ஒரே பிரதமர் நமது மஹியாடினாகத்தான் இருக்கும்.

கோறனி நச்சிலின் தொற்றைக் காரணம் காட்டி இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி நாடாளுமன்றத்தையும் முடக்கிய அவர் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இவ்வாறு காலத்தை நகர்த்துவார் என்று தெரியாது.

அவசரக் காலம் அமலில் உள்ள போதிலும் நாடாளுமன்றம் கூடலாம் எனக் கடந்த பிப்ரவரி மாதத்தில் பேரரசர் ஆலோசனை கூறிய போதிலும் மஹியாடின் அதனைக் கொஞ்சமும் சட்டை பண்ணவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளதால் நோய்த் தொற்றுக்கான அபாயம் இல்லை. எனவே அரசாங்கம் மக்களவையைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக எவ்வளவுதான் மன்றாடியும் அதற்கெல்லாம் அவர் மசியவில்லை.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று சக ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பேரரசர் செய்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுக் கருத்துரைத்தனர்.

இருந்த போதிலும் இந்த அறிவிப்பும் கூட மஹியாடினை அசைக்கவில்லை என்றே தெரிகிறது.

நாடாளுமன்றத்தைக் கூடிய விரைவில் கூட்ட வேண்டும் என்றுதான் பேரரசர் சொன்னாரே தவிர எப்போது கூட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை எனச் சட்டத்துறையமைச்சர் தக்கியுடின் கூறிய விளக்கம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு ஒட்டுமொத்த மக்களையும் கோபமடையச் செய்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

அதற்கு ஏற்றவாறு ஒத்து ஊதினார் அனைத்துலகத் தொழில்துறையமைச்சர் அஸ்மின்.

பொருத்தமான சமயத்தில் நாடாளுமன்றம் கூடும் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்பப் பேரரசரின் ஆலோசனை அமைந்துள்ளது என்ற அவருடைய வியாக்கியானத்தில் சுயநல அரசியல் நிரம்பி வழிகிறது..

நம் நாட்டின் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றம் கூடுவது தொடர்பாகப் பேரரசர் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். அது உத்தரவாகக் கருதப்படாது.

இதனைச் சாதகமாக எடுத்துக் கொண்டுதான் ஆளும் கூட்டணி அரசியல்வாதிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

குலுக்கு சீட்டில் திடீரென அதிர்ஷ்டம் அடித்ததைப் போலத் தங்களுக்குக் கிடைத்துள்ள பண, பதவி சுகப் போகங்கள் எந்நேரத்திலும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் தினமும் உழன்று ஜனநாயகத்தை முடக்கிக் காலம் கடத்தும் இந்த அரசியல்வாதிகள் ஒவ்வொரு நிமிடமும் மக்களை அவமதிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இனவாத அரசியல், மலேசியர்களை பிளவு படுத்தி அரசியல் என்பது ஓரினத்தின் வழிதான் உருவாக இயலும் என்ற குறுகிய கோட்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இது நாட்டுக்கு ஒரு பலத்த இழப்பாகும்.