இரண்டு நாட்களுக்கு முன், உலகம் முழுவதும் BS Value OTT தளத்தில் வெளியீடு கண்ட “மேதகு” வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது உலகத் தமிழினம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகமும் மலேசியத் தமிழ்ச்சமய பேரவையும் தெரிவித்தன.
சிறந்ததொரு வரலாற்று படைப்பைத் தயாரித்து வழங்கியப் பட குழுவினர் அனைவரையும் வாழ்த்துவதாக, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன் வீராசாமி மற்றும் ஆனந்த தமிழன் முனியாண்டி இருவரும் தமது கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
முப்படை கட்டி ஆண்ட இப்பூவுலகப் புறநானூற்று நாயகனும் உலகத் தமிழினத்தின் உன்னத, ஒப்பற்ற தலைவருமான மேதகு வே பிரபாகரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கி, தமிழீழத் தாயக மண்ணின் வரலாற்றுடன், சிங்களப் பௌத்த இனவெறி அரசால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தடையங்களை, உண்மையும் நேர்மையும் மாறாது துள்ளியமாக விளக்கும் வரலாற்று ஆவணக் காவியப் படைப்பே “மேதகு” எனும் திரைப்படம் என்றார் வீ பாலமுருகன்.
அண்மைக் காலமாகத், திரைத்துறை வாயிலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் திட்டமிட்டு களங்கப்படுத்த வெளியிடப்பட்ட திரைப்படங்களான “மெட்ராசு காபே, தி பேமிலி மேன் மற்றும் ஜகமே தந்திரம்” போன்ற, தமிழர் விரோத வரலாறு திரிப்பு படங்களுக்குப் பதிலடியாக, மரியாதைக்குரிய இயக்குநர் தம்பி தி கிட்டு மற்றும் தயாரிப்பாளர் திரு குகன் குமார் கூட்டணியில் உருவானதே “மேதகு” எனும் அணையா நெருப்பு காவியம் என்றார் ஆனந்த தமிழன்.
எத்தனையோ பணம், பெயர், புகழ், திறமை கொண்ட இயக்குநர்கள் இருந்தும், எடுக்க துணியாதத் தருணத்தில் பல்வேறு தடைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதாரச் சுமைகள் என பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, வருமானத்தை இழந்தாலும் இன மானம் காக்க, “மேதகு” திரைப்படத்தை உருவாக்கியப் படக்குழுவினர் பாதிப்புக்குள்ளாகம் இருக்க, உலகத் தமிழர்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி, பார்த்து இப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அப்போதுதான், பகுதி 2, 3 என வரிசையாக இதன் தொடர்ச்சி வெளிவரச் சாத்தியமாகும். அதோடு, இதுபோன்ற தமிழினத்தின் உண்மை வரலாறுகள் திரைக்காவியங்களாகவும் ஆவணமாகவும் அனைவரிடத்திலும் சென்று சேர வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலக ஒருங்கிணைப்பாளர் வீ பாலமுருகனும் மலேசியத் தமிழ்ச்சமய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மு ஆனந்தத் தமிழனும் கூறினர்.